`காய்ச்சல் இருந்தால் பயணம் செய்யாதீர்கள்!' - டிராவலர்களுக்கான கொரோனா வைரஸ் அலர்ட் #CoronaVirus

சர்வதேசப் பயணிகள் வழியாகத் தற்போது உலக நாடுகள் முழுக்க பரவுகிறது கொரோனா வைரஸ்.
கொரோனா வைரஸின் தாக்கத்தால், கடந்த சில வாரங்களாகவே, சீனாவில் பதற்ற நிலை நிலவிவருவது அனைவரும் அறிந்த விஷயம். தும்மல் மற்றும் இருமலின் வழியாக, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் இந்தப் பாதிப்பு, சர்வதேசப் பயணிகள் வழியாகத் தற்போது உலக நாடுகள் முழுக்க பரவுகிறது. இந்தியாவும் விதிவிலக்கல்ல.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தெரிய வந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சரவை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு சார்பில், சர்வதேச விமான நிலையங்களில் ஸ்க்ரீனிங் சென்டர்கள் அமைக்கப்பட்டு பயணிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதில் இதுவரை, 137 விமானங்களும் 29,700 பயணிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரையில் யாருக்கும் பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை என்றாலும்கூட, சந்தேகப்பட்டியலில் இருப்போரின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இன்று காலையில்கூட, பீகார் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர், சந்தேகப்பட்டியலில் இணைந்துள்ளனர்.

பீகாரின் சாப்ரா மாவட்டத்தைச் சேர்ந்த எட்கா குமாரி மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் இருவரும் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் என்பதால் சர்வதேசப் பயணம் மேற்கொள்பவர்கள் தங்கள் உடல்நலனில் அதிக கவனம் எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சோப் வாட்டர் உதவியோடு, அடிக்கடி கைகளைக் கழுவவும்.உலக சுகாதார நிறுவனம்
பயணிகளுக்கு, உலக சுகாதார நிறுவனம் சார்பாகக் கூறப்பட்டுள்ள முக்கியமான ஆலோசனைகள் இங்கே.
* காய்ச்சல், இருமல் பிரச்னை இருந்தால் பயணம் செய்ய வேண்டாம். உடனடியாக மருத்துவ உதவியை நாடவும். பயணத்தின்போது பாதிப்பு ஏற்பட்டது என்பவர்கள், பிரச்னை ஏற்பட்டவுடன் அருகிலிருக்கும் மருத்துவ உதவியை நாடுங்கள்.
* இருமல், தும்மல் வரும்போது, வாய் - மூக்குப் பகுதிகளை டிஷ்யு மூலம் மூடிக்கொள்ளவும். தொடர்ந்து, உபயோகப்படுத்திய டிஷ்யுவை உடனடியாக அப்புறப்படுத்திவிட்டு, கைகளை நன்கு கழுவிக்கொள்ளவும். சிங்கிள் யூஸ் ஃபேஸ் மாஸ்க் அணிபவர்களுக்கும் இந்தப் பராமரிப்பு முறை பொருந்தும்.
* பயணத்தின்போது, இருமல் அல்லது காய்ச்சல் இருப்பவர்களுடன், நெருங்கிப் பழக வேண்டாம்.
* நன்கு சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் உண்ணவும்.
* ஏதேனும் பாதிப்புள்ள விலங்குகள் / செல்லப்பிராணிகளோடு நெருங்கிப் பழக வேண்டாம்.