`தும்மல் என்றாலே கொரோனா என பதற்றமடையாதீர்கள்!'- வதந்திக்கு அரசுத் தரப்பில் சொல்வது என்ன?#coronavirus

``கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம்!" - பொது சுகாதாரத்துறை இயக்குநர்.
இருமல் மற்றும் தும்மல் வழியாகப் பரவும் கொரோனாவுக்கு, சீனாவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சீனாவில் மட்டும் 213 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஒரு பக்கம் கொரோனாவைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வு பரப்பப்பட்டு வரும் நிலையில், மற்றொரு பக்கம் சீனப்பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

`அமெரிக்கர்கள் யாரும் சீனாவுக்குப் பயணப்படாதீர்கள்' என அமெரிக்க அரசு உத்தரவே பிறப்பித்துவிட்டது. கூடவே, `சீனர்களும் இங்கு வர வேண்டாம்' என்கிற ரீதியிலான கோரிக்கையையும் வைத்துள்ளது அமெரிக்கா. இஸ்ரேல், இத்தாலி போன்ற நாடுகளில் சீனாவுக்கும் அவர்களுக்குமான போக்குவரத்து விமானங்கள் யாவும் முடக்கப்பட்டுவிட்டன. வடகொரியாவில், ரயில் போக்குவரத்துகூட நிறுத்தப்பட்டுவிட்டது. இப்படி உலக நாடுகள் அனைத்தும் பயணிகள் விஷயத்தில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் சீனப் பயணிகளுக்கான வரையறைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம் சீனாவிலிருந்து கேரளாவுக்கு வந்திருந்த கேரள மாணவர் ஒருவருக்கு, நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில், சீனப் பயணிகள் குறித்த பயம் இந்தியாவையும் தொற்றிக்கொள்ளத் தொடங்கியது. அந்த வகையில், இன்று சென்னையில் தரை இறங்கிய 242 சீனப் பயணிகளில், இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் தற்போது மருத்துவமனை கண்காணிப்பில் இருப்பதாகவும், சமூகவலைதளங்களில் கடந்த சில மணி நேரமாகத் தகவல்கள் பரவிவருகின்றன.
தமிழகப் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமியிடம், இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்துக் கேட்டோம்.
``யாருக்குமே பாதிப்பு இல்லை என்பதால், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்" எனக்கூறி நம் பதற்றத்தைத் தணித்தார். மேலும் பேசியவர், ``பயணிகளில் இருவர் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை. லேசான தும்மல், இருமல் போன்ற அறிகுறிகள் தெரியவந்துள்ளன. ஆனால், அதைக் கண்டு சுற்றியிருந்தவர்கள் தந்த பீதியில் இவர்கள் இருவரும் பதற்றமாகியுள்ளார்கள். ஒருவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர். மற்றொருவர் சென்னையைச் சேர்ந்தவர். திருவண்ணாமலை தலைமை மருத்துவமனையிலும், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் இருவருக்கும் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அவர்கள் வீடுதிரும்புவர்.
எந்தவொரு பாதிப்புக்குமே, மருத்துவ ஆலோசனைதான் முதன்மையே தவிர, பயமோ பதற்றமோ இல்லை.பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி
இவர்கள் உட்பட, சீனாவிலிருந்து தமிழகம் வந்த 242 பேருமே, அடுத்த 28 நாள்களுக்கு பிரத்யேக மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவர். இந்த 28 நாள் மருத்துவப் பின்தொடர்வு, இதுநாள் வரை தமிழகம் வந்த சீனப் பயணிகள் அனைவருக்குமே தரப்படும் பொதுவான விஷயம்தான் என்பதால், யாரும் பயமோ பதற்றமோ கொள்ள வேண்டாம்.

சளி, இருமல் தொந்தரவுக்கு, கொரோனா மட்டுமே காரணமாக இருக்காது. வேறு சாதாரண காரணங்கள்கூட இருக்கலாம். ஆகவே இருமல், தும்மல் என்றாலே கொரோனாவோடு தொடர்புபடுத்தி பதற்றமடையாதீர்கள். எந்தவொரு பாதிப்புக்குமே, மருத்துவ ஆலோசனைதான் முதன்மையே தவிர, பயமோ பதற்றமோ இல்லை. பதற்றமின்றி நிதானமாக எதையும் அணுகுங்கள். முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு, பிரச்னையைத் தடுக்க உதவுங்கள்" என்றார்.