Published:Updated:

`பயனில்லாத மருந்துக்கா இவ்வளவு பஞ்சாயத்துகளும்?' - தொடரும் ரெம்டெசிவிர் குழப்பம்!

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர் ( படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு )

``இதனை உயிர் காக்கும் மருந்து என்று மக்கள் நம்பிவிட்டார்கள். அதனால்தான் கொரோனா தொற்று உறுதியானாலே ரெம்டெசிவிரை வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.” என்கிறது அரசுத் தரப்பு.

எந்த நேரத்தில் சென்றாலும் ரெம்டெசிவிர் மருந்துக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கால் கடுக்க காத்துக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. வெள்ளிக்கிழமை வெளி மாவட்டங்களிலிருந்து புறப்பட்டு வந்த சிலருக்கு, சனிக்கிழமை மருந்து கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் எங்கே செல்வதெனத் தெரியாமல் பட்டினியோடு பிளாட்ஃபாரத்தில் படுத்திருந்துவிட்டு திங்கள்கிழமை அதிகாலையிலேயே வரிசையில் நிற்கிறார்கள் அவர்கள்.

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் காத்திருப்பவர்கள்
அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் காத்திருப்பவர்கள்

`ரெம்டெசிவிர் மருந்து உயிர் காக்கும் மருந்து கிடையாது; அது கொரோனா நோயாளிகள் அனைவருக்கும் தேவைப்படாது’ என்று அரசு மருத்துவர்கள் ஒருபுறம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தாலும் இந்த மருந்துக்காகக் காத்திருக்கும் வரிசை என்பது நாளுக்குநாள் நீண்டுகொண்டேதான் செல்கிறது. பெரியளவில் பயன்தராத மருந்தைத் தேடி ஏன் இத்தனை பேர் காத்திருக்கிறார்கள்?

``இதனை உயிர் காக்கும் மருந்து என்று மக்கள் நம்பிவிட்டார்கள். அதனால்தான் கொரோனா தொற்று உறுதியானாலே ரெம்டெசிவிரை வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.” என்கிறது அரசுத் தரப்பு. ``நாங்களாக இந்த மருந்தைத் தேடி வரவில்லை. இந்த மருந்து கட்டாயம் தேவை என்று தனியார் மருத்துவமனையில் சொல்கிறார்கள்” என்கின்றனர் மருந்துக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.

``அரசும் அரசு மருத்துவர்களும் இந்த மருந்து அவசியம் இல்லை என்கின்றனர். தனியார் மருத்துவமனைகள் அந்த மருந்தை வாங்கி வர வலியுறுத்துகின்றனர். பெருந்தொற்று அவசர காலத்தில் இப்படியான குழப்பமான சூழலை உருவாக்கினால், `மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபர் எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும்’ என்கிற கையறு நிலையில் இருக்கும் அவர்களின் உறவினர்கள் என்னதான் செய்வார்கள்?” என்கின்றனர் இந்த விவகாரத்தைக் கூர்ந்து கவனிக்கும் சமூக ஆர்வலர்கள்.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்

மேலும் இதுதொடர்பாக பேசிய அவர்கள், ``இது முக்கியமான மருந்து இல்லையெனச் சொல்லும் அரசு, இதனை ஏன் அரசு மருத்துவமனைகளில் விற்பனை செய்ய வேண்டும்? மத்திய, மாநில அரசுகள் இந்த மருந்தின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஏன் தொடங்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை.

``இது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் கதையைப் போலத்தான் இருக்கிறது. இதைப் பற்றி கேள்வி எழுப்பினால் `லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மருந்து தேவைப்படாது. தீவிர நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்குத்தான் பயன்படுகிறது’ என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.

அந்த வாதத்தின்படியே வைத்துக்கொண்டாலும் லேசான பாதிப்பு உள்ளவர் எப்போது வேண்டுமானாலும் தீவிர நிலையை அடையலாம் அல்லவா? அவருக்கு இந்த மருந்து உடனடியாக தேவைப்படும்பட்சத்தில் எங்கே போய் வாங்குவார்கள்? திருநெல்வேலியிலும், நாகப்பட்டினத்திலும் இருக்கும் ஒருவர் சென்னை வந்து காத்திருந்து இந்த மருந்தை வாங்கிச் செல்ல முடியுமா? அதனால்தான் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என சந்தேகப்படும் நபர்கள் அனைவருக்கும் இந்த மருந்தினை தனியார் மருத்துவர்கள் பரிந்துரைப்பதாகவும் சிலர் சொல்கின்றனர்.

அடுத்ததாக இந்த மருந்து `உயிர் காக்கும் மருந்து இல்லை’ என்கிறார்கள். அந்த வாதத்தை எப்படி எடுத்துக்கொள்வது எனத் தெரியவில்லை. ஏனெனில், கொரோனா நோயாளிகளுக்கான உயிர் காக்கும் முழுமையான மருந்து ஒன்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசி கூட 80 முதல் 90 சதவிகித அளவிலேயே பலன் தருகிறது என்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் உடல்நிலைக்கு ஏற்ப சப்போர்ட்டிவ்வான மருந்துகளையே கொடுக்கின்றனர் மருத்துவர்கள். அதில் ரெம்டெசிவிரும் ஏதோவொரு வகையில் பங்களிக்கிறது. ஆகவேதான் அந்த மருந்து பரிந்துரை செய்யப்படுகிறது.

ரெம்டெசிவிர்
ரெம்டெசிவிர்
படம்: விகடன் / வி.ஸ்ரீனிவாசுலு

`எதைத் தின்றால் பித்தம் தெளியும்? என்கிற மனநிலையில் இருக்கும் மக்களிடம் இதுகுறித்த தெளிவை உருவாக்குவது என்பது கடினமான விஷயம். இந்த மருந்தின் தட்டுப்பாட்டைச் சரிசெய்து எல்லா மருத்துவமனைகளிலும் கிடைக்கச் செய்வதுதான் இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கான ஒரே வழி. அதைச் செய்யாமல் மருந்துக்கான தட்டுப்பாடு தொடரும் பட்சத்தில் மக்கள் பதற்றம் அதிகரிக்கவே செய்யும். இதற்கு மத்தியில் இந்த அசாதாரண சூழலிலும் பணம் சம்பாதிக்க வேண்டும் நினைக்கும் ஈவு இரக்கமற்ற கும்பல் கூடுதல் விலை வைத்து ரெம்டெசிவிர் மருந்தினை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதும் அந்தப் பதற்றத்தை அதிகரிக்கவே செய்யும்.

எனவே இந்த மருந்தினை எல்லா மாவட்டங்களிலும் கிடைக்கச் செய்ய வேண்டும். போதுமான மருந்துகள் இல்லையெனில் ஆன்லைன் மூலமாகப் பதிவு செய்யச் சொல்லிச் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கே மருந்துகளை அனுப்ப ஏற்பாடு செய்யலாம். அதைவிடுத்து மக்களை அலைக்கழிப்பது சரியான நடைமுறை கிடையாது. இன்று பொறுப்பேற்கும் தி.மு.க அரசு இதனைச் செய்ய வேண்டும்” என்றனர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்
விழுப்புரம்: கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர்; 19,000 ரூபாய்! - சிக்கிய மருத்துவர் உள்ளிட்ட இருவர்

இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ``ஓரிரு நாள்களில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்படும். மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தல்படி திருச்சி, மதுரை, கோவை, உள்ளிட்ட பெரு நகரங்களில் இந்த மருந்து விற்பனையைத் தொடங்குவதற்குத் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்றதும் இதுகுறித்த முழுமையான அறிவிப்பு வெளியாகும். இப்போதே நிறைய மோசடிகள் நடக்கின்றன. ஆகையால், ஆன்லைனில் பதிவு செய்து விநியோகம் செய்வது கடினமான விஷயம்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு