கொரோனா, கபசுரக் குடிநீர், இளவயது மரணங்கள்... வாசகர்களுக்கு கு.சிவராமனின் பதில்கள்!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன்.
கடந்த மூன்று மாத காலமாக நம் மூளைக்குள் சுழன்று கொண்டிருக்கும் ஒரே விஷயம்... 'கொரோனா!' இந்தப் பிரச்னை எப்போது முடியும்? நமக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? இந்தத் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள என்ன வகையான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்... இப்படிப் பல கேள்விகளைச் சுமந்துகொண்டிருப்பவர்களின் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த ஆனந்த விகடன் சார்பில் 'கொரோனா காலம்... ஆரோக்கிய வாழ்வு!' என்ற தலைப்பில் ஒரு இலவச வெபினார் ஏற்பாடு செய்யப்பட்டது.
சித்த மருத்துவர் கு.சிவராமன் நிகழ்வில் கலந்துகொண்டு வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். வாசகர்களின் கேள்விகள், அதற்கு மருத்துவர் அளித்த பதில்களின் தொகுப்பு இங்கே.
1. கபசுரக் குடிநீர் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுமா?

கபசுரக் குடிநீர் உடலுக்கு ஆரோக்கியமளிக்கக்கூடிய 15 வகை மூலிகைகளால் தயார் செய்யப்படுகிறது. இந்த மூலிகைகள் காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளைக் குணப்படுத்தக்கூடியவை. இதன் காரணமாகவே கொரோனா தொற்றுக்குக் கபசுரக் குடிநீரைப் பரிந்துரை செய்கிறோம். 5 கிராம் கபசுர சூரணத்தை ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து இளஞ்சூட்டில் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அரை டம்ளராக சுண்டிய பிறகு, ஆறவைத்து வடிகட்டி 60 மில்லி அளவில் உணவுக்கு முன் பருகலாம். பித்தம், அல்சர் போன்ற பிரச்னை உள்ளவர்கள் உணவுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளலாம்.
கபசுரக் குடிநீர் அதிக சூடு என்பதால் 3 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம். 3 முதல் 12 வயதுக் குழந்தைகளுக்குத் தினமும் 30 மில்லி அளவில் கொடுக்கலாம். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 60 மில்லி எடுத்துக்கொள்ளலாம். 30 நாள்களுக்குக் கபசுர குடிநீரைப் பருகச் சொல்லி அரசு பரிந்துரைத்துள்ளது. தொடர்ச்சியாக முதல் 15 நாள்களும் பிறகு 4 - 5 நாள்கள் இடைவெளிவிட்டு அடுத்த 15 நாள்களுக்கும் கபசுர குடிநீரைப் பருகலாம்.
2. பாலூட்டும் தாய்மார்கள் நோய் எதிர்ப்புத்திறனை மேம்படுத்திக்கொள்ள கபசுரக் குடிநீருக்கு மாற்று என்ன?
சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிமதுர சூரணம், ஆடாதொடை மணப்பாகை எடுத்துக்கொள்ளலாம்.
3. சாதாரண சளி, காய்ச்சல், இருமல் வந்தாலே 'கொரோனாவோ?' என்ற அச்சம் தொற்றிக்கொள்கிறது. என்ன செய்வது?

இந்தக் காலத்தில் சளி, காய்ச்சல், இருமல் வந்தால் அது இன்ஃப்ளூயன்ஸாவா இல்லை கொரோனாவா என்று பிரித்தறிவது கொஞ்சம் கடினம்தான். அதனால் காய்ச்சல் ஏற்படாமல் தற்காத்துக்கொள்வதே சிறந்த தீர்வு. குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஒருவேளை காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.
4. நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்துக்கொள்ள என்னென்ன உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்?

தினமும் காலையில் இஞ்சி கலந்த எலுமிச்சைச்சாறு குடிக்கலாம். கசப்பு, துவர்ப்பு சுவை உள்ள உணவுகள் தினமும் உணவில் இடம்பெறும்படி பார்த்துக்கொள்ளுங்கள். பாகற்காய், சுண்டைக்காய், வாழைப்பூ, கீரைகள், சுக்கு, பழங்கள், புரதச்சத்து நிறைந்த பயறுவகைகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் சி அதிகமுள்ள ஆரஞ்சு, எலுமிச்சை, நெல்லிக்காய் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கக் கூடியவை. அசைவ உணவில் முட்டை, சிக்கன், மீன் ஆகியவற்றை சாப்பிடலாம். மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், கொத்தமல்லி சேர்த்து வைத்த ரசம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
5. கொரோனா காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன?
கடைகளில் விற்பனை செய்யப்படும் துரித உணவுகளையும், 'ரெடி டு ஈட்' உணவு வகைகளையும் அவசியம் தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள ரசாயனங்கள் உடலின் நோயெதிர்ப்பாற்றலைக் குறைக்கக்கூடியவை.

6. நோய் எதிர்ப்புத்திறன் என்பது மரபுடன் (Genetically) தொடர்புடையது என்கிறார்கள். உணவுப்பழக்கத்தின் மூலம் அதனை மாற்ற முடியுமா?
நிச்சயமாக மாற்ற முடியும். மரபுரீதியில் ஏற்படும் சிலவகை நோய்களை மட்டும்தான் நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை நிச்சயமாக உணவுப் பழக்கத்தால் மேம்படுத்த முடியும். நோய்களையும் குணப்படுத்த முடியும். இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளும் இதனை உறுதிசெய்துள்ளன.
7. அல்சர், குடல், இரைப்பை பிரச்னை உள்ளவர்கள் வைட்டமின் சி-க்கு பதிலாக வேறு என்ன உணவை எடுத்துக்கொள்ளலாம்?
நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின் சி-க்கு மாற்று இல்லை. அல்சர், குடல் பிரச்னை உள்ளவர்கள் பிழிந்த ஆரஞ்சு, எலுமிச்சைப் பழச்சாறு, அரைத்த நெல்லிக்காய் சாறு போன்றவற்றைத் தண்ணீர் சேர்க்காமல் அடர்த்தியாக எடுத்துக்கொள்ளாமல், சிறிதளவு தண்ணீருடன் கலந்து பருகினால் பிரச்னை ஏற்படாது.

8. நாங்கள் வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆனால், கொரோனா தொற்றை நினைத்தால் அச்சமாக உள்ளது. என்ன செய்வது?
'கொரோனா வைரஸ்' என்பது உலகளாவிய தொற்றுநோய். இந்தியாவில் இருக்கும் கொரோனா வைரஸும் அமெரிக்காவில் இருக்கும் கொரோனா வைரஸும் ஒன்றுதான். மரபு ரீதியில் சிறிது மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், ஒரே மாதிரியான தொற்றைத்தான் ஏற்படுத்துகின்றன. அதனால் வெளிநாடு சென்று வேலைபார்க்கும் சூழலில் இருப்பவர்கள் பயப்பட அவசியமில்லை. நீங்கள் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அடிப்படை சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற மறவாதீர்கள்.
9. புற்றுநோயாளிகள் வேலைக்குச் செல்லும் சூழலில் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
புற்றுநோய்க்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி நல்ல நிலையிலேயே இருக்கும். அதனால் பயம்கொள்ளத் தேவையில்லை. வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் செய்ய வேண்டும்.

10. கொரோனா காலத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கான ஆலோசனை என்ன?
மனிதனின் சுவாச மண்டலத்திலுள்ள மூச்சுக்குழாயிலிருக்கும் எப்பிதிலியல் செல்களை (Epithelial cells) அதன் கூரிய முனைகளைக் கொண்டு துளைத்து கொரோனா வைரஸ் உள்ளே செல்லும். புகைப்பிடிப்பவர்களுக்கு அந்த செல்கள் ஏற்கெனவே சேதமடைந்துதான் இருக்கும். அதனால் எளிதாக அவர்களைத் தாக்கிவிடும். புகைப்பிடித்தலைக் கைவிடுவதுதான் சிறந்தது. அதன்பிறகு நுரையீரலின் நோயெதிர்ப்பாற்றலைக் கூட்டிக்கொள்ள ஆடாதொடை, கபசுரக் குடிநீர், அதிமதுரம் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
11. கோவிட்-19 இளவயது மரணங்களையும் ஏற்படுத்துவது ஏன்?
ஒப்பீட்டளவில் இளவயது மரணங்கள் குறைவாகவே நிகழ்கின்றன. நோயெதிர்ப்பாற்றல் குறைவாக உள்ளவர்களுக்குத்தான் கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருக்கிறது. இது இளவயதினருக்கும் பொருந்தும்.

12. இந்த நேரத்தில் குளிர்ச்சியான காய்கறிகளை சமைக்கலாமா?
வெள்ளரிக்காய், தர்பூசணி, பரங்கிக்காய் போன்ற காய்கறிகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். வைரஸ் உள்ளே சென்றாலும் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் உடலை வெம்மையாக்கும் என்பதால் சூட்டைத் தணிப்பதற்கு இந்தக் காய்கறிகள் உதவும். அடிக்கடி சளிப்பிடிக்கும் இயல்பு உடையவர்கள் இந்தக் காய்கறிகளுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்துச் சாப்பிடலாம்.
13. 'ஹேப்பி ஹைப்போக்ஸியா' என்ற பிரச்னையால் கோவிட் மரணங்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது. அதைத் தவிர்ப்பது எப்படி?

அறிகுறிகள் இல்லாத கோவிட்-19 பாசிட்டிவ் நோயாளிகளுக்குக்கூட ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு குறைந்து உயிரிழப்புகள் நிகழ்கின்றன. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுவிட்டால் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை வாங்கி வைத்துக்கொண்டு பரிசோதிப்பது நல்லது. ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு இயற்கையாகவே ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சற்று குறைவாக இருக்கலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்று செயற்கை ஆக்சிஜன் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். கபசுரக் குடிநீர், மூச்சுப்பயிற்சி, இஞ்சி எலுமிச்சைச் சாறு, நெல்லிக்காய் போன்றவை நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரித்து, ஹைப்போக்சியாவைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.
உடல் பருமனுக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறதா?

நிச்சயமாக. உடல்பருமனுள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல்பருமனாக இருப்பவர்களை போய் அந்த வைரஸ் தொற்றும் என்று அர்த்தமில்லை. ஆனால், தொற்று ஏற்பட்டவர்களில் சிலர் உடல்பருமனாக இருக்கின்றனர். அவர்களுக்கு நோய் குணமடைவதில் சற்று சிரமங்கள் இருக்கின்றன. ஐரோப்பா, அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வுகளில் கோவிட் மரணங்கள் ஏற்பட்ட பலர் உடல்பருமனாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாகவே, உடல் பருமனாக உள்ளவர்களுக்கு நுரையீரல் திறன் குறைவாக இருக்கும் என்பதால் கொரோனா வைரஸ் எளிதாகத் தாக்குவதற்கு ஏதுவாக இருக்கிறது. அதனால் அதிக உடல்எடையுடன் இருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.