Published:Updated:

ஆன்லைன் பொருள்கள் டெலிவரியின் மூலம் கொரோனா தொற்று ஏற்படுமா... மருத்துவர்கள் சொல்வது என்ன?

டெலிவரி
டெலிவரி

கூரியர் முதல் அமேசான் டெலிவரி வரை நமக்குத் தேவையான பொருள் நம்மிடம் வந்து சேர்ந்தவுடன், அந்த டெலிவரி நபர் நம்மிடம் அவரின் போனிலோ நேரிலோ டிஜிட்டல் கையெழுத்து வாங்குவார்.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கல்வி நிலையங்கள், தியேட்டர்கள் எனப் பொது மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும், `வீட்டிலிருந்து அலுவலக வேலை' என்று பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் பத்திரமாக வீட்டுக்குள் பாதுகாப்பாக இருப்பதையே விரும்புகின்றனர். இதன் காரணமாக ஆன்லைனில் பொருள் வாங்குவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் மக்களைச் சந்திப்பதைத் தவிர்க்க முடியும் என்பதால், அமேசான், ஃப்ளிப்கார்ட் என அனைத்து ஆன்லைன் வர்த்தகத் தளங்களின் தேவை அதிகரித்துள்ளது.

டெலிவரி
டெலிவரி

கூரியர் முதல் அமேசான் டெலிவரி வரை நமக்குத் தேவையான பொருள் நம்மிடம் வந்து சேர்ந்தவுடன், அந்த டெலிவரி நபர் நம்மிடம் அவரின் போனிலோ நேரிலோ டிஜிட்டல் கையெழுத்து வாங்குவார். அல்லது தாளில் கையெழுத்துப் போட வேண்டும். டிஜிட்டல் கையெழுத்து வாங்கப்படும் கேட்ஜெட்டோ, பேப்பரோ பலரது கைபட்டு வந்தவை. கைச் சுத்தம் கொரோனாவுக்கு முக்கியம் என்பதை அறிவோம்.

பலபேர் கைப்பட்டு வரும் இந்தப் பேப்பரோ, கேட்ஜட்டோ கொரோனாவைப் பரப்புமா... என்ற கேள்விக்கு பதிலளித்த நுண்ணுயிரியல் நிபுணர் டாக்டர் கே. தினேஷ், ``இதன் மூலம் நோய்த் தொற்று வர அதிக வாய்ப்பு உள்ளது. கொரோனா வைரஸ் நீர்த்திவலைத் தொற்று (droplet infection) மூலமாகத்தான் பரவுகின்றது. இருமல், தும்மல் ஏற்படும்போது ஒரு மீட்டரில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் வைரஸ் சென்று படிகின்றது. வைரஸ் சுற்றுச்சூழலில் 24 மணி நேரம் இருக்க வல்லது. அந்த 24 மணி நேரத்தில் அந்த வைரஸ் படிந்த பொருள்களைத் தொட நேர்கையில் வைரஸ் நம் கையை அடைகின்றது.

பின் நாம் கண், மூக்கு, முகம் ஆகிய பகுதிகளைத் தொடும்போது நமக்கு தொற்று ஏற்படுகிறது. இதன் பெயர் சமுதாயத் தொற்று (community spread) ஆகும். ஆனால், தற்போது பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பயணம் செய்தவர்களிடம் மட்டும்தான் தொற்று காணப்படுகிறது. அந்த நிலையில்தான் நாம் தற்போது உள்ளோம். தற்போதிலிருந்தே பாதுகாப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தால் அடுத்த நிலையான சமுதாயத் தொற்று வராமல் தடுக்க முடியும். வைரஸ் மக்கள் சமுதாயத்தைப் பாதிக்கும் அளவுக்கு வந்துவிட்டால், அமேசான் டெலிவரி பண்ணும் அந்த நபருக்கு தொற்று இருந்தால், அவர்கள் இருமினால், தொற்று பேப்பரில் படிந்து, நம்மைத் தாக்க வாய்ப்பு உள்ளது.

டாக்டர் கே. தினேஷ்
டாக்டர் கே. தினேஷ்

இவை அனைத்தையும் தவிர்த்து அடிக்கடி கை கழுவுதல் அவசியம். கைகழுவும் அடிப்படியான முறையைப் பின்பற்ற வேண்டும். மற்றவர்களிடமிருந்து தள்ளி இருப்பது, கூட்டங்களைத் தவிர்ப்பது ஆகியன அவசியம். முக கவசத்தைப் பொறுத்தவரை பலவகைகள் உள்ளன. அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்தும் முக கவசங்கள் 16 - 18 மைக்ரான் அளவு ஆகும். இந்த முக கவசத்துக்குள் வைரஸ்கள் நுழைய முடியும். N 95 முக கவசம் சிறந்தது. ஆனால், அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று கட்டாயமில்லை. பாதிப்பு ஏற்பட்டவர்கள், வயதானவர்கள் அணிந்தால் போதும். நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் அணியத் தேவையில்லை" என்று கூறினார்.

மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அமேசானில் பொருள் வாங்குகிறார்கள். ஆனால், அங்கு வேலை செய்பவர்கள், ``மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிர்மறையாக நாங்கள் செய்கின்றோம். அனைவரும் வீட்டில் பத்திரமாக இருக்கின்றனர். இவ்வாறு ஒரு நோய்த்தொற்றுப் பரவும்போது, வேலை பார்ப்பது எங்கள் உடல் மற்றும் மனநிலையை வெகுவாகப் பாதிக்கின்றது" என்று கவலைப்படுகின்றனர். அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலோ, தனிமைப்படுத்தப்பட்டாலோ, அவர்களுக்கு சம்பளத்துடன்கூடிய இரண்டு வார விடுப்பு அளிக்கலாம் என்று அறிவித்துள்ளனர்.

எந்த வேலை செய்பவரானாலும் பாதுகாப்பு முக்கியம் பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு