Published:Updated:

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

முழுமையான வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
முழுமையான வழிகாட்டி

மனிதர்களிடையே இந்த நோய் புதிதாகப் பரவியதால் அதற்கு `கோவிட்-19' என்று பெயரிடப்பட்டது. கோவிட்-19 என்பது தற்போது பரவியுள்ள நோயின் பெயர்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

மனிதர்களிடையே இந்த நோய் புதிதாகப் பரவியதால் அதற்கு `கோவிட்-19' என்று பெயரிடப்பட்டது. கோவிட்-19 என்பது தற்போது பரவியுள்ள நோயின் பெயர்.

Published:Updated:
முழுமையான வழிகாட்டி
பிரீமியம் ஸ்டோரி
முழுமையான வழிகாட்டி

இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து கடக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் இந்தத் தொற்றை ‘கொரோனா’, ‘கோவிட்-19’, `SARS - CoV2' எனப் பலப் பெயர்களில் அழைக்கிறோம். ஒவ்வொரு பெயரின் பின்னால் இருக்கும் காரணங்களைத் தெரிந்துகொள்வது அவசியம். கொரோனா வைரஸ் என்பது மனிதகுலத்துக்குப் புதிது கிடையாது. அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) புள்ளிவிவரங்களின்படி ஏழு வகை கொரோனா வைரஸ் மனிதர்களைத் தாக்கிய தற்கான வரலாறு இருக்கிறது.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

அவற்றில் மூன்று விலங்குகளிடமிருந்து மரபணு மாறுபாடு (Genetic Variant) ஏற்பட்டு மனிதர்களுக்குப் பரவியுள்ளது. இத்தனை வகை கொரோனா வைரஸ் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை மூக்கு மற்றும் நுரையீரலின் மேற்பகுதி வரையுள்ள மேல்புற சுவாசப் பாதையில் சளி, தொண்டைவலி, தொண்டை கரகரப்பு போன்ற லேசான பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றுவிடும்.

தற்போது உச்சத்திலிருக்கும் `கோவிட்-19' தொற்று வௌவாலிடமிருந்து பரவியிருக்கலாம் என்றும், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டு கசிய விடப்பட்டிருக்கலாம் என்றும் இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. இவற்றில் எதையும் நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாததால் தொடர்ந்து அதுபற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

SARS-CoV2

உலகம் முழுவதும் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸின் வகையைக் கண்டறிந்து அதற்கு SARS-CoV2 என்று பெயரிடப்பட்டது. 2002 - 2003-ம் ஆண்டு பல்வேறு நாடுகளில் பரவி, சுவாச மண்டலத்தைத் தாக்கி SARS (Severe acute respiratory syndrome) என்ற நோயை ஏற்படுத்தியதும் ஒருவகை கொரோனா வைரஸ். அதே வகையைச் சேர்ந்த அடுத்த வைரஸ் என்பதால் தற்போது பரவும் கொரோனா வைரஸுக்கு SARS-CoV2 என்று பெயரிடப்பட்டது.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

கோவிட்-19 (COVID-19)

மனிதர்களிடையே இந்த நோய் புதிதாகப் பரவியதால் அதற்கு `கோவிட்-19' என்று பெயரிடப்பட்டது. கோவிட்-19 என்பது தற்போது பரவியுள்ள நோயின் பெயர். கோவிட்-19 என்ற பெயரையே அனைத்து இடங் களிலும் பயன்படுத்துமாறு மருத்துவர்களுக்கு உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டே வலியுறுத்தியிருந்தது.

COVID-19 என்பதில் ‘CO’என்பது கொரோனா என்பதன் சுருக்கம், ‘VI’என்பது வைரஸ் என்ற வார்த்தையின் சுருக்கம், ‘D’ என்பது நோய் என்பதைக் குறிக்கும். 2019-ம் ஆண்டு முதன்முதலில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டதால் (சீனாவில்) 19 என்ற எண்ணும் அதனுடன் சேர்க்கப்பட்டது.

இதை எளிமையாகப் புரிந்துகொள்வோம். என்ன வகை காய்ச்சல் என்று தெரிவதற்கு முன்பு ‘அவருக்கு காய்ச்சல்’ என்று பொதுவாகக் கூறுவோம் அல்லவா? அப்படித்தான் `கொரோனா வைரஸ்' என்பதும் அந்த வைரஸின் பொதுவான பெயர். SARS-CoV2 என்பது தற்போது பரவும் வைரஸின் சரியான பெயர். `கோவிட்-19' என்பது அந்த வைரஸ் பரப்பும் நோயின் பெயர்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

பாதுகாப்பு வழிமுறைகள்

கோவிட்-19 தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு ஆரம்பம் முதலே மூன்று முக்கிய வழிமுறைகள் கூறப்பட்டு வருகின்றன. மாஸ்க் அணிதல், கைகளைக் கழுவுதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய மூன்றும்தான். கைகளைச் சுத்தப்படுத்துவதற்கு சானிட்டைசர் நல்லது என்றாலும் தண்ணீர் இல்லாத இடங்களில் மட்டும் அதைப் பயன்படுத்தலாம். சோப் போட்டு கைகழுவுவதுதான் கைகளிலிருக்கும் வைரஸை அழிப்பதற்கு முழுமையான பலனை அளிக்கும். அதனால் ஒரு நாளைக்கு எத்தனை முறை முடியுமோ, அத்தனை முறை சோப் போட்டு கைகளைக் கழுவ வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

உலக சுகாதார நிறுவனத்தின் நெறிமுறைகளின்படி, வைரஸ் பரவலைத் தடுக்க குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி தேவை என்று குறிப்பிடப் பட்டுள்ளது. ஆனால், தற்போது காற்றில் பரவும் வைரஸ் 10 மீட்டர் வரை பரவலாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

மாஸ்க் அணிதல்

முதல் அலையின்போது சர்ஜிக்கல் மாஸ்க், துணி மாஸ்க், என்95 மாஸ்க் என எதாவது ஒன்றை அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டது. காற்றில் வைரஸ் பரவும் வேகம் சுமார் 60 சதவிகிதம் அதிகரித்திருப்பதால் இரண்டாம் அலையில் இரட்டை மாஸ்க், முடிச்சு போட்டு அணியும் சர்ஜிக்கல் மாஸ்க் ஆகிய இரண்டு முக்கிய விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது.

எப்படி அணிய வேண்டும்?

இரட்டை மாஸ்க் அணியும்போது முதலில் சர்ஜிக்கல் மாஸ்க்கை அணிந்து அதற்கு மேல் துணி மாஸ்க் போட வேண்டும். சர்ஜிக்கல் மாஸ்க்கில் உள்ள கம்பியை மூக்குப் பகுதியில் வைத்து அழுத்தி இறுக்கமாகப் பொருந்துமாறு செய்யவும். இரண்டு மாஸ்க் போட்ட பிறகு இயல்பாக சுவாசிக்க முடிகிறதா என்பதையும் உறுதிசெய்ய வேண்டும். இரட்டை மாஸ்க் அணியும்போது ஒரே வகையான இரண்டு மாஸ்க்குகளை அணியக் கூடாது. அதாவது இரண்டு சர்ஜிக்கல் மாஸ்க் அல்லது இரண்டு துணி மாஸ்க்குகளை ஒன்றாக அணியக் கூடாது. ஒரு சர்ஜிக்கல் மாஸ்க் அதற்கு ஒரு துணி மாஸ்க் என அணிய வேண்டும்.

ஒரு மாஸ்க்கைத் தொடர்ந்து இரண்டு நாள்கள் அணியக் கூடாது. சர்ஜிக்கல் மாஸ்க்கை ஒருமுறை பயன்படுத்திய பிறகு டிஸ்போஸ் செய்துவிட வேண்டும். துணி மாஸ்க்கை ஒருமுறை பயன்படுத்திய பிறகு துவைக்க வேண்டும். என்95 வகை மாஸ்க் அணிபவர்களுக்கு இரட்டை மாஸ்க் தேவையில்லை. சர்ஜிக்கல் மாஸ்க் மட்டும் அணியும்போது அதன் பக்கவாட்டில் இடைவெளி இல்லாத வகையில் இரண்டு புறமும் முடிச்சுப்போட்டு அணியும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எப்படிக் கையாள்வது?

அறிகுறிகள் தென்பட்டதும்...

1. இது கோவிட் தொற்றாக இருக்குமோ?

2. பரிசோதனையில் `பாசிட்டிவ்' என்று வந்துவிட்டால் என்ன செய்வது?

3. க்வாரன்டீன் காலத்தை எப்படித் தனியாகக் கையாள்வது?

4. என்னால் என் குடும்பத்தினர், நண்பர்களுக்கும் நோய் பரவிவிடுமோ? - இந்த நான்கு கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுவது இயல்புதான். எதிர்காலத்தில் நேரிடுவதைக் கையாள்வதற்கு உங்களைத் தயார்படுத்தும் விதமாகவே இதுபோன்ற உணர்வுகள் மனதில் எழும்பும். அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம்.

கோவிட்-19 தொற்று உறுதியானால்...

1. எளிதில் மீண்டுவிடுவேனா அல்லது நீண்ட நாள்கள் மாட்டிக் கொள்வேனா?

2. நான் இல்லாமல் என் குடும்பத்தினர் சமாளித்துவிடுவார்களா?

3. குடும்பம், பிள்ளைகளைப் பார்க்காமல் 14 நாள்கள் எப்படியிருப்பேன்?

4. மருத்துவமனையில் தனியாக எப்படியிருப்பேன்?

- இந்த 4 கேள்விகளை மனது எழுப்பும்போது அடுத்த கடினமான காலத்துக்கு ஏற்றாற்போல் உங்களை அட்ஜஸ்ட் செய்கிறது என்று அர்த்தம்.

தொற்று குணமாகியதும்...

1. இப்போதுதான் பழைய நான் மீண்டும் கிடைத்திருக்கிறேன்.

2. உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டும்.

3. க்வாரன்டீன் அல்லது மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பிறகுதான் நிம்மதியாக இருக்கிறது.

4. என் குடும்பத்தினருடன் மறுபடியும் சந்தோஷமான வாழ்க்கை..

- இதுபோன்ற பாசிட்டிவ் எண்ணங்கள் எழும். ஆனாலும் கோவிட்-19 பாதுகாப்பு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மறக்கக் கூடாது.

டாக்டர் பி.பரந்தாமன்
டாக்டர் பி.பரந்தாமன்

கொரோனா அறிகுறிகள் முதல் சிக்கலைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகள்வரை...

கொரோனா பாதிப்பின் அறிகுறிகளைச் சரியான தருணத்தில் கண்டறிவதுடன், அப்போதே சரியான முறையில் சிகிச்சை பெற்றால், பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி விரைவாக நலம் பெறலாம். அதற்கான முழுமையான வழிகாட்டுதல்களை வழங்குகிறார், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத் துவக் கல்லூரியின் மூத்த பேராசிரியரும் மருத்துவத்துறை யின் துறைத் தலைவருமான டாக்டர் பி.பரந்தாமன்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

கொரோனா அறிகுறிகள்

லேசான காய்ச்சலில் தொடங்கி அதிக காய்ச்சல் ஏற்படுவது, மூக்கடைப்பு, தும்மல், ஜலதோஷம், இருமல், தொண்டையில் கரகரப்பு, தொண்டை அடிக்கடி வறண்டுபோவது, சுவை மற்றும் வாசனை உணர்வு குறைவது, மிதமானது முதல் அதீத உடல்வலி அல்லது உடல் சோர்வு ஏற்படுவது, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்றவை பொதுவான அறிகுறிகள்.

கொரோனா முதல் அலையில், மேற்கண்ட அறிகுறிகள் வீரியத்துடன் இருந்தவர்களுக்கே கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டது. ஆனால், தற்போதைய இரண்டாவது அலையில் இந்தப் பொதுவான அறிகுறிகளுடன் காய்ச்சல், ஜலதோஷம், இருமல் ஆகிய பாதிப்புகள் லேசாகவே இருந்தாலும்கூட பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், பாதிப்பின் தீவிர தன்மையை உணர முடியாத வர்களுக்கு, அடுத்த சில தினங்களிலேயே திடீரென மூச்சுத்திணறல் அல்லது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு நிலைமை மோசமாகிறது. மருத்துவமனைக்கு வரும்போது இவர்களில் பலருக்கும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 50 – 80 (Oxygen Saturation Level - SpO2) சதவிகித அளவில் மிக மிகக் குறைவாக இருக்கிறது. பொதுவாக நம் உடலில் ஆக்ஸிஜன் அளவு 90 சதவிகிதத்துக்கும் கீழே சென்றாலே சிக்கல் ஏற்படும். அதற்கும் கீழ் சென்றால் நிலைமை எவ்வளவு சிக்கலாகும் என யூகித்துக்கொள்ளுங்கள்.

எனவே, மோசமான நிலைக்குச் செல்வதைத் தவிர்த்து, மிக விரைவாக அல்லது உரிய நேரத்திலேயே மருத்துவமனைக்குச் செல்வதால் தேவை யற்ற பதற்றத்தையும் பாதிப்பின் தீவிரத்தையும் தவிர்க்கலாம்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டியவை...

இயல்புக்கு மாறாக மூச்சு விடுவதில் லேசான சிரமம் ஏற்பட்டாலே, உடனடியாக சுதாரித்துக்கொண்டு மருத்துவரை அணுகலாம். தேவைப் பட்டால் சி.டி ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செய்து பார்க்கலாம். கொரோனா பாதிப்பு உறுதியானால் உடனடியாக உரிய சிகிச்சை பெற்று பாதிப்பின் வீரியத்தைக் கட்டுப்படுத்தலாம். சிக்கல் இல்லை எனில், தெளிவு பெற்று நிம்மதியடையலாம். இதேபோல திடீரென இருமல், காய்ச்சல் ஏற்பட்டு, அது அடுத்த சில தினங்களுக்குத் தொடர்ந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். லேசான அறிகுறிகள் இருக்கும்போதே விழிப்புடன் கணித்துவிட்டால் சிக்கல்களைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மூலமாக, நமது உடலின் ஆக்ஸிஜன் அளவை எளிதாக அறியலாம். இந்த ஆக்ஸிமீட்டரை வாங்க முடிந்தவர்கள், மேலே சொன்ன கொரோனா அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் மட்டும் ஆக்ஸிமீட்டரை விரலில் வைத்துச் சோதனை செய்து பார்க்கலாம். வழக்கமாக இருக்கும் அளவுக்குக் கீழே, அப்போது நமது உடலில் ஆக்ஸிஜன் அளவு இருப்பதாகக் காட்டினால், சிக்கல் இருப்பதாக உணர்ந்து மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். ஆக்ஸி மீட்டரை வாங்க முடியாதவர்கள், பொதுவான அறிகுறிகளுடன் இயல்புக்கு மாறான உணர்வுகள் இரண்டு நாள்களுக்கு மேல் நீடித்தாலே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வீட்டில் யாருக்காவது கோவிட் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, அவர் வீட்டிலேயே தனி அறையில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கும் போதும் அல்லது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதும் அல்லது சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பிறகும், அவருடைய மொத்த குடும்பத்தினரும் சில வாரங்களுக்காவது வீட்டைவிட்டு வெளியே செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கோவிட் அறிகுறிகள் உறுதியாகி, ஆக்ஸிஜன் அளவு குறைந்தால், உடல் சோர்வு ஏற்படும் வகையிலான வேலைகள் செய்வதைத் தவிர்த்து, முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும்.

கோவிட் அறிகுறி உள்ளவர் அல்லது கோவிட் சிகிச்சையில் இருப்பவரின் குடும்பத்தினர் ஒரே அறையில் பலரும் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். சில தினங்களுக்குப் படுக்கை அறையைத் தவிர்த்துவிட்டு, வரவேற்பறையில் இடைவெளி விட்டுத் தூங்குவது நல்லது. ஒரே குடும்பத்தில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களாக இருந்தாலும், நெருங்கிப் பேசுவதைச் சில தினங்களுக்குத் தவிர்க்க வேண்டும்.

ஏ.சி பயன்பாட்டைத் தவிர்த்துவிட்டு, ஃபேன் மட்டுமே பயன்படுத்து வதுடன், வெளிப்புறக் காற்று வீட்டுக்குள் வரும்படி ஜன்னல், கதவு களைத் திறந்து வைக்கலாம்.

சாதாரண காய்ச்சலா... கொரோனா அறிகுறியா?

வெயிலில் அலைந்தவர்களுக்குத் தலைவலி, தலைச்சுற்றல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் இருக்கக்கூடும். பருவநிலை மாற்றத்தாலும், உணவுமுறை மாற்றத்தாலும் சிலருக்கு அவ்வப்போது காய்ச்சல், ஜலதோஷம் உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். அப்படியான வர்களுக்கு, அதீத உடல்வலி ஏற்படாது. லேசான உடல்வலி ஏற்பட்டாலும் அது ஓரிரு தினங்களில் குறையத் தொடங்கும். மூக்கி லிருந்து சளி நீராகக் கொட்டும். தும்மல் அதிகம் இருக்கும். குரலில் மாற்றம் ஏற்படும். வாசனை மற்றும் சுவை அறிவதில் பெரும்பாலும் சிக்கல் இருக்காது.

கோவிட் அறிகுறியில், சளியாக மூக்கில் நீர் கொட்டுவது அதிகம் ஏற்படுவதில்லை. குரலிலும் மாற்றம் ஏற்படுவதில்லை. தொண்டைக் கரகரப்பு, தொண்டைவலி அதிகம் இருக்கும். உடல் வலியுடன், தலைவலியும் ஏற்படக்கூடும். வாசனை மற்றும் சுவை அறிவதில் பெரும்பாலானோருக்குச் சிக்கல் இருக்கிறது. கோவிட் பாதிப்பு ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோர், ‘வழக்கத்துக்கு மாறாக உடலில் வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டது’ என்கிறார்கள். இந்த உணர்வு, வழக்கமான காய்ச்சல், ஜலதோஷத்தில் ஏற்படுவதில்லை.

ஆரோக்கியமாக இருந்த நிலையில், திடீரென காய்ச்சல், ஜலதோஷம், அதீத இருமல் உள்ளிட்ட இயல்புக்கு மாறான உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டாலே உடனடியாக நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதும், மருத்துவரை அணுகுவதும் நல்லது. வீட்டுக்கு உள்ளேயும்கூட மாஸ்க் அணிந்துகொள்ளலாம்.

25 - 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்களா?

``கடந்த ஓராண்டுக்கும் மேலாக கோவிட் வார்டில் நான் பணியாற்றுவதால், தினமும் பலவிதமான அனுபவங்களைக் காண முடிகிறது. கொரோனா முதல் அலையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சைக்காக வந்தனர். இந்த இரண்டாவது அலையில் 25 - 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் சிகிச்சைக்கு வருகின்றனர். முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட்டது நல்ல பலன் கொடுத்துள்ளது. தவிர, வயதானவர்கள் பெரும்பாலும் வீட்டைவிட்டு வெளியே வருவதும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால், 25 – 45 வயதுக்குட்பட்டவர்கள் அதிகளவில் வெளியே வருகின்றனர். லேசான அறிகுறிகள் இருக்கும்போதே, இந்த வயதினர் சரியாகக் கணிக்கவும் தவறுகின்றனர். இவர்களுக்குத் தற்போதுதான் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. எனவேதான், இந்த நடுத்தர வயதினருக்கு அதிகளவில் கோவிட் பாதிப்பு ஏற்படுவதாக யூகிக்கப்படுகிறது'' என்கிறார் டாக்டர் பி.பரந்தாமன்.

குகானந்தம்
குகானந்தம்

கொரோனாவுக்கான சிகிச்சையும் ஆலோசனைகளும்...

கொரோனா இரண்டாம் அலைக்கு உருமாறிய வைரஸ் முக்கிய காரணியாகச் சொல்லப்பட்டாலும், மக்கள் முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாததுதான் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததற்கு பிரதான காரணம். கொரோனா இரண்டாம் அலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதியானால் என்ன செய்ய வேண்டும், சுய தனிமைப்படுத்தலில் வீட்டில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை என்ன என்பது பற்றித் தொற்றுநோய் மருத்துவர் குகானந்தம் பகிர்ந்துகொண்ட தகவல்கள்...

அறிகுறிகள் இருந்தால் செய்ய வேண்டியவை...

லேசான காய்ச்சல், தொண்டைவலி, சுவை மற்றும் மணம் தெரியாமை, சளி, மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு இப்படி ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே வீட்டில் இருக்கும் மற்றவர்களிடம் இருந்து உங்களைத் தனிமைப்படுத்தி, கொரோனா டெஸ்ட் எடுத்து விடுவது நல்லது. சிலர் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு பயந்துகொண்டு சி.டி ஸ்கேன் எடுக்கிறார்கள். இதில் கதிர்வீச்சு அதிகம் என்பதால் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை எடுப்பதே நல்லது. மருத்துவர்கள் பரிந்துரைத்தால் மட்டும் சி.டி ஸ்கேன் எடுக்கவும்.

கொரோனா அறிகுறிகள் இருக்கின்றன என்றவுடன் பதற்றம் கொள்ளாதீர்கள். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உரிய சிகிச்சை உரிய நேரத்தில் எடுத்துக்கொண்டால் கொரோனாவிலிருந்து மீண்டு வரலாம். எனவே, வீண் பயம் கொள்ளத் தேவையில்லை. சளி, காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் சிலர் மருத்துவர்களின் பரிந்துரைகள் இல்லாமல் அவர்களாகவே மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் காய்ச்சல் குணமாகலாம். ஆனால், நுரையீரல் பாதிப்பு குறைவது இல்லை.காலதாமதத்தால் நுரையீரல் பாதிப்பு அதிகம் அடைந்து ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்கும். எனவே, லேசான அறிகுறிகள் இருக்கும்போதே கொரோனா சோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது.

கொரோனா சோதனையில் ரிசல்ட் `பாசிட்டிவ்' என்று வந்தால் உங்களுக்கு அருகில் இருக்கும் Triage சென்டர்களை அணுக வேண்டும். அல்லது அருகில் இருக்கும் மாநகராட்சி அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் மருத்துவர்களின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் எந்தச் சிகிச்சைகளும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

தொடர் கண்காணிப்பு தேவையில்லை எனில், மருத்துவ ஆலோசனை பெற்று வீட்டிலேயே தனி அறையில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம். பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் பரிசோதிக்கும்போது ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 95-க்கு கீழ் இருக்கிறதென்றால் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். பிறப்பிலேயே மூச்சிரைப்பு நோய் உள்ளவர் களுக்கு இயல்பிலேயே ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கலாம். எனவே, வீண் பயம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுங்கள்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

ஹோம் க்வாரன்டீனிலில் இருப்பவர்கள் கவனத்துக்கு...

வீட்டில் தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் தனி அறை, தனி கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும். தனி கழிப்பறை இல்லாதபட்சத்தில் நோயாளிகள் பயன்படுத்திய கழிப்பறையை மற்றவர்கள் பயன்படுத்தும்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது அவசியம்.

கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொட்ட எந்தப் பொருளையும் சோப் போட்டு கழுவிய பிறகே மற்றவர்கள் தொடவோ, பயன்படுத்தவோ வேண்டும். வீட்டில் இருக்கும் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தனி தட்டு, டம்ளர் பயன்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்தி ஆக்ஸிஜன் அளவை செக் செய்துகொள்ள வேண்டும்.

நீங்கள் வாங்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் நல்ல பிராண்டுதானா... பேட்டரிகள் சரியான இயக்கத்தில் இருக்கின்றனவா என்பதை செக் செய்வது அவசியம்.

பெரியவர்களுக்குப் பயன் படுத்தும், பல்ஸ் ஆக்ஸி மீட்டரை எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. பல்ஸ் ஆக்ஸிமீட்டர் பயன்படுத்திய பிறகு கைகளை சோப் போட்டுக் கழுவி விடுவது நல்லது.

வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் அனைவருக்கும், கொரோனா தொற்று வீட்டுத் தனிமையிலேயே சரியாகிவிடும் என்று சொல்ல முடியாது. சில நேரம் மருத்துவமனையின் உதவியும் தேவைப்படலாம். ஆக்ஸிஜன் அளவு சிறிது சிறிதாகக் குறைந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் மருத்துவமனையை அணுகுவது நல்லது.

ஆரோக்கிய உணவுகள்

கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் சி மாத்திரைகள், ஜிங்க், மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். நுரையீரலைச் சுற்றியிருக்கும் கெட்டியான சளியை உடலில் உள்ள நீர்ச்சத்து இளக்கும். எனவே, அதிக அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் அறிகுறிகள் இருந்தாலும், இல்லையென்றாலும் 14 முதல் 21 நாள்கள்வரை தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

கோவிட் சரியான பின்...

டைபாய்டு, மலேரியா காய்ச்சல் வந்து சரியானால்கூட சில வாரங்கள் வரை உடல் பலவீனமாக இருக்கும் என்பது நமக்கெல்லாம் தெரியும். கொரோனா தொற்று வந்தவர்களுடைய உடலும் இப்படி பலவீனமாகத்தான் இருக்கும். அதனால், கோவிட் வந்து சரியான பிறகு, இரண்டு வாரங்கள் வரை முழு ஓய்வு எடுக்க வேண்டும்.

மாடிப்படி ஏறுவது, தண்ணீர்க்குடம் போன்ற கனமான பொருள்களைத் தூக்குவது, வீட்டு வேலைகள் செய்வது, நடைப்பயிற்சி என்று அனைத்து உடலுழைப்பையும் இரண்டு வாரங்கள் வரை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தொடர் உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள்கூட, கொரோனா வந்து சரியான பிறகு ஒரு மாதம் கழித்துதான் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

நீரிழிவு, பருமன், ரத்த அழுத்தம் போன்ற இணைநோய்கள் காரணமாக கொரோனா தொற்று வந்தவர்கள், அது சரியாகி, ஓய்வும் எடுத்த பிறகு, பிரச்னைகளைக் கட்டுக்குள் வைக்க ஆரம்பிக்க வேண்டும். செக்கப், மருந்து, உடற்பயிற்சி என்று வழக்கம்போல கவனமாக இருக்க ஆரம்பிக்க வேண்டும்.

காய்கறிகள், பழங்களோடு புரதச்சத்து அதிகமான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மாவுச்சத்தையும் எண்ணெய் அதிகம் சேர்த்துச் சமைத்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள், இனிப்பு குறைவான கொய்யா போன்ற பழங்களைச் சாப்பிடலாம். இணைநோய்கள் இருப்பவர்கள், ஊட்டச்சத்து ஆலோசகரின் ஆலோசனையைக் கேட்டு தங்கள் உணவுப் பழக்கத்தை அமைத்துக்கொள்வது நல்லது.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி
fpm

கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்த சந்தேகங்களும் பதில்களும்...

இந்தியாவில் அனுமதி பெற்று, பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகள் என்னென்ன?

இந்தியாவில் `கோவாக்ஸின்', `கோவிஷீல்டு' ஆகிய இரண்டு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. அவைபோக, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட `ஸ்புட்னிக் வி' என்ற தடுப்பூசியும் தற்போது மக்கள் பயன் பாட்டுக்கு வந்துள்ளது.

புதிதாக வந்துள்ள ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை என்ன? அது எங்கு கிடைக்கும்?

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை, ரூ.995.40 என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில், மத்திய, மாநில அளவில் மாற்றங்கள் இருக்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை. இதன் வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்ஷியஸுக்கும் கீழாகப் பராமரிக்கப் பட வேண்டும். ஆகையால் முதல் கட்டமாக, இந்தியாவின் 35 நகரங்களில் இந்தத் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைனஸ் 18 டிகிரி செல்ஷியஸுக்கும் கீழாகப் பராமரிப்பதற்கான வசதிகளை மற்ற பகுதிகளிலும் செய்துவிட்டால், விரைவில் அங்கும் இதைக் கொண்டு சேர்க்க முடியும் என்று டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோவின் மூலமாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்குப் பதிவு செய்ய முடியுமா?

கோவின் தளத்திலும் ஆரோக்கிய சேது செயலியிலும் ஸ்புட்னிக் தடுப்பூசி மூன்றாவதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதில் இதற்கும் பதிவு செய்ய முடியும்.

ஸ்புட்னிக் தடுப்பூசி எந்தளவுக்குச் செயல்திறன் மிக்கதாக இருக்கும்?

ஸ்புட்னிக் வி தடுப்பூசி, 91.6 சதவிகிதம் செயல்திறன் மிக்கதாக இருக்குமென்று சொல்லப்படுகிறது. மேலும் 60 நாடுகளிலுள்ள 2 கோடி மக்கள் இதுவரை இதை எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளும்போது முதல் டோஸ் மற்றும் இரண்டாம் டோஸ் மருந்துகளுக்கு இடையே எத்தனை நாள்கள் இடைவெளி இருக்கலாம்?

கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கும் இடையே 12 முதல்16 வாரங்கள் வரை இடைவெளி இருக்கலாம். அதுவே, கோவாக்ஸின் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் டோஸ்களுக்கு இடையே நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை இடைவெளி இருக்கலாம் என்று தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை இரண்டு டோஸ் மருந்துக்குமான இடைவெளி நிர்ணயிக்கப்பட்டுள்ள கால அளவைவிட அதிகமானால் என்ன செய்வது?

ஒருவர் முதல் டோஸ் போட்டுக்கொண்டு, 8 முதல் 10 வாரங்கள் வரை தாமதாகியிருந்தாலும்கூட, அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம். கால தாமதம் ஆவதால், முதல் டோஸ் தடுப்பூசியின் மருந்து திறனிழந்து போவதில்லை.

தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமா?

கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக்கொள்வது அவரவர் விருப்பம். ஆனால், உங்களையும் உங்களைச் சுற்றியிருப்போரையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள் அனைவரின் பாதுகாப்புக்காகவும் நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு, அது வேலை செய்ய எவ்வளவு நேரம் எடுக்கும்?

தடுப்பூசி போட்டவுடனே கொரோனா வைரஸுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் உடனே உருவாகிவிடாது. தொற்றுநோய்க்கு எதிரான எதிர்ப்பாற்றல் உருவாகச் சில வாரங்கள் எடுக்கும். அந்த இடைப்பட்ட காலகட்டத்தில், தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்கும் தொற்றுநோய் பாதிக்கலாம். ஆகவே, முகக் கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி ஆகியவற்றை, தடுப்பூசி போட்ட பிறகும் கூட தொடர்ந்து பின்பற்ற வேண்டியது அவசியம்.

தடுப்பூசியை எடுத்துக்கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா?

ஊசி போட்டுக்கொண்ட இடத்தில் வலி, தலைவலி, உடல்வலி, சளி, இருமல், வயிற்றுவலி, தலைச்சுற்றல், தசைவலி, காய்ச்சல், குமட்டல் போன்ற பக்க விளைவுகள் உருவாகலாம். ஆனால், இவை அனைத்துமே அனைவருக்குமே ஏற்பட்டு விடாது. அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து இவற்றில் ஏதாவதொன்றோ, ஒரு சில பக்க விளைவுகளோ உண்டாகலாம். ஒரு சிலருக்கு எவ்வித பக்க விளைவுமே இல்லாமலும் இருக்கும்.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகும் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுகிறதே. அப்படியென்றால், தடுப்பூசியை ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்?

கொரோனா தடுப்பூசி, தொற்றே ஏற்படாமல் தடுக்கும் என்று சொல்ல வில்லை. ஆனால், உயிரிழப்பு ஏற்படாமல் இது தடுக்கும். கோவிட்-19 உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளை இது குறைக்கும்.

சமூக வலைதளங்களில், கோவிட்-19 தடுப்பூசி எடுத்துக்கொண்டால், பெண்களின் கருவுறும் தன்மையை அது பாதிப்பதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையா?

இந்தக் கூற்று முற்றிலும் பொய்யானது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இப்போது பயன்பாட்டில் இருக்கும் எந்தத் தடுப்பூசியுமே கருவுறும் தன்மையை பாதிக்காது.

அனைத்து தடுப்பூசிகளுமே விலங்குகளின் மீது முதலில் பரிசோதிக்கப் பட்டு, அவற்றின் பக்க விளைவுகள் ஆராயப்பட்டுள்ளன. பின்னர் மனிதர் களிடையேயும் இவை பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் பிறகு, இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பானவைதான் என்பதை உறுதி செய்த பிறகே, அனுமதிக்கப்பட்டுள்ளன.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு, என்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்?

தடுப்பூசிகள் பாதுகாப்பானவைதான் என்று உறுதிசெய்துள்ளது சுகாதாரத் துறை. ஒருவேளை யாருக்காவது தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு, உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் செல்லலாம். அல்லது தடுப்பூசி எடுத்துக்கொண்ட பிறகு, கோவின் எஸ்.எம்.எஸ் மூலமாகப் பகிரப்படும் சுகாதாரத்துறை ஊழியர்களின் எண்ணுக்கு அழைத்துத் தெரிவிக்கலாம்.

தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு முன்னால் ஏதேனும் மருந்துகளைத் தவிர்க்க வேண்டுமா? எத்தனை நாள்களுக்குத் தவிர்க்க வேண்டும்?

அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒருவருடைய வழக்கமான மருந்துகளை அவர் தவிர்க்காமல் எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசி செலுத்துபவரிடம் நீங்கள் என்னென்ன மருந்துகளை எடுத்துக் கொள்கிறீர்கள் என்ற தகவலை மட்டும் தெரிவித்துவிடுங்கள்.

ரத்தம் உறையாமை பிரச்னை இருப்பவர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் கவனமாக இருக்க வேண்டுமென்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒருவருக்கு ரத்தம் உறையாமை பிரச்னை இருக்கிறதா என்பதை எப்படிக் கண்டறிவது?

ரத்தப் புற்றுநோய் போன்ற ரத்தம் உறையாமை பிரச்னை உள்ளவர்கள், அவர்களுடைய மருத்துவர்களிடம் தெரிவித்துவிட்டு, அவர்களுடைய கண்காணிப்பின் கீழ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இதயம் மற்றும் மூளையில் பிரச்னை உள்ள பலரும் ரத்தம் உறையாமை மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள், அந்த மருந்துகளைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டே தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளலாம். எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஹைப்பர் டென்ஷன், கிட்னி கோளாறு, இதயக் கோளாறு, நீரிழிவு ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா?

இத்தகைய பிரச்னைகள் இருந்தாலும், தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானதுதான். ஒருவேளை உங்களுக்கு ஏதேனும் குழப்பங்கள் இருந்தால், உங்களுடைய மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு, அவருடைய அறிவுரையின்படி செய்யலாம் என்று சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.

கோவிட் பாதித்து சிகிச்சை பெற்றுள்ள நபர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா?

கோவிட்-19 தொற்று பாதித்து குணமடைந்த பின்னர், அதற்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் வளர்ந்துவிடுமா என்பது இதுவரை தெரியவில்லை. ஆகவே, கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்த ஒருவர், குணமடைந்து நான்கு முதல் எட்டு வாரங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

ராம் கோபால் கிருஷ்ணன்
ராம் கோபால் கிருஷ்ணன்

கொரோனாவோடு இவற்றையும் கவனியுங்கள்...

- தொற்றுநோய் மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணன்

ரத்தக்கட்டிகள் உருவாகலாம்!

கொரோனா தொற்று வந்தவர்களுக்கு உடலில் ரத்தக்கட்டிகள் உண்டாகலாம். இதனால், உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். குறிப்பாக கால்களில் ரத்தக்கட்டிகள் உருவானால், அவை நுரையீரலை பாதிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால்தான், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் இருப்பதற்கும் மருந்து கொடுப்போம். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனபிறகும்கூட சிலருக்கு ரத்தக்கட்டி வரலாம். இந்த ரிஸ்க் இருக்கிற கொரோனா தொற்றாளர்களுக்கு, ரத்தக்கட்டி வராமல் இருப்பதற்கான மருந்தைப் பரிந்துரைப்போம்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி
MicroStockHub

நுரையீரல் பாதிக்கப்படலாம்!

பொதுவாக கொரோனா வந்தவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படலாம். ஆனால், அது மெள்ள மெள்ள இயல்புக்குத் திரும்பிவிடும். ஒரு சிலருக்கு மட்டும் நுரையீரல் சுருங்கிக்கொண்டே போகலாம். இதை நாங்கள் ‘post covid lungs fibrosis’ என்போம். கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கே இந்தப் பிரச்னை வருகிறது என்பதால், கோவிட் வந்த அனைவரும் பயப்பட வேண்டாம்.

இரண்டாம் கட்ட இன்ஃபெக்‌ஷன் ஏற்படலாம்!

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் சிலருக்கு ஸ்டீராய்டு மருந்துகள் தேவைப்படலாம். ஆனால், 10 நாள்களுக்கும் மேல் ஸ்டீராய்டு மருந்துகளைக் கொடுத்து வந்தாலோ, டபுள் டோஸ் கொடுத்தாலோ, இதனுடன் நோய் எதிர்ப்புத்தன்மையைக் கட்டுக்குள் வைக்கும் மருந்துகளைக் கொடுத்தாலோ இரண்டாம்கட்ட இன்ஃபெக்‌ஷன்ஸ், அதாவது பூஞ்சைத் தொற்றுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

மியூகோர்மைகோசிஸ்!

மியூகோர்மைகோசிஸ் வந்தால், மூக்கும் உதடும் கருத்துவிடுவதால், இந்தப் பிரச்னையை கறுப்பு பூஞ்சைத் தொற்று என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். கட்டுக்கடங்காத நீரிழிவு பிரச்னை இருப்பவர்களுக்கு மியூகோர்மைகோசிஸ் தொற்று வரும். இது பல காலமாக நடந்து கொண்டிருப்பதுதான். இந்த கொரோனா நேரத்தில் மியூகோர்மைகோசிஸ் பிரச்னை வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற 10 நோயாளிகளில் 9 நோயாளிகளுக்குக் கட்டுக்கடங்காத நீரிழிவும், கொரோனாவைக் குணப்படுத்துவதற்காக ஸ்டீராய்டு மருந்துகள் அதிகம் தரப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது.

லேசான கொரோனா தொற்று காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்குக்கூட சில மருத்துவர்கள் ஸ்டீராய்டு மருந்துகள் தருகிறார்கள். இப்படிச் செய்யக் கூடாது என்கிற மருத்துவ கைடு லைனை அனைத்து மருத்துவர்களும் பின்பற்ற வேண்டும்.

மியூகோர்மைகோசிஸ் வருகிற சிலருக்கு, அவர்களின் உயிரைக் காப்பாற்றக் கண்ணையோ, பற்களையோ அறுவை செய்து நீக்க வேண்டி வருகிறது. மூளை வரைக்கும் பூஞ்சைத்தொற்று பரவிவிட்டால் சம்பந்தப்பட்டவரைக் காப்பாற்றுவது இயலாமலும் போகிறது.

வெள்ளை பூஞ்சைத் தொற்று!

இதன் சரியான பெயர் கேண்டிடா. சின்ன குழந்தைகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுத்தால் நாக்கில் வெள்ளையாகப் படிந்துவிடும். ஐ.சி.யு.வில் இருக்கிற நோயாளிகளுக்கும் இந்தத் தொற்று வரும். மியூகோர்மைகோசிஸ் போல இது பயப்படக்கூடிய பிரச்னை இல்லை.

மஞ்சள் பூஞ்சைத் தொற்று!

இந்தப் பூஞ்சைத் தொற்று அரிதிலும் அரிதாக வருவது. இந்த கொரோனா காலத்தில் மஞ்சள் பூஞ்சை பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், இதற்கும் கொரோனாவுக்கும் இருக்கிற தொடர்புபற்றி இன்னமும் தெளிவாகவில்லை. அதனால், பயப்படாதீர்கள்.

பூர்ண சந்திரிகா
பூர்ண சந்திரிகா

மீண்டு வருவோம்...

- மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா

கொரோனா முதல் அலையின்போது, `எனக்கு வந்துவிடுமோ’ என்கிற பதற்றம்தான் பலருக்கும் இருந்தது. கொரோனா வந்தவர்களும் பெரும்பாலும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு மீண்டு வந்தார்கள். இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. ஆனால், இந்த இரண்டாவது அலையில் எல்லோரும் ஏதோ ஒருவகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதாவது, தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரோ, உடன் வேலைபார்ப்பவர்களில் ஒருவரோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிற அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களை நேசித்தவர் களை, தங்களால் நேசிக்கப்பட்டவர்களை கொரோனாவால் இழந்திருக்கிறார்கள். சில குடும்பங்கள், குடும்பத்தலைவனை/குடும்பத்தலைவியை இழந்திருக்கிறது. வேலைபார்ப்பவரை இழந்த குடும்பங்கள், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். எதிர்பாராத இளவயது மரணங்களை ஜீரணிக்க முடியவில்லை. இறந்தவர் களைத் தொட்டு அழ முடியாமல் கையறு நிலையில் இருக்கிறார்கள். மொத்தத்தில் இன்றைக்குப் பல குடும்பங்கள், புயல் வந்து கலைத்துப்போட்ட வீடு போல இருக்கிறது.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

இந்த இழப்புகளிலிருந்து மீண்டு வர முடியுமா என்றால், உடனடியாக முடியாது; ஆனால், மீண்டு வர வேண்டும். ஏனென்றால், இன்றைக்கு அது மட்டுமே நம் அனைவரின் கைகளிலும் இருக்கிற ஒரே வாய்ப்பு. `நான் மட்டுமே இழக்கவில்லை; என்னைப்போல் பலரும் இழந்துகொண்டிருக் கிறார்கள்’ என்பதை உங்கள் மனதிடம் சொல்லுங்கள். கொரோனா வந்து மீண்டவர்கள், நிகழ்காலத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீங்கள் மீண்ட அனுபவத்தைப் பகிர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கை கொடுங்கள்.

வேலைபார்த்தவரை இழந்த குடும்பங்களுக்கு எந்தெந்த வகைகளில் உதவலாம் என்று பாருங்கள்.

பெற்றோர்களை இழந்த குழந்தைகளை முறைப்படி பாதுகாப்பது தொடர்பாகச் செயல்படுங்கள்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

கொரோனாவால் உறவினர் பலியாகியிருந்தால், ‘அங்கு போகாமலிருப்பதுதான் இன்னும் சில மரணங்களைத் தவிர்க்கும்’ என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். `போவதுதான் முறை’ என்று இந்த நேரத்தில் அடம்பிடிக்காதீர்கள். உங்கள் வீட்டில் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியிருந்தாலும், `கட்டிக்கொண்டு அழ முடியவில்லை’ என்று வருத்தப்படுவதைவிட, குடும்பத்தில் இருக்கிற மற்றவரைக் காப்பது அவசியம் என்று உங்கள் மனதுக்கு ஆறுதல் சொல்லிக்கொள்ளுங்கள்.

கொரோனா தொடர்பான செய்திகளையும் வாட்ஸ்அப் ஃபார்வேர்டுகளையும் எந்நேரமும் பார்த்து பயந்து கொண்டிருக் காதீர்கள். பயம், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்.

இது கடினமான காலம்தான் என்றாலும், நாமும் மீண்டு வருவோம் என்று நம்பிக்கையுடன் இருங்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

உணர்வுகளைக் கையாளுங்கள்!

கோவிட்-19 நோய் உடல் ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு அதைப் பற்றிய அதீத பயம், மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்து கின்றனர். இதுபோன்ற சூழலில் உணர்வுரீதியாக வும் இந்த விஷயத்தைக் கையாள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்து கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிப்ஸ்!

  • பரிசோதனை முடிவுகளைப் பெறும்வரை எந்தவித முடிவுக்கும் வந்துவிடக் கூடாது என்பதில் பொறுமையுடன் உறுதியாக இருங்கள்.

  • குளிப்பது, சாப்பிடுவது, புத்தகம் படிப்பது போன்ற உங்கள் அன்றாட வேலைகளை எப்போதும் போல் செய்ய முற்படுங்கள். இயல்பான நிலையில் இருப்பது போன்ற உணர்வை இது ஏற்படுத்தும்.

  • குடும்பத்தினர், நண்பர்களுடன் செல்போன் மூலம் தொடர்பிலிருங்கள். கவலைகளை மனதுக்குள் அடக்கிவைக்காமல், வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • மருத்துவரின் ஆலோசனைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள். இது உங்கள் உடலுக்கு முன்னேற்றத்தைத் தருவதோடு, இதுபோன்ற கடுமையான சூழலில் உங்கள் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கான அலாரம் போன்றும் செயல்படும்.

  • சிகிச்சையில் அல்லது க்வாரன்டீனிலிருக்கும் இந்தக் காலகட்டம் என்பது உடலுக்கும் மனதுக்கும் நெருக்கடியான காலம். அந்த நேரம் என்பது உடல்நிலை சரியாவதற்கும் ஓய்வுக்குமான நேரம் என்பதை மட்டும் மனதில் நிறுத்துங்கள்.

  • `நான் கோவிட் நோயாளி' என்று உங்களை நீங்களே அடிக்கடி லேபிள் செய்துகொள்ளாதீர்கள். நேர்மறையான விஷயங்களை மட்டும் சிந்தியுங்கள்.

  • நோயிலிருந்து தற்போதுதான் மீண்டதால் உடலிலும் மனதிலும் பழைய உற்சாகம் இல்லை என்று வருத்தப்பட வேண்டாம். இந்த நேரத்திலும் பொறுமையாக நாள்களைக் கடத்துவது அவசியம்.

  • உங்கள் இயல்பான வாழ்க்கையில் என்னென்ன விஷயங்களைக் கடைப் பிடிப்பீர்களோ அவற்றை முடிந்த அளவு மீண்டும் செய்யத் தொடங்குங்கள்.

  • நோயுற்ற காலத்தில் மன ரீதியாக, உணர்வு ரீதியாக அந்தச் சூழலை எப்படி பாசிட்டிவ்வாக கடந்தீர்கள் என்பதையும் அடிக்கடி நினைத்துப் பாருங்கள்.

  • நோய் தொடர்பாக உங்களின் உணர்வுகளை, எண்ணங்களை நெகட்டிவ் வாகத் தூண்டும் விஷயங்களிடம் சற்று கவனமாக இருங்கள்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

காய்ச்சலில் கூடுதல் கவனம் தேவை!

  • விட்டுவிட்டு காய்ச்சல் ஏற்பட்டாலோ, ஐந்து நாள்களுக்கு மீறியும் காய்ச்சல் நீடித்தாலோ நிச்சயமாக மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள், மருத்து வரின் ஆலோசனை இன்றி, வீட்டில் இருந்தபடியே சுய வைத்தியங்களை மேற்கொள்ளக் கூடாது.

  • வழக்கமாக ஆக்ஸிஜன் அளவு 98 – 100 சதவிகிதம் (SpO2) உள்ளவர்களுக்கு, கோவிட் அறிகுறிகளுடன் ஆக்ஸிஜன் அளவு 94 சதவிகிதத்துக்குக் கீழே சென்றால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவை. இதை மருத்துவரே முடிவு செய்வார்.

  • நாமும் நமக்கு அருகில் இருப்பவரும் மாஸ்க் அணிந்திருந்தாலும்கூட, ஒருவரிடம் நான்கு நிமிடங்களுக்கு மேல் மிக அருகில் இருந்தவாறு பேசக் கூடாது. ஒருவருக்கும் மற்றொருவருக்குமான இடைவெளி குறைந்தபட்சம் ஆறு அடி களாவது இருப்பது நல்லது.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி
Toa55

ஆக்ஸிஜன் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

உடல்நலனை பாதிக்கும் வகையிலான தீய பழக்கங்கள் ஏதும் இன்றி, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு, ரத்தத்திலுள்ள ஆக்ஸிஜன் அளவு (Oxygen Saturation Level – SpO2) இயல்பாகவே 98 – 100 சதவிகிதம் (Normal Level) இருக்கும். 98 – 94 சதவிகிதம் இருந்தால், மிதமான அளவு (Mild Level). 94 - 90 சதவிகிதம் இருப்பவர்களுக்கு நடுத்தர அளவு (Moderate Level). ஆக்ஸிஜன் அளவு 90 சதவிகிதத்துக்கும் கீழே சென்றால் சுவாச பாதிப்பு அதிகமாக (Severe Level) இருக்கும். இந்த அளவுகோலை உலக சுகாதார நிறுவனம் வரையறை செய்துள்ளது.

நாள்பட்ட ஆஸ்துமா, அதிக அளவில் புகை பிடிப்போருக்கு ஆக்ஸிஜன் அளவு 88 – 94 சதவிகித அளவுக்குக் கீழ் இருக்கக்கூடும். வயதானவர்களுக்கு ஆக்ஸிஜன் அளவு 96 – 97 சதவிகிதமாக இருக்கக்கூடும். உடல்நிலை பாதிப்புகளைப் பொறுத்து, ஒவ்வொருவருக்குமான ஆக்ஸிஜன் அளவு வேறுபடும். பொதுவாக 95 சதவிகிதத்துக்கு கீழ் ஆக்ஸிஜன் அளவு சென்றாலே, ஒருவரின் உடல்நிலையில் இயல்புக்கு மாறான ஏதோ பாதிப்பு இருக்கக்கூடும். எனவே, நமது உடலின் ஆக்ஸிஜன் அளவு சரியான அளவில் இருப்பதை உறுதிசெய்வது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்.

கொரோனா 2.0 - மீள்வோம்... மீட்போம்! - முழுமையான வழிகாட்டி

ஆவி பிடித்தல் தீர்வு தருமா?

கொரோனா பாதிப்பு நுரையீரலைச் சுற்றி யிருக்கும் ரத்தக் குழாய்களைப் பாதிக்கும் அதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சாதாரண சளி, மூக்கடைப்பு போன்றவற்றில் இருந்து மீள கைகொடுக்கும் ஆவிபிடித்தல் கொரோனாவுக்கு எந்தப் பலனும் தராது. அதற்குப் பதிலாக வெந்நீரால் வாய் கொப்பளித் தல், மூக்கினை சுத்தம் செய்தல் போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வந்தால் வைரஸின் தாக்கம் சற்று குறையும். இவற்றையெல்லாம்விட, கொரோனா குறித்த அரசின் விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து கொரோனாவிலிருந்து நாமும் பாதுகாப்பாய் இருப்போம். மற்றவர் களையும் காப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism