Published:Updated:

4 மீட்டர் காற்றில், ஷூக்களில்... கொரோனா பரவலாம்! புதிய ஆய்வு #FightCovid19

Representational Image
Representational Image

மருத்துவர்களின் ஷூக்கள்கூட கொரோனாவைப் பரப்பலாம்- அச்சுறுத்தும் புதிய ஆய்வு

கோவிட் - 19 கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தவரையில், மருத்துவர்களும் அறிவியலாளர்களும் மீண்டும் மீண்டும் முன்னிறுத்துவது வைரஸ் பரவும் வேகத்தைத்தான். கொரோனா தொற்று தீவிரமாகத் தொடங்கியபோது மருத்துவர்கள், ஆய்வாளர்கள் எனப் பலரும் சொன்னது `கோவிட் 19 வைரஸ் காற்றில் பரவாது' என்பதையே. ஆனால் இப்போது அது காற்றிலும் பரவும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

Representational Image
Representational Image

நோயாளியிடமிருந்து கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் வரையில் காற்றில் பரவக்கூடும் என்பது குறித்த ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த ஆய்வின் முடிவில், கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து 13 அடிதூரம் (4 மீட்டர்) தொலைவு வரையில் கொரோனா காற்றில் பரவக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் சீன அரசால் ஆய்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட புள்ளிவிவரங்களைவிட இது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. ஆம், சீனா குறிப்பிட்டது, 6 அடி தூரம் என்பதால்தான், நம் அரசு நம்மை பிசிக்கல் டிஸ்டன்சிங்கில் 6 அடி இடைவெளி விட்டு நிற்கச் சொல்லி அறிவுறுத்துகிறது.

சமூக இடைவெளி
சமூக இடைவெளி

13 அடி எனக் கண்டறிந்தது, பீஜிங்கின் ராணுவ மருத்துவத் தளங்களோடு தொடர்பிலிருக்கும் மருத்துவர்கள். இவர்கள், வுஹானைச் சேர்ந்த ஒரு மருத்துவமனையில் ஐ.சி.யூ வார்டு மற்றும் ஜெனரல் வார்டுகளில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் மத்தியில் இந்த ஆய்வைச் செய்துள்ளனர். ஆய்வின் முடிவில், ``நோயாளிகள் இருக்கும் அறைகளின் தரைதளத்தில்தான் வைரஸ் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன.

`குளிர்காலங்களில் மீண்டும் கொரோனா.. 2022 வரை சமூக இடைவெளி!’ - ஹார்வர்டு ஆய்வு செல்வதென்ன?

இதற்கு புவிஈர்ப்பு விசை காரணமாக இருக்கக்கூடும் என நாங்கள் அனுமானித்துள்ளோம்" என்றும் கூறியுள்ளனர் . தரைதளத்தை நோக்கி இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்பதால், மருத்துவர்களின் ஷூக்களில் இந்த வைரஸ் அதிகம் படர்ந்துவிடுவதாகக் கூறியுள்ளார்கள் அவர்கள். மருத்துவர்களின் ஷூக்கள் பெரும்பாலான நேரத்தில் கொரோனா கேரியர்களாக விடுகின்றன என்பது ஆய்வு சொல்லும் கூடுதல் தகவல்.

சமூக இடைவெளி
சமூக இடைவெளி

காற்றின் வழியாக கொரோனா பரவுமா என்ற கேள்வி, பல மாதங்களாக விவாதத்துக்குட்பட்டே இருக்கிறது என்பதால் இந்த ஆய்வில் இதற்கான விடையையும் கண்டறிய முற்பட்டிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். முடிவில் அவர்கள் சொல்லும் விஷயம் இதுதான் - ``நீர்த்துளிகள் எப்படிப் பரவுகின்றன என்பதைப் பொறுத்துதான், காற்றில் இது எவ்வளவு நேரம் உயிரோடு இருக்கும் என்பதும் அமைகிறது. ஒருவேளை இருமல், தும்மல் வழியாகத்தான் நோயாளியின் நீர்த்துளிகள் வெளிவந்துள்ளன என்றால், அடுத்த சில விநாடிகளில் அவை தனது சக்தியை இழந்துவிடுகின்றன. அதுவே எச்சில் வழியாக அதிக அளவில் வெளிவந்திருந்தால், அதன் ஆயுட்காலம் நீடித்தே இருக்கிறது".

நுண்ணுயிரிகள் ஆய்வாளர் பவித்ரா வெங்கடகோபாலனிடம் இந்த ஆய்வுமுடிவு குறித்து பேசினோம்.

நுண்ணுயிரிகள் ஆய்வாளர் பவித்ரா வெங்கடகோபாலன்
நுண்ணுயிரிகள் ஆய்வாளர் பவித்ரா வெங்கடகோபாலன்

``இந்த வைரஸ், காற்றில் பரவுமென்ற போதிலும் எந்த நிலையில் இது எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்றோ, எவ்வளவு நேரம் காற்றில் உயிரோடு இருக்கும் என்றோ நம்மிடையே சரியான தரவுகள் இல்லை. சில நேரங்களில் விரைந்து அழிந்துவிடுகிறது, சில நேரங்களில் நீடித்து நிலைத்திருக்கிறது. இப்போதைக்கு எதையும் நாம் குழப்பிக் கொள்ள வேண்டாம். எது எப்படியாகினும் வைரஸ் பரவும் என்பது உண்மை. அதை மட்டும் கருத்தில் கொண்டு மிகுந்த முன்னெச்சரிக்கையோடு அனைவரும் இருப்போமாக!

மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வில், ஆய்வாளர்கள், நோயாளிகளைச் சுற்றிய இடங்களில்தான் இந்த ஆய்வுகளை மேற்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், நோயாளிகளுடனேயே பயணிக்கும் மருத்துவப் பணியாளர்கள் எந்தளவு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே ஆய்வு தீர்க்கமாகச் சொல்ல முயல்கிறது.

கோவிட் - 19
கோவிட் - 19

மருத்துவரின் ஷூ கூட, வைரஸ் கேரியராகச் செயல்படும் என ஆய்வு கூறுகிறது. அப்படியானால், ஒருமுறை பயன்படுத்திய ஷூவை, மறுமுறை அவர்கள் உபயோகப்படுத்தக்கூடாது. ஆனால் இன்றைக்கு நம் மருத்துவப் பணியாளர்கள் இந்தளவுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

களத்தில் நின்று வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கும் அவர்களின் பணியாளர்களுக்கும், மூன்றடுக்குக் கவசங்கள் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்றென்ற விகிதத்தில் தரப்பட வேண்டும். ஒருமுறை உபயோகப்படுத்திய எதையும் அவர்கள் மீண்டும் உபயோகப்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆனால் இது அனைத்துமே சாத்தியமற்ற நிலையில்தான் இருக்கின்றன. இவையாவும் நடக்க வேண்டுமென்றால், நம்மிடையே அந்தளவுக்கு மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும். மருத்துவ வசதியை, உறுதிபடுத்த வேண்டியது அரசின் கடமை!" என்றார் அவர்.

PPE
PPE

ஏற்கெனவே மருத்துவப் பணியாளர்களுக்கான உடைகள் முறையாகக் கிடைக்கப்பெறுவதில்லை எனப் புகார்கள் எழுந்து வரும் சூழலில், இப்படியான ஆய்வு முடிவு நம் மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து மேலும் அச்சத்தையே தருகிறது. இனி அரசின் கைகளில்தான், அனைத்தும்!

அடுத்த கட்டுரைக்கு