`கோவிட்-19 வைரஸ் காற்று மூலம் பரவலாம்!’ - ஒப்புக்கொண்ட உலக சுகாதார நிறுவனம்

கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவாது என்ற உலக சுகாதார நிறுவனம் மறுநாளே தன் முடிவை மாற்றிக்கொண்டது.
கோவிட் - 19 வைரஸ், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனம் இதுவரை கூறி வந்தது. ஆனால், தற்போது அந்நிறுவனம், கோவிட்-19 வைரஸ் காற்றாலும் பரவலாம் என்று ஒப்புக்கொண்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள், கோவிட்-19 காற்றால் பரவக்கூடிய நோய் என்பது குறித்த தங்களது ஆய்வு முடிவை உலக சுகாதார நிறுவனத்துக்கு அனுப்பினர். மேலும், ''கோவிட்-19 வைரஸ், பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து நீர்த்திவலைகள் மூலமாக வெளிப்பட்ட பின்னர், காற்றிலுள்ள சிறிய துகள்களில் உள்ள அந்த வைரஸ், மக்கள் அதைச் சுவாசிக்க நேரும்போதும் தொற்று பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்று விளக்கியிருந்தனர்.

இது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய உலக சுகாதார அமைப்பின் தொற்றுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டின் டெக்னிக்கல் லீடு பெனெடெட்டா அலக்ரான்ஸி, ''கொரோனா வைரஸ் காற்றில் பரவும் நோய் என்பதற்கு நிரூபணங்கள் இல்லை. என்றாலும், கூட்டமான, நெருக்கமான மற்றும் காற்றோட்டம் இல்லாத இடத்தில் இந்த நோய் காற்றால் பரவும் என்பதை நிராகரிக்க முடியாது. ஆனாலும், இது குறித்து முழுமையாக விளக்கப்பட வேண்டும்'' என்றிருக்கிறார்
இதைத் தொடர்ந்து, கோவிட்-19 வைரஸ் காற்றின் மூலம் பரவுவதற்கான வாய்ப்புகள் குறித்து உலக சுகாதார நிறுவனத்தில் கலந்துரையாடப்பட்டது. மேலும், கோவிட்-19 வைரஸ் பரவல் முறை குறித்து விளக்கமாக விரைவில் வெளியிடப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
''நாம் அனைவரும் பாதுகாப்பு முறைகளைச் சீராகக் கையாண்டால்தான் இந்த நோய் பரவலைத் தடுக்க முடியும்'' என்றிருக்கிறார்.

உலக சுகாதார நிறுவனத்தின் பேன்டமிக் தொழில்நுட்பத் தலைவர் மரியா வான் கெர்ஹொவே. ஒருவேளை, கொரோனா வைரஸ் காற்றின் மூலமும் பரவும் என்று உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தி அறிவித்தால், உலக நாடுகள் அந்த வைரஸ் நோய்த்தடுப்புக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்னும் அதிகரிக்க வேண்டியதாக இருக்கும். மேலும், சமூக விலகல் இடைவெளியையும் அதிகரிக்க வேண்டிவரும்.
இவை குறித்தெல்லாம் உலக சுகாதார நிறுவனம் தெளிவான கருத்துகளை விரைவில் அறிவிக்க, அறிவுறுத்த வேண்டும்.