Published:Updated:

`கொரோனா அமெரிக்காவின் ஆயுதமா?..1981 நாவல்!’ - #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #FactCheck

கொரோனா
கொரோனா ( Freepik )

வுகான் நகருக்கு வெளியில் இருக்கும் ஒரு ஆய்வுக்கூடத்தில் அந்த உயிரி ஆயுதம் (வைரஸ்) தயாரிக்கப்பட்டதால், அதற்கு `Wuhan 400' என்று பெயரிடப்பட்டதாகவும் நாவலில் கூறப்பட்டிருக்கும்.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலக அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு கண்டறியப்பட்ட சீனா மெல்ல மீண்டெழுந்து வந்தாலும், பாதிப்புகள் இத்தாலியையும் அமெரிக்காவையும் புரட்டிப் போட்டு வருகின்றன. இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 600-ஐக் கடந்திருக்கும் நிலையில், தமிழகத்திலும் 35 ஆக அதிகரித்திருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கும் நிலையில், உலக அளவில் பேசுபொருளாக இருக்கும் கொரோனாதான் சமூக வலைதளங்களிலும் ஹாட் டாபிக்.

Vikatan Fact Check
Vikatan Fact Check

கொரோனா குறித்த பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் சூழலில், அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற நெருக்கடியான சூழல்களில் போலியான\பொய்யான தகவல்கள் பாதிப்புகளின் வீரியத்தை அதிகரிக்கக் கூடும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிய களமிறங்கினோம். தேயிலையை மையமாக வைத்து வைரலாகி வரும் ஒரு தகவலை எடுத்துக்கொண்டோம்.

`12 மணிநேர ஆயுட்காலம்...27 டிகிரி செல்சியஸ்!’- #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #Factcheck

அமெரிக்காவின் திட்டமிட்ட வணிக நடவடிக்கையா கொரோனா என்ற ஆயுதம்? என்ற பெயரில் 1981-ம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் டீன் கூன்ட்ஸ் (Dean Koontz) எழுதிய `The Eyes of Darkness' என்ற புத்தகத்தில் இடம்பெற்ற சில வரிகளை மேற்கோள் காட்டி ஒரு தகவல் பரவி வருகிறது. அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் சில வரிகளையும் குறிப்பிட்டு இந்தத் தகவலை சிலர் உண்மை என வாதிடுகிறார்கள். முழுக்க முழுக்க கற்பனையின் அடிப்படையில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தில், இடம்பெற்றுள்ள டூம்பே (Doombey) எனும் கதாபாத்திரம் `வுகான் 400’ என்ற உயிரி ஆயுதத்தை சீனா எப்படி அமெரிக்காவுக்குள் கொண்டுவந்தது என்று விவரிப்பதை இதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகின்றன.

வுகான் நகருக்கு வெளியில் இருக்கும் ஒரு ஆய்வுக்கூடத்தில் அந்த உயிரி ஆயுதம் (வைரஸ்) தயாரிக்கப்பட்டதால், அதற்கு `Wuhan 400' என்று பெயரிடப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருக்கும். இதை அடிப்படையாக வைத்து அந்த நாவலாசிரியர் டீன், இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கும் என 1981-ம் ஆண்டே கணித்துவிட்டார் என்றெல்லாம் அந்த வைரல் தகவல் நமக்குச் சொல்கிறது.

இதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினோம். டீன் கூன்ட்ஸ் கற்பனையில் உருவான திரில்லர் நாவலான தி ஐய்ஸ் ஆஃப் டார்க்னஸில் இடம்பெற்றிருக்கும் சில சம்பவங்களும் தற்போதைய சூழலுக்கும் இருக்கும் ஒரு சில ஒற்றுமைகளை மட்டுமே மையமாக வைத்து இந்தத் தகவலை சிலர் பரப்பி வருகின்றனர்.

அந்த நாவலின் ஒரு கதாபாத்திரம் பேசுவதை மட்டுமே வைத்துக்கொண்டு சிலர் இப்படியான தகவலை உலவவிட்டுள்ளனர். உண்மையில், அந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பில் அந்த வைரஸின் பெயர் `Gorki 400'. ரஷ்யாவில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெயரை நினைவுபடுத்தும் வகையில் அப்படி பெயர் வைக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு மறுமதிப்பாக வெளியானபோதே அதன்பெயர் `Wuhan 400' என்று மாற்றப்பட்டதாகச் சொல்கிறது தி சௌத் சைனா மார்னிங் போஸ்ட் பத்திரிகையின் ஆய்வு.

இந்த வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது சீனாவின் வுகான் நகரத்தில்தான். ஆனால், இந்த வைரஸ் ஆய்வகம் ஒன்றில் உருவாக்கப்பட்டது என்ற கருத்தை சீனா மட்டுமல்ல உலக அளவில் பல்வேறு ஆய்வுகள் பொய் என நிரூபித்துள்ளன. இது 2003-ம் ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ் எங்கிருந்து முதன்முதலாக மனிதனுக்குப் பரவியது என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆனால், பெரும்பாலான ஆய்வாளர்களின் நம்பிக்கை, இது வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதுதான்.

கொரோனா
கொரோனா

அதேபோல், மேற்கூறிய அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழந்துவிடுவர். அந்தத் தகவலையும் குறிப்பிட்ட அந்தக் கதாபாத்திரமே சொல்வது போல் எழுதியிருப்பார் நாவலாசிரியர் டீன். அதுவும் வைரலான அந்தப் புத்தகத்தின் அடுத்தடுத்த பக்கங்களில் இடம்பெற்றிருக்கும். டூம்பே கதாபாத்திரம் பேசும்போது, ``இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர் 24 மணிநேரத்துக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள். பெரும்பாலானவர்கள் 12 மணி நேரத்துக்குள்ளேயே இறந்துவிடுவர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழந்துவிடுவார்கள்’’ என்று கூறுவதுபோல் இடம்பெற்றிருக்கும்.

`தடுப்பூசி... 3 மணிநேரம்; நாசா செயற்கைக்கோள்!’ - #Corona வதந்திகளும் விசாரித்த உண்மைகளும் #FactCheck

கொரோனாவைப் பொறுத்தவரை, அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் தெரிய 5 நாள்கள் முதல் 14 நாள்கள் ஆகும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். இரண்டாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் இறந்துவிடுவதில்லை. பெரும்பாலானோர். இந்தத் தாக்குதலிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் வயது முதிர்ந்தோரும் மற்றும் ஏற்கெனவே பல்வேறு பாதிப்புகளால் அவதிப்பட்டு வருவோரும்தான் உயிரிழப்பார்கள். சமீபத்தில் மதுரையில் உயிரிழந்த கொரோனா பாசிடிவ் நபரும் ஏற்கெனவே, நுரையீரல் தொற்று, ரத்தத்தில் அதீத சர்க்கரையின் அளவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலேயே உயிரிழந்தார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

அடுத்த கட்டுரைக்கு