Published:Updated:

கொரோனா vs சாதாரண சளி, காய்ச்சல் - என்ன செய்ய வேண்டும் நாம்?

கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, மூச்சுத்திணறல் என இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அறிகுறிகள் ஏற்பட்டால்கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

தினந்தினம் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பரவிவரும் இந்நேரத்தில், உடம்பில் கொஞ்சம் டெம்பரேச்சர் உயர்ந்தால்கூட பயம் தொற்றிக்கொள்கிறது. கொரோனா வைரஸ் நமக்கு அறிமுகமாவதற்கு முன்பும் நமக்கு மற்ற நுண்ணுயிரிகளால் சளி, காய்ச்சல், இருமல், த்ரோட் இன்ஃபெக்‌ஷன் போன்ற உடல்நலப் பிரச்னைகள் எல்லாம் ஏற்பட்டுக்கொண்டுதான் இருந்தன.

Corona
Corona
Pixabay

ஆனால், அதே பிரச்னைகள் இப்போது ஏற்படும்போது, நம்மால் பயம்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. காரணம்... இந்தச் சாதாரண சளி, காய்ச்சல், இருமலே கொரோனாவிற்கான முக்கிய அறிகுறிகளாகவும் சொல்லப்படுவதால்.

குறிப்பாக, கடந்த சில வாரங்களில் பெரும்பாலானோருக்கு த்ரோட் இன்ஃபெக்‌ஷன், காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள் அதிகமாக ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இவை கொரோனாவின் தாக்கமா, இல்லை, இந்த சீஸனில் ஏற்படும் வழக்கமான உடல்நல மாறுபாடா என்பது குறித்து தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநரும் மருத்துவருமான குழந்தைசாமியிடம் பேசினோம்.

பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி
பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் குழந்தைசாமி

கொரோனா Vs சரி (SARI)

"நமக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகளில் 'சரி' (SARI) என்றொரு வகை இருக்கிறது. அதாவது, 'சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்‌ஷன்' (Severe Acute Respiratory Infection). இதன் அறிகுறிகளும் சாதாரண காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல்தான். நம்மைச் சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட வைரஸ்களால் இது ஏற்படுகிறது. SARI யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதற்கென்று குறிப்பிட்ட சீஸன் என்றெல்லாம் எதுவுமில்லை. எந்தக் குறிப்பிட்ட நோய்க்கிருமியால் நமக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறதோ அந்த நோய்க்கிருமியின் தாக்கத்தைப் பொறுத்து நோயின் வீரியமும் அதிகமாக இருக்கும். ஏற்கெனவே நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை, மார்புச்சளி, ஆஸ்துமா போன்றவை இருக்கும் ஒருவருக்கு இந்த இன்ஃபெக்‌ஷன் ஏற்படும்பட்சத்தில் அவருக்கு அதிதீவிர மூச்சுத்திணறலும் ஏற்படலாம்.

சி.டி ஸ்கேன், ஆர்.டி.பி.சி.ஆர்... கொரோனாவைக் கண்டறிய சிறந்த பரிசோதனை எது? #ExpertOpinion

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படிக் கண்டறிவது?

Corona Test
Corona Test

எனவே, உங்களுக்கு சாதாரண காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அது கொரோனாவாகத்தான் இருக்கும் என்று அர்த்தமில்லை. அது SARI இன்ஃபெக்‌ஷனாகவும் இருக்கலாம்.

என்றாலும், கொரோனா காலத்திற்கு முன்பு நமக்கோ, குழந்தைகளுக்கோ லேசான காய்ச்சல், சளி, இருமல் வந்தால் பெரும்பாலும் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டோம். குழந்தைகளை வழக்கம்போல் பள்ளிக்கு அனுப்பியிருப்போம். நாமும் ஒரு பாராசிட்டமால் மாத்திரையை விழுங்கிவிட்டு வழக்கம்போல் அலுவலக வேலைக்குச் சென்றுகொண்டிருந்தோம். இந்தக் காய்ச்சல், இருமல், ஜலதோஷமெல்லாம் 'மாத்திரை சாப்பிட்டா ஒரு வாரத்துல சரியாயிடும்; மாத்திரை சாப்பிடலைன்னா ஏழு நாள்ல சரியாயிடும்' என்ற ரேஞ்சில்தான் ஓடிக்கொண்டிருந்தோம். கொரோனா நமக்கு அறிமுகமான பிறகு காய்ச்சல், சளி லேசாக வந்தாலே ஒரு பயமும் எச்சரிக்கை உணர்வும் ஏற்படுகிறது. சொல்லப்போனால் இது தேவையான ஒன்றுதான்.

``பிரணாயாமத்தால் இசிஜி-யில் ஏற்பட்ட முன்னேற்றம்!" - இயற்கை மருத்துவர் தீபாவின் கொரோனா வார்டு அனுபவம்

கொரோனா தீவிரமாகப் பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஒருவேளை உங்களுக்கு லேசான காய்ச்சல், தொண்டை வலி, இருமல், சளி, மூச்சுத்திணறல் என இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அறிகுறிகள் ஏற்பட்டால்கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள். டெஸ்ட் எடுத்தால் மட்டுமே உங்களுக்கான காய்ச்சலும் இருமலும் கொரோனாவா இல்லை வேறு ஏதாவது காரணங்களால் ஏற்பட்ட அறிகுறிகளா என்பதை உறுதியாகக் கூற முடியும்.

corona
corona

அதனால் கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏதாவது தென்படும் பட்சத்தில் உடனடியாகக் கொரோனா டெஸ்ட் செய்துவிடுங்கள். டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ் என்று வந்தால் கொரோனா தொற்றுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். ரிசல்ட் நெகட்டிவ் என்று வரும் பட்சத்தில் எதனால் உங்களுக்குக் காய்ச்சல், இருமல் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வருமுன் காப்போம்!

கபசுரக் குடிநீர்
கபசுரக் குடிநீர்

'சாதாரண சளி, காய்ச்சலா கொரோனாவா' என்ற குழப்பத்துக்கும் பிரச்னைக்கும் சுலபமான ஒரு தீர்வு இருக்கிறது. அது, வரும் முன் காப்பது. இந்தச் சூழ்நிலையில், சாதாரண சளி, இருமல், காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கு உங்களை ஆளாக்காமல் தற்காத்துக்கொள்வது உங்கள் குழப்பத்துக்கும் அச்சத்துக்கும் சிறந்த தீர்வு.

இந்நேரத்தில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியைப் பெருக்கிக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். 14 நாள்கள் கபசுரக் குடிநீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை முதல் 7 நாள்கள் தொடர்ச்சியாகவும், பின்பு இரண்டு நாள்கள் இடைவெளிவிட்டு அடுத்த 7 நாள்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் உப்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. வெந்நீரில் மஞ்சள் தூள் கலந்து ஆவிபிடிக்கலாம். இவற்றையும் மீறி லேசாகக் காய்ச்சல், சளி ஏற்பட்டால்கூட அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது" என்றார் மருத்துவர் குழந்தைசாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு