Published:Updated:

கோவை அரசு மருத்துவமனை `மக்களின் மருத்துவர்' ஓய்வு! - கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

மக்களின் டாக்டர் என்றழைக்கப்படும் கோவை அரசு மருத்துவமனை ஆர்.எம்.ஓ செளந்தரவேல் ஓய்வு பெற்றதற்கு, மக்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர்.

சௌந்தரவேல்
சௌந்தரவேல்

கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் சுமார் 10,000-த்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அரசு மருத்துவமனைகளைப் போலவே லஞ்சம், அலட்சியம் போன்ற வேதனைகள் கோவை அரசு மருத்துமனையிலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

செளந்தரவேல்
செளந்தரவேல்

ஆனால், அந்த வேதனைகளை எல்லாம் மருத்துவமனையின் ஆர்.எம்.ஓ என்று சொல்லப்படும் இருப்பிட டாக்டர் சௌந்தரவேல் தனது முயற்சியால் சரிசெய்து வந்தார்.

சிகிச்சையில் குறைபாடு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளிகளை வேதனைப்படுத்துவது, சிகிச்சையளிக்க மறுப்பது, உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் வரும் நோயாளிகளின் உறவினர்கள் டாக்டர் சௌந்தரவேலைத்தான் சந்திப்பார்கள்.

செளந்தரவேல்
செளந்தரவேல்

கண்ணீருடன் அவரைச் சந்திப்பவர்கள், அந்தச் சந்திப்பு முடிந்து கிளம்பும்போது கண்ணீர் துளிகள் எல்லாம், நம்பிக்கை துளிகளாக மாறி செல்வார்கள்.

சிறுவனின் மூக்குக்குள் சென்ற சிலேபி மீன்! - லாவகமாக அகற்றிய புதுக்கோட்டை அரசு மருத்துவர்

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஆர்.செளந்தரவேல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரில் 1990-ம் ஆண்டு பொது மருத்துவத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். 1991-ம் ஆண்டு அரசு மருத்துவப் பணியில் சேர்ந்த அவர், ஒத்தக்கால்மண்டபத்தை அடுத்த, அரிசிபாளையம் ஆரம்பசுகாதார நிலையத்தில் 12 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றினார்.

செளந்தரவேல்
செளந்தரவேல்

அங்கு `சின்ன டாக்டர்’ என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு மக்களுடன் நெருங்கிப் பழகினார். பின்னர், 2002-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில். உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை உதவி இருப்பிட மருத்துவ அலுவலராக பணியாற்றிய அவர், 2015-ம் ஆண்டு இருப்பிட மருத்துவ அலுவலராக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்தார்.

தனது பணிக்காலத்தில் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து சிறந்த மருத்துவருக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். தினமும் சுமார், 250 நோயாளிகளின் உறவினர்களையும், 30-க்கும் மேற்பட்ட காவலர்களையும், பல பத்திரிகையாளர்களையும், பல இயக்கங்கள், கட்சிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் சமாளித்து வந்தார். `மக்களின் டாக்டர்’ என்று பாசமாக அழைக்கப்படும் சௌந்தரவேல் நேற்றுடன் ஓய்வு பெற்றுக்கொண்டார்.

செளந்தரவேல்
செளந்தரவேல்

செளந்தரவேல் பணி நிறைவு பெறுகிறார் என்ற தகவல் தெரிந்த பல ஏழை நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் அவருக்கு கண்ணீருடன் நன்றி சொல்லி பிரியா விடை கொடுத்தனர். அதேநேரத்தில், மருத்துவமனையின் மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட எந்த ஊழியரும் செளந்தரவேல் கிளம்பும்போது இல்லை என்பது வேதனை.