இந்தியாவில் கொரோனாவின் ஓராண்டு: `பிரேசில் அலெர்ட்' முதல் மெத்தனம் வரை... இனியும் அபாயம் தொடர்கிறதா?

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் முழு வருடத்தை கடந்திருக்கிறோம். இந்நிலையில் கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் உலகம் எந்த நிலையில் இருந்தது என்பதையும், தற்போது 2021-ல் பெருந்தொற்றின் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதையும் ஒப்பீடு செய்வோம்.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி...
சீனா அதன் ஹூபை மாகாணத்தில் உள்ள வுகான் எனும் நகரில் பலருக்கும் நுரையீரலைத் தாக்கும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பதையும், புதிய வகை கொரோனா வைரஸ்தான் அதற்கான காரணம் என்பதையும் வெளி உலகுக்கு அறிவித்தது.
ஜனவரி 4, 2020
உலக சுகாதார நிறுவனம் தன் அதிகாரபூர்வ வலைதளத்தில், முதன்முறையாக கொரோனா வைரஸ் காரணமாக வுகானில் பரவி வரும் நிமோனியா குறித்து பதிவு செய்தது.

ஜனவரி 12, 2020 அன்று சீனாவைச் சேர்ந்த மரபணு ஆராய்ச்சியாளர்கள் புதிய கொரோனா வைரஸின் மொத்த மரபணுக்கூறையும் வெளி உலகுக்கு அறிவித்தார்கள்
ஜனவரி 14 வரை, இந்தத் தொற்று மனிதர்களுக்கிடையே பரவும் வாய்ப்பு மிகக் குறைவு என்றே கூறப்பட்டு வந்தது. ஜனவரி 22, 2020 அன்று தனது அறிவியலாளர்கள் வுகானில் மேற்கொண்ட ஆய்வுக்குப் பிறகு, உலக சுகாதார நிறுவனம் தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது.
இந்தப் புதிய கொரோனா வைரஸ் மனிதர்களிடையே எளிதில் பரவி நோய் உண்டாக்கக்கூடியது என்று அறிவித்தது.
சீனாவின் ஹூபை மாகாணத்தில் வீரியமாக கொரோனா பரவியதை அடுத்து 1 கோடி பேர் வாழும் வுகான் நகரம் லாக்டௌன் செய்யப்பட்டது. இத்தகைய வரலாறு காணாத தனிமைப்படுத்துதல் நிகழ்வானது உலகின் கவனத்தை ஈர்த்தது. உலகின் பல நாடுகளும் சீனாவிலிருந்து தங்கள் நாடுகளுக்கு வரும் மக்களை எச்சரிக்கையுடன் ஆய்வு செய்யத் தொடங்கின.
ஜனவரி 30, 2020 அன்று நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த உலக சுகாதார நிறுவனம் கொரோனா தொற்றை PHEIC (Public Health Emergency of International Concern) என்று அறிவித்தது. அதாவது, சர்வதேச நாடுகள் அனைத்திலும் பொது சுகாதாரம் சார்ந்த அவசர நிலையை பிரகடனப்படுத்தியது.
அதே நாளான 30.1.2020 அன்று இந்தியாவின் முதல் கொரோனா தொற்று பெற்றவராக கேரளாவைச் சேர்ந்த 20 வயதுப் பெண் கண்டறியப்பட்டார். அவர் ஜனவரி 23-ம் தேதி வுகானில் இருந்து இந்தியா திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஜனவரி மாதம், கொரோனா தொற்று வுகான் நகரை மட்டுமே சூழ்ந்திருந்த கொள்ளை நோயாக மட்டுமே இருந்தது. இதை Epidemic என்று கூறினோம்.
வெறும் ஒற்றை இலக்கில் மட்டுமே மரணங்கள் நிகழ்ந்திருந்தன. சீனா அன்றி வேறு நாடுகளில் கொரோனா மரணங்கள் நிகழத் தொடங்கியிருக்கவில்லை. கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கையிலும் சரி... கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கையிலும் சரி... சீனா மட்டுமே முழு முதல் பெயராக இருந்தது. உலகமே சீனாவை வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த காலம் அது எனலாம்.

இதோ... சரியாக ஒரு வருடம் கழிந்த நிலையில், தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை உலகளவில் 10,08,53,000 பேர். ஆம்... எங்கோ வுகானில் 40 பேருக்கு இருந்த தொற்று, விமானங்கள் மூலம் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகி, ஒரு வருடத்தில் 10 கோடி பேரை தாக்கியிருக்கிறது.
இந்தப் பெருந்தொற்றின் வீரியம் மேலை நாடுகளில் இன்னும் குறைந்தபாடில்லை. கடந்த ஆண்டு (2020) ஜனவரியைப் பொறுத்தவரை மொத்தமே சேர்த்து 1,000 பேர் கூட இறந்திருக்கவில்லை. ஆனால், தற்போதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவிட்-19 நோயால் இறந்தோரின் எண்ணிக்கை 21,67,000.
கடந்த ஜனவரி மாதம் மருத்துவ உலகுக்கு இந்தத் தொற்றை எப்படி எதிர்நோக்குவது என்பது குறித்த எந்தத் திட்டமும் இல்லாமலே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் இந்தப் பெருந்தொற்று அவர்களது நாடுகளுக்கு வராது என்றே பல நாடுகளும் நினைத்துக்கொண்டிருந்தன. சில நாடுகள், தங்கள் நாட்டில் நிலவும் வெப்பம் நிச்சயம் தங்களைக் காக்கும் என்றே நம்பினர். ஆனால், அனைத்து மூடநம்பிக்கைகளையும் தகர்க்கும் வண்ணம் உலகில் எங்கெல்லாம் மனிதக்காலடி பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் கொரோனாவும் பரவியது. என்றாலும், கடந்த ஜனவரி அன்று இருந்த நிராயுத பாணியான நிலைமையில் இன்று நாம் இல்லை.
சென்ற ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, தெற்காசிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் கூடியது. இதன் விளைவாகப் பல நாடுகளும் முன்னனி மருந்து நிறுவனங்களும் கைகோத்து தடுப்பூசிகளைக் கண்டறியும் முனைப்பில் இறங்கின.
அதன் பயனாக இன்று ஃபைசர்/பயோஎன்டெக் நிறுவனம் கண்டறிந்துள்ள மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பூசி, மாடர்னா நிறுவனம் கண்டறிந்துள்ள மெசஞ்சர் ஆர்.என்.ஏ தடுப்பூசி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள AZD1222 தடுப்பூசி, ரஷ்யாவின் கேமாலயா நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசி, சீனாவின் சினோபார்ம் மற்றும் சினோவேக் தடுப்பூசிகள், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசி எனப் பல நோய்த் தடுப்பு ஊசிகள் அமலுக்கு வந்துவிட்டன.

இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் 6.6 கோடி பேருக்கு தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. உலக நாடுகளுள் இஸ்ரேல் தன் மக்களுக்கு வெகுவேகமாக தடுப்பூசியை வழங்கி வருவதில் முன்னணியில் இருக்கிறது. கிட்டத்தட்ட தன் மக்கள் தொகையில் ஒவ்வொரு 100 பேரில் 50 பேருக்கு தடுப்பூசியை வழங்கிவிட்டது. இதனால் அங்கே 60 வயதுக்கு மேற்பட்ட வயதினரிடையே கொரோனா தொற்று ஏற்படும் விகிதம் 60% குறைந்துள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன
இந்தியாவும் ஜனவரி 3, 2021 அன்று கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர கால முன் அனுமதி வழங்கியது. இதில் கோவிஷீல்டு என்பது ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் இந்தியப் பதிப்பு. இதற்கு 70.4% நோய் தடுக்கும் செயல்திறன் இருப்பதாக இடைக்கால ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கோவாக்சின் தற்போது மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கிறது. இருப்பினும் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் இதற்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் திறன் இருப்பதாகவும் பாதுகாப்பானதாக இருப்பதாகவும் இருப்பதாகச் சான்றளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் 20 லட்சம் பேருக்கும் மேற்பட்ட மருத்துவ முன்களப் பணியாளர்கள் மேற்சொன்ன இரண்டில் ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 73,953 பேர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். உலகமே கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில், கொரோனா வைரஸ் தன்னகத்தே பல உருமாற்றங்களை அடைந்து வருகிறது. அவற்றில் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இத்தகைய தொடர் உருமாற்றங்களால் கொரோனா வைரஸ் பரவும் தன்மையிலும் நோய் உண்டாக்கும் திறனிலும் மாற்றங்கள் உண்டாகக்கூடும். மேலும், இந்த மாற்றமடைந்த வைரஸுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுவரை நிகழ்ந்த மாற்றங்கள் யாவும் தடுப்பூசியின் நோய் தடுக்கும் தரத்தைப் பாதிக்காத அளவில் உள்ளன என்பது மட்டுமே இப்போதைக்கு மகிழ்ச்சி.
இந்நிலையில், இந்தப் பெருந்தொற்று ஜனவரி 2020 அன்று ஆரம்பமான சீனாவில், டிசம்பர் 2020 முதல் மீண்டும் தொற்றாளர்கள் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகமாகி வருகிறது. இதற்கு வெளிநாட்டிலிருந்து வரும் உணவுப் பொருள்களும் மனிதர்களுமே காரணம் என்று சீனா கூறுகிறது. இந்த அசாதாரண நிலையை சமாளிக்க நாங்கோங் எனும் நகரில் 1,500 பேர் தங்கி சிகிச்சை பெறும் தற்காலிக மருத்துவமனையை ஐந்தே நாள்களில் கட்டிமுடித்துள்ளது சீனா.
மேலும் சிஜியாசுவாங் எனும் நகரில் 3,000 பேர் தங்கி சிகிச்சை பெறும் வண்ணம் பெரிய மருத்துவமனையை கொரோனாவுக்கென பிரத்யேகமாக எழுப்பி வருகிறது. கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் பீஜிங் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மீண்டும் லாக்டௌன் அறிவித்தது சீன அரசு.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா பெருத்தொற்றின் இரண்டாம் அலை மோசமாக வீசி வருவதையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இருப்பினும் இந்தியாவில் தொற்றின் வீரியமும் கொரோனா மரணங்களும் கணிசமான அளவு தற்போது குறைந்திருக்கிறது. எனினும், இரண்டாம் அலை குறித்த அச்சம் இப்போதும் முழுமையாக நீங்கவில்லை.
கொரோனாவுக்கு எதிராக, மருத்துவ அறிவியல் சிறப்பான சிகிச்சை முறைகளைக் கண்டறிந்து மரணங்களை வெகுவாகக் குறைக்க அரும்பாடுபட்டு வருகிறது.
இரண்டாம் அலை குறித்த பேச்சுகள் இந்தியாவில் கிட்டத்தட்ட குறைந்துவிட்ட சூழ்நிலையில், பொதுவெளியில் முகக்கவசம் அணிவது மிகவும் அரிதாகிவிட்ட நிலையில், சிறு / பெரு விழா மற்றும் வைபவங்களில் மக்கள் கூடுவது அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், நாமும் ஒருவகை `COVID COMPLACENCY' (கோவிட்டை வென்ற தன்னிறைவு உணர்வு) எனும் மெத்தனப்போக்குக்குள் நுழைந்துவிட்டோம்.
இந்நிலையில், பிரேசில் உலகத்திற்கு அவசர செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. 27.1.2021 தேதியிட்ட லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள, மனவ்ஸ் (Manaus) நகரின் தற்போதைய நிலை பற்றிய கட்டுரை நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றது.

பிரேசில் நாட்டில் உள்ள அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரம், மனவ்ஸ். 20 லட்சம் மக்கள் வாழும் ஊர். கடந்த 2020 ஏப்ரல், மே மாதங்களில் கொரோனாவின் முதல் அலை வாரி அடித்துச்சென்ற ஊர் இது. கிட்டத்தட்ட 76%-க்கும் அதிகமான மக்களுக்கு தொற்று ஏற்பட்டு, மந்தை எதிர்ப்பாற்றல் (Herd Immunity) வந்துவிட்டது என்று பேசப்பட்ட ஊர்.
கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட முதல் அலைக்குப் பிறகு நவம்பர் மாதம் வரை உள்ள ஏழு மாதங்களில், அடுத்த அலையின் எந்த அறிகுறியும் இன்றி அமைதியாகவே இருந்துள்ளது மனவ்ஸ். இந்நிலையில் திடீரென்று டிசம்பர் மாதம் முதல் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுபாட்டை மீறிச் சென்றது.
2020 மே மாதம் 338 பேர் மரணமடைந்ததுதான் கொரோனா முதல் அலையில் மனவ்ஸில் ஏற்பட்ட அதிகபட்ச ஒரு மாத உயிரிழப்பு எண்ணிக்கை. ஆனால், 2021 ஜனவரி மாதத்தின் முதல் மூன்று வாரங்களுக்குள்ளாகவே 1,333 பேர் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு அங்கு உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு முந்தைய அலையை விட மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.

மேலும், வெறும் ஒரு மாதத்திற்குள் திடீரென அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் உள்ளிட்ட 30 மருத்துவமனைகளும் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்யும் கம்பெனி ஸ்தம்பித்து நிற்கிறது.
மக்கள் தங்களது உறவினருக்கு வேண்டிய ஆக்சிஜனை நிரப்ப வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். இருப்பினும் ஆக்சிஜன் கிடைப்பது உறுதியற்ற நிலையிலேயே உள்ளது.
மனவ்ஸில் முதல் லாக்டௌன் 2020 மார்ச் மாதம் போடப்பட்டது. ஜூன் மாதம் முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. பிறகு ஜூலை மாதம் முதல் மெல்ல மெல்ல தளர்வுகள் வழங்கப்பட்டன. நவம்பர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. நவம்பர் இறுதியில் பொழுதுபோக்கு ஸ்தாபனங்கள் திறக்கப்பட்டன. டிசம்பர் இறுதியில் இருந்து இரண்டாம் அலை ஆரம்பித்தது.
ஜனவரி மாதம் மருத்துவமனைகள் ஸ்தம்பிக்கும் அளவு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.
இதற்கான காரணங்களாகக் கூறப்படுவது...
* முகக்கவசத்தை மக்கள் மறந்தது
* அளவுக்கு மீறிய ஊரடங்கு தளர்வு
* மக்களிடம் கோவிட் குறித்த அலட்சியம்
* ஆட்சியாளர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை
* கொரோனா வைரஸ் P.1 எனும் புதிய உருமாற்றம் அடைந்து வேகமாக பரவுவது, மற்றும் வீரியத்துடன் இருப்பது
இந்தச் செய்தியை நான் பகிர்வது மக்களை அச்சமூட்ட இல்லை, எச்சரிக்கவே.
மனவ்ஸ் நிலை நாளை நமது ஊருக்கு நேராமல் நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும். நிலைமை கைமீறும் முன் நாம் எச்சரிக்கை கொள்ள வேண்டும்.மேற்கூறியவற்றைத் தொடர்ச்சியாக நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் 2021-ன் மத்தியப் பகுதிக்குள் செல்லும்போது நம்மால் கொரோனாவை முழுமையாக வென்று வாகை சூடிட முடியும் என்று நம்புகிறேன். மேற்கூறியவற்றைத் தொடர்ச்சியாக நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் 2021-ன் மத்தியப் பகுதிக்குள் செல்லும்போது நம்மால் கொரோனாவை முழுமையாக வென்று வாகை சூடிட முடியும் என்று நம்புகிறேன்.
எனவே, கொரோனா தொற்றெனும் சவால் நம்மை விட்டு நீங்கவில்லை என்பதை உணர்வோம். அதுவரை இந்தத் தொற்றை கட்டுக்குள் வைக்க வழிமுறைகள் இதோ...
1. முகக்கவசம் அணிதல்.
2. சோப் போட்டு கை கழுவுதல்.
3. தனிமனித இடைவெளியைப் பேணுதல்.
4. தொற்று அறிகுறிகள் இருப்பின் தனிமைப்படுத்திக்கொள்ளுதல்.
5. தொற்றின் அறிகுறிகளை புறக்கணிக்காமல் உடனே சிகிச்சை பெறுதல்.
4. நமது முறை வரும்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல்.
5. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தல்.

மேற்கூறியவற்றைத் தொடர்ச்சியாக நாம் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் 2021-ன் மத்தியப் பகுதிக்குள் செல்லும்போது நம்மால் கொரோனாவை முழுமையாக வென்று வாகை சூடிட முடியும் என்று நம்புகிறேன்.