Published:Updated:

கொரோனா அச்சத்தால் ரத்தான கொரோனா மாநாடுகள்... நடுங்கும் நியூயார்க்!

கொரோனா
கொரோனா

நியூயார்க்கில் உச்சக்கட்ட பாதுகாப்போடு ஏற்பாடு செய்யப்படும் கொரோனா வைரஸ் நிகழ்ச்சிகள்.

கோவிட் - 19 கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, உலகம் முழுக்கவுள்ள மருத்துவர்கள் அனைவரும் சொல்லும் முக்கியமான விழிப்புணர்வு விஷயம், `மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்' என்பது. இந்த கோவிட் -19 கொரோனா தொற்றானது, காற்றின் வழியே சாதாரண இருமல், தும்மலின் வழியாகக்கூடப் பரவிவிடும் என்பதாலேயே மருத்துவர்கள் இதை வலியுறுத்தி வருகின்றனர்.

நியூயார்க்
நியூயார்க்

கொரோனா வைரஸை அழிப்பதற்கான மருந்துகள் யாவும் இன்னும் ஆய்வு நிலையிலேயே இருந்துவரும் சூழலில், வரும் வெள்ளிக்கிழமையன்று `கொரோனாவும் வணிகமும்' என்ற தலைப்பில் நியூயார்க்கில் வட்டமேசை மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மாநாட்டுக்கு அதிகம் பேர் கூடுவார்கள் என்பதால், தற்போது அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா குறித்துப் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாநாடு, தற்போது கொரோனாவாலேயே நிறுத்திவைக்கப்பட்டது, அங்கு வசிக்கும் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

`சீனாவில் 70% கொரோனா நோயாளிகள் குணமாகி வீடு திரும்புகின்றனர்!' - உலக சுகாதார  நிறுவனம்

இதற்கு முன்னராக கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டிருந்த அமெரிக்காவின் தனிநபர்கள் கலந்துகொள்ளவிருந்த மற்றொரு மாநாடும் (InPerson Conference) ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் நாள்களில் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நியூயார்க்கின் வருடாந்தர ஆட்டோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படும் அல்லது ஒத்திவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conference
Conference

இப்படி ஒத்திவைக்கப்படும் மாநாடுகள் அனைத்தும், கொரோனா கட்டுக்குள் வந்த பிறகே தொடங்கப்படும் எனக் கூறியுள்ளனர் நியூயார்க் அதிகாரிகள். பொதுவெளிகளில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க, நியூயார்க் முழுவதும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக நியூயார்க்கின் ஆளுநர் ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மற்ற நகரங்களைவிடவும், நியூயார்க்குக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படக் காரணம், அமெரிக்காவிலேயே அதிகக் கொரோனா தொற்று நோயாளிகளைக் கொண்டுள்ள நகரம் நியூயார்க்தான்! ஆம், இதுவரையில் நியூயார்க்கில் 176 பேருக்குக் கொரோனா தாக்கம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவையாவும் ஒருபுறமிருக்க, நியூயார்க் மெட்ரோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் யாவும், உச்சக்கட்ட பாதுகாப்புக்கு மத்தியில் எந்தவிதத் தடையுமின்றி ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு

நியூயார்க் உட்பட, அமெரிக்காவின் அனைத்துப் பகுதிகளிலும் இதுவரை 50-க்கும் மேற்பட்ட பெரு நிறுவன நிகழ்ச்சிகள் ரத்துசெய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் மக்கள் கலந்துகொண்டிருந்தால், 10 லட்சம் பேர் ஆங்காங்கே ஒன்றுதிரண்டிருப்பர் என்றும், அது இப்போது தவிர்க்கப்பட்டுள்ளதென்றும் செய்தித் தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு