Published:Updated:

கொரோனா நோயாளிகளுக்கு தைராய்டு பாதிப்பு - ஏன்? மருத்துவர் விளக்கம்

தைராய்டு
தைராய்டு

தைராய்டு ஹார்மோனின் அளவுகள் சீராக இருந்தால்தான், உடல் இயக்கம் சீராக இருக்கும். இல்லையென்றால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல் ஏற்படுவதுடன் உடல் பருமனில் தொடங்கி மூட்டுவலிவரை பல்வேறு வாழ்வியல் பாதிப்புகள் ஏற்படும்.

மிழகத்தில் ஒவ்வொருநாளும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினந்தினம் கொரோனா பற்றிய புதுப்புது தகவல்கள் வெளிவந்து நம்மைத் திடுக்கிட வைக்கின்றன.

தைராய்டு
தைராய்டு
விகடன்

ஆரம்பத்தில், காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மட்டுமே கொரோனாவின் அறிகுறிகள் என்று நினைத்து வந்தோம். தற்போது கெண்டைக்கால் வலி, வயிற்றுவலி, உடல்வலி, மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொண்டைக் கரகரப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் ஏற்படும் தடிப்புகளும், அரிப்பும்கூட கொரோனா அறிகுறிகள் என்று கூறப்படுகின்றன. இது போன்ற செய்திகள் நம்மை அதிர்ச்சியின் ஆழத்திற்கே கொண்டு சென்றுகொண்டிருக்கின்றன.

இந்த வகையில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தைராய்டு பிரச்னை ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். கொரோனா தொற்று ஏற்பட்ட சிலரைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவர்களுக்கு தைராய்டு பிரச்னை ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் ஸ்ருதியிடம் பேசினோம்.

மருத்துவர் ஸ்ருதி
மருத்துவர் ஸ்ருதி

தைராய்டு சுரப்பி:

"நம் கழுத்தின் முன்பகுதியில் பட்டாம்பூச்சி போன்ற வடிவத்தில் இருக்கும் நாளமில்லா சுரப்பிதான், தைராக்சின் (T4), ட்ரை அயடோதைரோனின் (T3) என்னும் தைராய்டு ஹார்மோன்களை சுரப்பதற்குத் துணைபுரிகிறது. நம் உடலிலுள்ள பல உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும், ரத்த ஓட்டத்தின் வாயிலாக தைராய்டு ஹார்மோன்கள் சென்றடைவதோடு, வளர்சிதை மாற்றங்களுக்குப் பெரிய அளவில் உதவுகிறது. இந்த ஹார்மோனின் அளவுகள் சீராக இருந்தால்தான், உடல் இயக்கம் சீராக இருக்கும். இல்லையென்றால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல் ஏற்படுவதுடன் உடல் பருமனில் தொடங்கி மூட்டுவலி வரை பல்வேறு வாழ்வியல் பாதிப்புகள் ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் அதிகரிக்கும்.

கொரோனா Vs தைராய்டு பிரச்னை:

கொரோனா பாதித்தவர்களுக்கு தைராய்டு பிரச்னை ஏற்படும் என்று தற்போது கூறப்படுவது உண்மைதான். கொரோனா மட்டுமல்ல, வேறு எந்த ஒரு வைரஸினால் தாக்கப்பட்டாலும் நம் தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டு இந்தச் சுரப்பியைச் சுற்றிலும் வீக்கம் ஏற்படும். இந்த நிலைக்கு 'Subacute Thyroiditis' என்று பெயர்.

ஒருவருக்கு Subacute Thyroiditis ஏற்பட்டால் தொடையில் அதிக வலி ஏற்படும். தைராய்டு சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு எச்சில் விழுங்க முடியாமலும், சாப்பிட முடியாமலும் போகலாம். தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் வெளியேறி ஹைப்பர் தைராய்டு பிரச்னையையும் ஏற்படுத்தலாம்.

corona virus
corona virus
G4 இன்ஃபுளுயன்ஸா வைரஸ்... கொரோனாவைப்போல் பரவுமா?

வகைகள்:

தைராய்டு பிரச்னை பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism) மற்றொன்று ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyroidism).

ஹைப்போ தைராய்டிசம் (Hypothyroidism)

தைராய்டு
தைராய்டு

தைராய்டு சுரப்பியில் சுரக்கப்படும் தைராக்சின் (T4), ட்ரை அயடோதைரோனின் (T3) ஹார்மோன்கள் உடலின் வளர்ச்சிக்குத் தேவைப்படும் அளவைவிடக் குறைவாக உற்பத்தியானால் அதற்கு ஹைப்போ தைராய்டிசம் என்று பெயர்.

ஹைப்போ தைராய்டிசத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் மந்தமான நிலையிலேயே காணப்படுவார்கள். இவர்களுக்கு உடல் சோர்வு, வறண்ட சருமம், மலச்சிக்கல், எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி இருப்பது, முடி உதிர்வு, மாதவிடாய்க் கோளாறு, காரணமின்றி அதிகமாகக் கோபப்படுவது, எரிச்சல் அடைவது, உடல் எடை அதிகரிப்பது, கருத்தரிப்பதில் பிரச்னை, தசைப் பிடிப்பு பலவீனம் அடைவது, குரலில் மாற்றம், முடியின் அடர்த்தி குறைவது போன்ற பல பிரச்னைகள் உண்டாகும்.

`பதஞ்சலியின் Coronil-ல் கொரோனா என்ற வார்த்தையே இல்லை!' - தடைக்கான காரணம்

ஹைப்பர் தைராய்டிசம் (Hyperthyroidism)

தைராய்டு
தைராய்டு
விகடன்

தைராக்சின் (T4), ட்ரைஅயடோதைரோனின் (T3) ஹார்மோன்கள் தேவைக்கும் அதிகமாகத் தைராய்டு சுரப்பியில் உற்பத்தியாகும் நிலை ஹைப்பர் தைராய்டிசம் எனப்படும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் அதீத சுறுசுறுப்போடு இருப்பார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். பதற்றத்தோடு பேசுவார்கள். அதீத பசி மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் அதிகமான உதிரப்போக்கு இருக்கும்.

இந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம்... ஓர் அலெர்ட்!

தீர்வு என்ன?

Medicine
Medicine
Representational Image

கொரோனா வைரஸ் அல்லது வேறு ஏதாவது வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொண்டையில் வீக்கம், வலி இருந்தால் உடனடியாகத் தைராய்டு பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஒருவேளை பிரச்னை இருப்பின் அதற்கேற்ப சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

தைராய்டு பிரச்னைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை யாருக்கு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஒருவருக்கு ஏற்பட்டுள்ள தைராய்டு பாதிப்பின் அளவையும் தன்மையையும் பொறுத்து அவர் எத்தனை நாள்களுக்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர்கள் பரிசோதனையின் அடிப்படையில் முடிவு செய்வார்கள். அதனால் கழுத்தின் முன்பகுதியில் வலி, வீக்கம் ஏற்பட்டு எச்சில், உணவு விழுங்க முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாகத் தைராய்டு டெஸ்ட் எடுத்துப் பார்த்துவிடுவது நல்லது" என்றார் மருத்துவர் ஸ்ருதி.

அடுத்த கட்டுரைக்கு