Published:Updated:

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் கொரோனா காலத்தில் கவனிக்க வேண்டியவை!

 அறுவைசிகிச்சை
அறுவைசிகிச்சை

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட, கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 75%-100% பேருக்கு நிமோனியா பிரச்னை ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தாலும், அதில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இன்னொரு பக்கம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அச்சத்துக்கு உரிய வகையில் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

Coronavirus
Coronavirus

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள், நீண்டகால உடல் பிரச்னைகள் உள்ளவர்கள் என, இவர்கள் எல்லோரும் கோவிட்-19 பாதிப்புக்கு எளிதாக இலக்காகக்கூடியவர்கள் என்பதால், இவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிக அழுத்தம் கொடுத்து வலியுறுத்தப்படுகின்றன. அந்த வகையில், உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்கள் கொரோனா பரவலிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை குறித்து விளக்குகிறார் கல்லீரல் மாற்றுசிகிச்சை மருத்துவர் ஜாய் வர்கீஸ்.

இந்தியக் கொரோனா நோயாளிகளில் 80% பேர் அறிகுறிகளற்ற ஏசிம்ப்டமடிக்... ஏன், என்ன, எப்படி? #VikatanExplainer

''10 வருடங்களுக்கு முன்னர் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. இன்றைய காலகட்டத்தில் அரசாங்கத் திட்டங்கள் இருப்பதால், வருடத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் 250 - 300 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றலை ஒடுக்கும் மருந்துகள் எடுத்துக்கொள்வது அவசியம். அறுவை சிகிச்சை முடிந்தபோது அவர்களுக்கு அளிக்கப்படும் நோய் எதிர்ப்பாற்றலை ஒடுக்கும் மருந்துகளின் அளவு, சில மாதங்களுக்கு அதிகமாக இருக்கும். வருடங்கள் செல்லச் செல்ல மருந்தின் அளவு குறைக்கப்படும்.

மருத்துவர் ஜாய் வர்கீஸ்
மருத்துவர் ஜாய் வர்கீஸ்

இந்த லாக்டௌனில் தொடர் சிகிச்சைகள் பல தடைபட்டிருக்கின்றன. சிலருக்கு, லாக்டௌன் தொடங்குவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் கல்லீரல் அறுவைசிகிச்சை நடந்திருக்கலாம். சிலருக்கு, மூன்று மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சை நடந்திருக்கலாம்.

இவர்களுக்கு அளிக்கப்படும் நோய் எதிர்ப்பாற்றல் ஒடுக்கும் மருந்துகளின் அளவு அதிகமாக இருக்கும். ஆகையால் இவர்கள் வெளியில் செல்லக்கூடாது. அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இவர்களின் உடல்நிலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, வீட்டில் மற்றவர்கள் வெளியில் செல்லும் வேலைகளைச் செய்ய வேண்டும்.

பொதுவாக, உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்கள் அனைவரும் எக்காரணம் கொண்டும் இப்போது வெளியில் செல்லக் கூடாது. தவிர்க்க முடியாத நிலையில், கட்டாயமாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கைகளைச் சுத்தப்படுத்துவது, மருந்துகளை முறையாகத் தவறாமல் எடுத்துக்கொள்வது எனப் பின்பற்ற வேண்டும்.

corona
corona

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டவருக்கு ஒருவேளை கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால், அவர் மருத்துவமனைக்குச் சென்றுவிடாமல், அவருக்கு அறுவை சிகிச்சையளித்த மருத்துவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆலோசனை பெற வேண்டும். கொரோனா தொற்று பரிசோதனைக்காக மாதிரி கொடுக்க வேண்டும் என்றாலும் அதை வீட்டிலேயே எடுக்கச் செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகளை வாட்ஸ்அப்பில் அனுப்பி காணொலி மூலம் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம்.

`பதஞ்சலியின் Coronil-ல் கொரோனா என்ற வார்த்தையே இல்லை!' - தடைக்கான காரணம்

உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளவர்கள். அதனால் இந்தக் கொரோனா தொற்று முடியும்வரை அதிக கவனத்துடன் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார் மருத்துவர் ஜாய் வர்கீஸ்.

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை
மாதிரிப் புகைப்படம்

உலகளவில் செயல்பட்டுவரும் 'தி ட்ரான்ஸ்ப்ளான்ட் சொசைட்டி (The Transplantation Society)' அமைப்பு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் மற்றும் கொரோனா காலம் பற்றிய சர்வதேச தரவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி...

* உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட, கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 75%-100% பேருக்கு நிமோனியா பிரச்னை ஏற்பட்டுள்ளது.

* உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்ட கொரோனா நோயாளிகளில் உயிரிழப்பு என்பது, அதிக வயதுடையவர்களுக்கு ஏற்பட்டுள்ளது (வயது 50-59: 1.3%, 60-69: 3.6%, 70-79: 8%, 80+: 14.8%).

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை

* உயிரிழப்பைப் பொறுத்தவரை, நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு அதிகபட்சமாகவும், கல்லீரல், இதய மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்சமாகவும் ஏற்பட்டிருக்கிறது.

* ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் இயல்புக்குக் கீழ் குறையும் லிம்போசைட் (lymphocyte) பிரச்னை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட கொரோனா தொற்றாளர்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புண்டாகியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு