Published:Updated:

நீராவி சிகிச்சை முதல் ட்ரம்ப் சொன்ன டிஸ்இன்ஃபெக்டன்ட் ஐடியா வரை - இன்ஃபோடெமிக்ஸை நம்பலாமா?

இன்ஃபோடெமிக்ஸ்
இன்ஃபோடெமிக்ஸ்

`கொரோனா வைரஸ், இன்ஃபோடெமிக்ஸ்' - உலகை அச்சுறுத்தும் கண்ணுக்குத் தெரியா இரண்டு எதிரிகள்.

சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, இதுவரை உலக மக்கள்தொகையில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இறப்புகளையும் இந்த நோய் ஏற்படுத்தியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் இவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் இந்த நோய் பாதிப்பு, `இனி வரப்போகும் நாள்களில் இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்' எனக்கூறி சமீபத்தில் மக்களை எச்சரித்திருந்தார், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ராஸ் அதேனோம்.

டெட்ராஸ் அதோனாம்
டெட்ராஸ் அதோனாம்

அடுத்தடுத்த பேட்டிகளில், உலகளாவிய இந்த நோய்த் தொற்றை எதிர்கொள்வதில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகக் குறிப்பிட்டார் டெட்ராஸ். நோய் குறித்து பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருவதையும், இந்தத் தகவல்கள் வைரஸை விடவும் வேகமாகப் பரவுவதையும் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார். தவறான தகவல்களைப் பரப்புவதை, ஆங்கிலத்தில் இன்ஃபோடெமிக் என்றும், இது தொடரும்போது மிகவும் ஆபத்தான விஷயமாக மாறிவிடும் என்றும் கூறுகின்றனர் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவியலாளர்கள்.

இன்ஃபோடெமிக் ஏன் ஆபத்தானது?

இன்ஃபோடெமிக் என்பது, `தீர்வுகளைச் சிக்கலாக்கும் அளவுக்கதிகமான தகவல்' எனப் பொருள்படும். எந்தவொரு நோய்குறித்தும், அளவுக்கதிகமான தகவல்கள் பரப்பப்பட்டால், மக்களுக்கு நோய்குறித்த குழப்பம் அதிகரித்துவிடும் அபாயம் உள்ளது. அந்தக் குழப்பம் அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுசெல்லும் ஆபத்தும் உள்ளது. அந்தத் தவறான பாதை, நோய் பாதிப்பை மக்கள் மத்தியில் தீவிரப்படுத்தி, மக்களின் உயிரோடு விளையாடிவிடும்.

இன்ஃபோடெமிக்ஸ்
இன்ஃபோடெமிக்ஸ்

இந்த இன்ஃபோடெமிக் எதிர்ப்பு விஷயத்தில், கொரோனா வைரஸ் தடுப்புக்காகச் செயல்படும் ஐக்கிய நாடுகளின் மருத்துவ அமைப்பு, உலக சுகாதார நிறுவனத்துக்கு தற்போது ஆதரவு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் அந்தோனி, தனது ட்விட்டர் பதிவில் ``நம்முடைய பொதுவான எதிரி, வைரஸ்தான் என்றபோதிலும், அந்தப் பட்டியலில் 'பரப்பப்படும் தவறான தகவல்கள்' என்பதையும் இனி நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், இந்த கோவிட் - 19 பேண்டெமிக்கில், நமக்கு இனி இரண்டு எதிரிகள் உள்ளன" எனக்கூறி வேதனை தெரிவித்திருந்தார்.

``மருத்துவ வசதிகளையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவது போலவே, அறிவியல் ரீதியான உண்மைகளை அனைவரும் அதிகம் பகிர வேண்டும். மீள்தல் குறித்த நம்பிக்கையையும் ஒற்றுமையையும் மக்கள் ஒருவருக்கொருவர் இனி விதைக்க வேண்டும்" என இதற்கான தீர்வுகளையும் அவர் சொல்கிறார்.

ஐ.நா அவை மட்டுமன்றி, உலகின் மூத்த அறிவியலாளர்கள் பலரும்கூட, கடந்த சில தினங்களாக இன்ஃபோடெமிக் பற்றிப் பேசி வருகிறார்கள். இன்ஃபோடெமிக் விஷயத்தில், சாதாரண இணையதளவாசி தொடங்கி உலக நாடுகளின் தலைவர்கள் வரை ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதையும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். `நீராவி பிடித்தால் கொரோனா வைரஸை அழித்துவிடலாம்' என சாமானிய இணையதளவாசியொருவர் கூறினால், அமெரிக்க அதிபர் `டிஸ்இன்ஃபெக்டன்ட்டை உடலுக்குள் செலுத்திப் பார்க்கலாமே' என காமெடி செய்கிறார்.

இப்படியான அடிப்படை வாதமற்ற கருத்துகளைப் பரப்புவதென்பது முற்றிலும் தவறான செயல் என உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து எச்சரித்துவந்தபோதிலும், இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுவதன் பின்னணி என்ன... இதனால் என்ன மாதிரியான பிரச்னைகளும் பின்விளைவுகளும் ஏற்படலாம்?

`சக்திவாய்ந்த ஒளியைச் செலுத்தி சோதனை செய்யுங்கள்’ - விமர்சனத்துக்குள்ளான ட்ரம்ப்பின் யோசனை #Corona

தொற்றுநோயியல் மருத்துவர் சித்ராவிடம் பேசினோம்.

``எந்தவொரு நோய்த் தொற்றின்போதும், நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் மக்கள் மனதில் மேலோங்கி இருக்கும். மக்களிடம் நோய் பரவுதலைத் தடுக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணமாகவும் இருக்கும். இப்படி அனைவரின் கவனமும் நோய் பரவுதலை வருமுன் தடுப்பதில் இருப்பதாலேயே, அதுசார்ந்து அனைவரும் அதிகமாக யோசிப்பர். அதிகமான தகவல்களைச் சேகரிப்பார்கள், பரப்புவார்கள்... இப்படி தகவல்கள் அதிகமாகத் தேடப்படும்போது, அதுவே பிரச்னையாக மாறிவிடும். இப்போதும் அப்படித்தான் நடந்துள்ளது.

தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா
தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா

பரப்பப்படும் தவறான தகவல்களையெல்லாம் கவனித்துப்பார்த்தால், அவை எல்லாமே அன்றாட வாழ்வியலோடு கலந்த விஷயங்களாக இருப்பதைப் புரிந்துகொள்ளலாம். இதன் பின்னணி ஒன்றுதான். வாழ்வியலில் கலந்த ஒரு விஷயத்தை முன்னிறுத்தும்போது மக்கள் எளிதாக நம்பிவிடுவார்கள். அதிகம் ஆராயமாட்டார்கள். ஏற்கெனவே பழக்கப்பட்ட விஷயமாக இது இருப்பதால், பக்கவிளைவுகள் இருக்காது என்றெல்லாம் நம்பி அந்தக் கருத்தை பரப்பத்தொடங்கிவிடுவார்கள்.

இன்ஃபோடெமிக்ஸ்
இன்ஃபோடெமிக்ஸ்

ஆனால், மேலோட்டமாகப் பார்க்கும்போது மட்டுமே இவை பாதுகாப்பாகத் தெரியும். உண்மையில் அப்படி இருக்காது. உதாரணத்துக்கு, வெயிலில் நிற்பது / வெந்நீரில் குளிப்பது / சுடச்சுட நீர் அருந்துவது போன்றவையெல்லாம் கொரோனா வைரஸிலிருந்து ஒருவரைக் காக்கும் என்ற தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால், இவையெல்லாம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முன்னெடுப்புதான். ஆனால்,

கொரோனா போன்று தீர்வு காணப்படாத பிரச்னைகளுக்கு இப்படிப்பட்ட தகவல்கள் உதவப்போவதில்லை.

வாழ்வியல் பாதிப்புகளிலிருந்து பரவும் இப்படியான தகவல்கள், ஒருகட்டத்துக்கு மேல் மருந்து, மாத்திரை, கெமிக்கல் தொடர்பான பரப்புரைகள்வரை நீள்கின்றன. அப்படித்தான் கபசுரக் குடிநீர் குடிப்பது, ஹெ.சி.க்யூ மருந்து சாப்பிடுவது, ஆல்கஹால் கொண்டு நேரடியாகக் கை கழுவுவது போன்றவையெல்லாம் பரப்பப்பட்டன.

நம் மக்கள், நோயைத் தடுக்கிறேன் என்ற எச்சரிக்கை மிகுதியில் எல்லாவற்றையும் நம்பிவிடுகின்றனர். இது முற்றிலும் தவறு.
தொற்றுநோயியல் மருத்துவர் சித்ரா
இன்ஃபோடெமிக்ஸ்
இன்ஃபோடெமிக்ஸ்

மக்கள் என்னதான் செய்ய வேண்டும் என்றால், விழிப்புணர்வோடு இருங்கள். அதுமட்டுமே இப்போதைய தேவை. கொரோனா தடுப்பு குறித்தோ, கொரோனா பரவுதல் குறித்தோ செய்தியோ ஃபார்வர்டோ உங்களுக்குக் கிடைத்தவுடன், அதன் பின்னணியை ஆராயுங்கள். அந்த விஷயம் வெறும் யூகத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிறதா அல்லது அதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா என தேடித் தெரிந்துகொள்ளுங்கள். இதுவரை எந்தவொரு மாத்திரையும், கஷாயமும், கெமிக்கலும் கொரோனா வைரஸை அழிக்கும் என நிரூபிக்கப்படவில்லை என்பது மருத்துவ உண்மை.

கொரோனாவை ஓரளவு கட்டுப்படுத்தலாம் - சில விஷயங்களால் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் போன்ற சில கருத்துகள் மட்டுமே உண்மை. ஆகவே, கொரோனாவை அழிக்கலாம் என யாராவது சொன்னால், அதை தயவுசெய்து நம்பாதீர்கள். இன்றைய தேதிக்கு சமூக இடைவெளியும், வீட்டுக்குள் முடங்கியிருத்தலும் மட்டுமே உங்களை கொரோனாவிலிருந்து காக்கும். அதுதான் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட விஷயமும்கூட. ஆகவே, அதை மட்டும் முழுமையாகக் கடைப்பிடியுங்கள்" என்றார் அவர்.

இன்ஃபோடெமிக்ஸ்
இன்ஃபோடெமிக்ஸ்
இன்ஃபோடெமிக் விஷயத்தில், மக்களைவிடவும் நாட்டின் தலைவர்கள்தான் அதிக கவனமாக இருக்க வேண்டும்
உலக சுகாதார நிறுவனம்

காரணம், தலைவர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது, அது மக்களைச் சென்றடையும் வேகமும் வீச்சும் அதிகம். அப்படியிருக்கும்போது, தவறான ஒரு விஷயத்தை தலைவர்களில் ஒருவர் விளையாட்டாகப் பேசினால்கூட, அதன் பின்விளைவுகள் மிகத்தீவிரமாக இருக்கும் என்பதே உண்மை.

பேண்டெமிக்கோடு போராடுவோம். இன்ஃபோடெமிக்கிடமிருந்து விலகியிருப்போம்.
அடுத்த கட்டுரைக்கு