Published:Updated:

கொரோனா தொற்று... இரண்டாவது முறை ஏற்பட வாய்ப்புள்ளதா?

கொரோனா தொற்று
கொரோனா தொற்று ( Pixabay )

கொரோனா தொற்றைப் பொறுத்தவரை மறு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஒருவேளை ஏற்பட்டாலும் அதன் அறிகுறிகள் முந்தைய தொற்றுபோல்தான் இருக்கும்.

ஒருமுறை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர் இரண்டாம் முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி, பலருக்கும் உள்ளது. தொற்று நோயியல் மருத்துவர் சுரேஷ் குமார், அது குறித்த விளக்கம் தருகிறார்.

"நான் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். இந்த நான்கு மாதங்களில் 2,000 பேரை பார்த்துள்ளேன். அவர்களில் கொரோனா தொற்று ஏற்பட்ட யாருக்கும், இதுவரை மறு தொற்று ஏற்படவில்லை. சென்னை கார்ப்பரேஷன் அறிக்கையின்படி, இதுவரை இரண்டு பேருக்கு மறுதொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

தொற்று நோய் மருத்துவர் சுரேஷ்குமார்
தொற்று நோய் மருத்துவர் சுரேஷ்குமார்

பொதுவாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது அறிகுறிகள் இல்லாமல், PCR பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட்டுடன் இருப்பார்கள். அவர்கள் அடுத்த 7 முதல் 10 நாள்கள் அறிகுறிகள் அற்று நன்றாக இருந்துவிட்டு, அதற்குப் பின்னர் அவர்களுக்குக் காய்ச்சல், இருமல், உடல்வலி என இரண்டு, மூன்று அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மறுமுறை PCR பரிசோதனை செய்யலாம்.

மறு தொற்றை உறுதிசெய்ய, வைரஸின் மரபணுவை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதை 'நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃப்ரீக்வன்ஸி (Next-generation frequency)' என்று கூறுவார்கள். இதில், முதலில் தொற்று ஏற்படுத்திய வைரஸ் மற்றும் இரண்டாம் முறை தொற்று ஏற்படுத்திய வைரஸ் இரண்டுக்குமான வடிவமைப்பு வேறு வேறாக இருந்தால், அதை மறு தொற்று என்று உறுதிசெய்யலாம்.

கொரோனா:`1,077 பேருக்கு செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து!’ - பாசிட்டிவ் பகிரும் ஆக்ஸ்போர்டு

இந்த முறையானது, இந்தியாவில் ஆராய்ச்சியாளர்களால் மட்டுமே ஆராய்ச்சிக்காகக் கையாளப்படுகிறது. மருத்துவமனையில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபிரீக்வன்ஸி செய்யப்படுவதில்லை.

பொதுவாக, நமக்கு ஒரு தொற்று ஏற்பட்டால், அந்தத் தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி குறைந்தது மூன்று மாதங்கள் நம் உடலில் இருக்கும். உதாரணத்துக்கு ஸ்வைன் ஃபுளூ ஒருவருக்கு ஏற்பட்டால், அப்போது உடலில் தோன்றிய நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக, அந்தத் தொற்று மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு மீண்டும் அவருக்கு ஏற்படுவது அரிதே. இன்ஃபுளூயென்ஸா ஏ, பி, சி தொற்றில் ஏதோ ஒரு தொற்று ஏற்பட்டால்கூட, மற்ற இன்ஃபுளூயென்ஸாக்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி பாதுகாப்பும் கிடைக்கும். அதனால் தொற்று ஏற்படுவது அரிதே. இதுவே டெங்கு பாதிப்பு மறுமுறை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். மேலும், முதல் தொற்றைவிட அடுத்த தொற்று வீரியம் வாய்ந்ததாக இருக்கும்.

Corona
Corona

கொரோனா தொற்றைப் பொறுத்தவரை மறு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஒருவேளை ஏற்பட்டாலும் அதன் அறிகுறிகள் முந்தைய தொற்றுபோல்தான் இருக்கும். என்றாலும், இரண்டாம் முறை தொற்று ஏற்படும்போது அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும். முந்தைய தொற்றால் உடலில் ஏற்பட்டிருக்கும் எதிர்ப்பு சக்தி கொஞ்சமாவது நமக்குப் பாதுகாப்பு அளிக்கும்.

நுரையீரல் பாதையில் தொற்று இரண்டாம் முறை ஏற்பட்டாலும், தீவிரமாக வாய்ப்பில்லை. மூன்றாம், நான்காம் முறை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அரிது.

`கொரோனா பயம்... இப்போது விரக்தி கலந்த கோபமாக மாறி வருகிறது!'- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

கொரோனாவைப் பொறுத்தவரை, இரண்டாம் முறை தொற்று அனைவருக்கும் ஏற்படுவதில்லை. எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், டயாலிசிஸ் சிகிச்சையைத் தொடர்ந்து மேற்கொள்பவர்கள், கீமோதெரபி செய்துகொள்ளும் நோயாளிகள், தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றுவரும் நோயாளிகளுக்கு இரண்டாம் முறை தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Corona virus
Corona virus
Unsplash

எதிர்ப்பு சக்தியை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, T செல் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி. இரண்டாவது, B செல் மூலம் கிடைக்கும் எதிர்ப்பு சக்தி. B செல் ஆன்டிபாடியை உற்பத்தி செய்கின்றது. எப்போதுமே ஆன்டிபாடியால் ஏற்படும் எதிர்ப்பு சக்தி சில காலமே இருக்கும். அதுவே T செல் மூலம் ஏற்படும் எதிர்ப்பு சக்தி நிலைத்திருக்கும். ஒருவருக்கு T செல் மூலம் வரும் எதிர்ப்பு சக்தி நன்கு இருந்தால், ஆன்டிபாடி அளவு குறைந்தாலும், T மெமரி செல்கள் ஆன்டிபாடியை உற்பத்திசெய்ய வாய்ப்புள்ளது. T செல் மூலம் வரும் எதிர்ப்பு சக்தி நன்கு இருந்தால், மறுபாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் குறைவு.

முன்னர், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களுக்கு எதிர்ப்புசக்தி ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய ஆன்டிபாடி பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவின்படி, கொரோனா ஆன்டிபாடிகளின் அளவு இரண்டு முதல் மூன்று மாதங்களில் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. என்றாலும், அந்த இரண்டு, மூன்று மாதங்களில் மறு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு" என்று கூறினார் மருத்துவர் சுரேஷ்குமார்.

அடுத்த கட்டுரைக்கு