வாட்ஸ்அப் அட்மின்கள் மீது நடவடிக்கை;புதுச் சட்டம் உண்மையா?!- #Corona வதந்திகளும் விசாரித்த உண்மையும் #FactCheck

`அரசைத் தவிர, சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் என யாரும் கோவிட் - 19 பற்றிய அப்டேட்டுகளைப் பதிவுசெய்யக் கூடாது. அப்படி பதிவு செய்வோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ - இப்படி ஒரு வதந்தி வாட்ஸ்அப் குரூப்களில் தீயாகப் பரவிவருகிறது.
``வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள், 2 நாள்களில் குரூப்பை கலைத்துவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குரூப்பில் இருக்கும் யாரேனும் ஒருவர் தவறுதலாக கொரோனா பற்றி மீம் அல்லது ஜோக்கைப் பகிர்ந்தால், அந்த குரூப் அட்மின் மீது போலீஸார் ஐபிசி 68, 140 மற்றும் 188-ன் கீழ் நடவடிக்கை எடுப்பார்கள். எல்லாருக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதனால், குரூப் அட்மின்கள் உரிய நடவடிக்கை எடுக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
டியர் ஆல், இன்று நள்ளிரவு 12 மணி முதல் பேரிடர் மேலாண்மைச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி, அரசைத் தவிர வேறு எந்தவொரு குடிமகனும் கொரோனா வைரஸ் பற்றிய அப்டேட் அல்லது தகவலைப் பதிவிடுவதோ அல்லது பகிர்வதோ கூடாது. அது தண்டனைக்குரிய குற்றமாகும். குரூப் அட்மின்கள் இதை குரூப் உறுப்பினர்களிடம் தெரியப்படுத்தவும். இதை கட்டாயம் கடைப்பிடிக்கவும்’’ என்று நீள்கிறது அந்த வைரல் ஃபார்வேர்டு.
கூடுதலாக, `Livelaw' இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றின் இணைப்பையும் சேர்த்து அனுப்புகிறார்கள். இதனால், அந்த ஃபார்வேர்டை பெரும்பாலானோர் நம்பத் தொடங்கிவிட்டனர். உண்மையில், அரசு அப்படி எந்தவொரு உத்தரவையுமே பிறப்பிக்கவில்லை என்பதே நிதர்சனம். இதுகுறித்து மேலும் விசாரித்ததில், வதந்தியோடு பரப்பப்படும் `Livelaw'இணையதள செய்தி என்பது கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியாகியிருக்கிறது. அந்தச் செய்திக்கும் குறிப்பிட்ட இந்த வதந்திக்கும் எந்தத் தொடர்புமில்லை.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருப்பதாகவும் வதந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த இணையதளத்தில் பதிவான, அந்த குறிப்பிட்ட செய்தி இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன்களைக் காக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது தொடர்பானது. அந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தபோது அரசிடம், உண்மையான தகவல்களைச் சரிபார்க்காமல் எந்தவொரு ஊடகமும் கோவிட்-19 பற்றி செய்தி வெளியிடக் கூடாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றம் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டிருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் அந்தச் செய்தியில், உச்ச நீதிமன்றத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா சார்பில் தாக்கல்செய்யப்பட்ட பதில் மனுவில், இன்றைய சூழலில் போலியான தகவல்களைக் கட்டுப்படுத்துவது சவாலானதாக இருக்கிறது. அப்படி பகிரப்பட்ட போலியான தகவல் ஒன்றால், பெரிய எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இடம்பெயரத் தொடங்கியதாகவும், அதேநேரம், அவர்களின் நலன் கருதி அரசு சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

மேலும், இதுதொடர்பாக ஊடகங்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்க வேண்டும் எனவும் உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அசாதாராண சூழல் குறித்து சுதந்திரமாக விசாரிப்பதில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறியதுடன், கோவிட்-19 பற்றி அரசு சார்பில் அறிவிக்கப்படும் அதிகாரபூர்வ தகவல்களை மட்டுமே வெளியிடுமாறும் ஊடகங்களை அறிவுறுத்துமாறும் உத்தரவிட்டது.

அரசிடம் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் எந்தவொரு ஊடகமும் கோவிட்-19 பற்றிய செய்திகளை உத்தரவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்த வாதத்தை நீதிமன்றம் உத்தரவிட்டதாகக் கூறி வதந்தி பரப்பத் தொடங்கிவிட்டார்கள். அப்படி எந்த உத்தரவையும் உச்ச நீதிமன்றமோ அரசோ பிறப்பிக்கவில்லை என மத்திய அரசும் மறுப்புத் தெரிவித்துவிட்டது. அதேபோல், குறிப்பிட்ட இணையதளமும், தங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் இணைப்போடு இப்படி ஒரு பொய்யான தகவல் பரப்பப்பட்டுவருவதாக விளக்கம் கொடுத்திருக்கிறது.