சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

கொரோனா அச்சம் - தவிர்!

கொரோனா அச்சம்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா அச்சம்

மறுதொற்றின் மூலம்தான் இந்தத் தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் உள்ளது என்பதை அறியமுடியும்.

கொரோனா, உலகத்தைப் பீதியில் உறையவைத்திருக்கிறது. தினமும் வெளிவருகிற தொற்று எண்ணிக்கைகளும், மரண எண்ணிக்கைகளும் பெரும் பதற்றத்தை உருவாக்குகின்றன. இந்தச்சூழலில், அஹமதாபாத் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் மாவ்லாங்கார், மிகவும் நம்பிக்கையளிக்கும் ஓர் ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார்.

கொரோனா அச்சம் - தவிர்!

“ஒருவருக்குத் கொரோனாத் தொற்று ஏற்பட்டால் அந்தத் தெருவே பீதியாகிறது. அதற்கெல்லாம் அவசியமேயில்லை. ..” என்கிறார் மாவ்லாங்கார். கொரோனா குறித்து இதுவரையில் இருக்கும் பல நம்பிக்கைகளைத் தகர்க்கிறது அவர் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கை. அதுபற்றி மருத்துவ உலகம் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கும் தருணத்தில், சில கேள்விகளை முன்வைத்து அவரோடு உரையாடினோம்.

“கொரோனா பரிசோதனையில் பல்ஸ் ஆக்சி மீட்டர் முக்கியப் பங்கு வகிக்கிறது. சென்னை மாதிரி நகரங்களில் பலர் வீடுகளிலேயே அந்தக் கருவியை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதனால் ஏதேனும் பயனுண்டா?”

“அதனால் பெரிதாகப் பயனில்லை என்பதுதான் உண்மை. தினமும் உடலில் ஆக்ஸிஜன் அளவைக் கண்காணிப்பது மக்களுக்கு ‘நாம் நன்றாக இருக்கிறோம்’ என்ற நம்பிக்கையை அளிப்பதாக இருக்கும். இதைத்தாண்டி அந்தக் கருவியால் வேறு பயன்கள் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் ஏதும் இல்லை. இன்னொரு விபரீதம் என்னவென்றால், ஒருவர் விரலில் பல்ஸ் ஆக்ஸி மீட்டரை வைக்கும் முன் சானிட்டைசர் மூலம் விரலைச் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அதுவே தொற்றை ஏற்படுத்தவும் செய்யலாம்.”

கொரோனா அச்சம் - தவிர்!

“வீட்டில் ஒருவருக்குக் கொரோனா வந்தால் உடனிருக்கும் எல்லோருக்கும் தொற்று இருக்கலாம் என்ற பதற்றம் ஏற்படுகிறது. உங்கள் ஆராய்ச்சி இதில் முரண்படுகிறதே?”

“உலக அளவில், வீட்டிற்குள் கொரோனா பரவல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை வைத்துப் பார்க்கும்போது, வீட்டில் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் உடனிருப்பவர்களுக்குப் பரவும் விகிதம் என்பது மிகவும் குறைவாகவே இருக்கிறது. துல்லியமாகச் சொல்லப்போனால், 10 முதல் 20 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அப்படிப் பரவுகிறது. நாங்கள் அஹமதாபாத்தில் இதை ஆதாரபூர்வமாகப் பதிவு செய்திருக்கிறோம். உதாரணத்துக்கு, கணவனுக்கு பாதிப்பு ஏற்பட்டால் மனைவிக்கு ஏற்பட 50 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு. அறிகுறிகள் வருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே தொற்றுள்ள ஒருவரால் மற்றவர்களுக்குப் பரப்பமுடியும் என்று சொல்லப்படும் சூழலில் 80 முதல் 90 சதவிகிதம் பேர், வீட்டில் பாதிக்கப்படவில்லை என்ற முடிவுகள் ஆச்சர்யமூட்டுவதாகவே உள்ளன. ஆனாலும் இது மொத்த உலகத்துக்கும் பொருந்தாது. உணவுப்பழக்கம், தட்பவெட்பம், வாழ்க்கைமுறை, புவியியல் என இதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் உள்ளன.”

“இந்தியாவில் போதுமான அளவுக்குப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறதே?”

“சளி-காய்ச்சல் அறிகுறிகளுடன் எத்தனை பேர் உள்ளனர், அவர்களில் எத்தனை பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகின்றது என்பதை வைத்தே பரிசோதனை போதுமான அளவு மேற்கொள்ளப்படுகின்றதா என்பதைக் கூறமுடியும். உதாரணத்திற்கு, சென்னையில் 10,000 பேர் அறிகுறிகளுடன் இருந்து 2,000 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டால் அது குறைவு. பொதுவாக, இந்தியா முழுவதுமே சளி-காய்ச்சல் அறிகுறிகள் எத்தனை பேருக்கு உள்ளது என்பது பதிவு செய்யப்படுவதில்லை. அந்த அடிப்படையிலேயே நிறைய தவறிழைக்கிறோம்.

இன்னொரு பக்கம், தனியார் மருத்துவமனைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்படுபவர்கள் பற்றி முறையான தரவுகளை அளிப்பதில்லை. சில தனியார் மருத்துவமனைகளில் ஹை ரெஸல்யூஷன் சி.டி ஸ்கேன் (HRCT) பரிசோதனையை நேரடியாகச் செய்கின்றனர். இதன்மூலம் நுரையீரலில் இருக்கும் பாதிப்பை அறியமுடியும். அரசு, HRCT பரிசோதனை எத்தனைபேருக்குச் செய்யப்படுகிறது என்பதையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி எல்லாக் கோணங்களிலும் அணுகினால் மட்டுமே கொரோனா குறித்து முறைப்படியான தகவல்களைப் பெற்று சிகிச்சை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முடியும்.”

“தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா?”

“மறு தொற்று குறித்துத் துல்லியமான தகவல்கள் இல்லை. தற்போதுவரை மறு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அது வருங்காலத்தில் அதிகரிக்கலாம். மறுதொற்றின் மூலம்தான் இந்தத் தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி எவ்வளவு காலம் உள்ளது என்பதை அறியமுடியும்.”

“செப்டம்பர் மத்தியில் இந்தியாவில் கொரோனாத் தொற்று உச்சம்பெறும் என்கிறார்களே, உண்மையா?”

“இந்தியா போன்ற மிகப் பரந்த நாட்டில், ஒரே நேரத்தில் தொற்று உச்சம் அடைந்து பின் குறைவது நிகழாது. மாநிலங்கள், நகரங்கள், மாவட்டங்கள், இன்னும் சொல்வதானால் வார்டுகள் வாரியாகக்கூட இந்தத் தொற்று உச்சநிலையை அடையும், குறையும். டெல்லி, அஹமதாபாத் ஆகிய நகரங்களில் தொற்று உச்சத்தை அடைந்து தற்போது குறைந்துவிட்டது. ஆனால், மும்பையில் இனிதான் உச்சநிலையை அடையும். சென்னையைப் பொறுத்தவரை, அங்கிருக்கும் அதிகாரிகள்தான் நிலையைக் கணிக்க வேண்டும்.”

“அப்படியானால் முழு நாட்டிற்குமான ஊரடங்கு தேவையில்லைதானே?”

“உண்மைதான். ஊரடங்கின் அவசியம் என்பது, அந்தந்தப் பகுதியின் தொற்றுப்பரவல் விகிதத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படவேண்டும். ஊரடங்கைக் காட்டிலும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும், முகக் கவசம் அணிவதும், கைகளைச் சுத்தப்படுத்துவதும் தனி மனிதப் பழக்கமாவதுதான் முக்கியம்.”

கொரோனா அச்சம் - தவிர்!

“கொரோனா விஷயத்தில் அரசின் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமாக இருக்கின்றனவா?”

“மக்களும் அரசாங்கதோடு இணைந்து செயல்படவேண்டிய தருணம் இது. அரசாங்கத்திடம் அனைத்துத் தகவல்களும் உள்ளன. எந்த இடம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் அறியும். அதை மக்களுக்குத் தெரியப்படுத்தி எச்சரிக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அரசாங்கம் வழி நடத்தும் வேலையைச் செய்யவேண்டும். மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு விஷயங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.”