Published:Updated:

சர்வதேச மருத்துவ அவசர நிலை அறிவிப்பு... கொரோனா வைரஸின் வீரியம் என்ன?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சர்வதேச மருத்துவ அவசர நிலை அறிவிப்பு... கொரோனா வைரஸின் வீரியம் என்ன?

கொரோனா வைரஸ் அச்சத்தை அதிகரிக்கும் வகையில், நிமிடமொரு செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. அப்படியான ஒன்றுதான், சீனாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் ஒருவரின் இறப்புச் செய்தி. 62 வயதான, ஓய்வு பெற்ற காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர் லியாங் வூடாங் (Liang Wudong). கொரோனா நோயாளிகளுக்கு சேவை அளித்து வந்தவர் உயிரிழந்துள்ளார். கொரோனாவின் தாக்கம்தான் மருத்துவரின் உயிரிழப்புக்குக் காரணம் என்கின்றன சீன ஊடகங்கள்.

213 பேர்!
கொரோனாவால் இதுவரை இறந்துள்ளனர்.

இப்படி, தினமும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள், கேட்பவர்களை மிரளவைத்துக்கொண்டிருக்கின்றன. இன்று காலை வரை எடுக்கப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளின்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, உலகளவில் 10,000. இதில் ஒருவர், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 213. இறந்தோரின் எண்ணிக்கை நேற்று முன்தினம் (ஜனவரி 29) 132-ஆக இருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன உயிரிழப்புகள். இந்தக் கொரோனா வைரஸை முழுமையாகக் குணப்படுத்தும் சிகிச்சைகள் இன்னமும் கண்டறியப்படவில்லை. உலக மருத்துவர்கள் அனைவரும் அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல், கையறு நிலையில் தவித்து வருகின்றனர் என்றே சொல்ல வேண்டியுள்ளது.

இந்தச் சூழலில், நேற்று இரவு கொரோனா பாதிப்பை `சர்வதேச மருத்துவ அவசர நிலை' என்று அறிவுறுத்தி, `கூடுதல் கவனமாக இருங்கள்' என எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். சர்வதேச மருத்துவ அவசர நிலை என்பது, எந்தவொரு நோய் பாதிப்பு எதிர்பாராவிதமாக, கணிக்க முடியாத அளவுக்கு வேகமாகவும் விரைவாகவும் உலகம் முழுக்கப் பரவுகிறதோ அதற்குத் தரப்படும் எச்சரிக்கைக்கான பெயர். பல்வேறு கலந்தாய்வுகளுக்குப் பிறகே, எந்தவொரு நோய்க்கும் இந்த வகை எச்சரிக்கை தரப்படும்.

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதோனாம்
உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதோனாம்
`விமானத்தில் ஒரே ஒரு சென்னை மாணவி; நடுக்கடலில் தவிக்கும் கப்பல்!'- உலக மக்களை உறையவைக்கும் கொரோனா

கொரோனாவுக்குக்கூட, மூன்று நிலை கலந்தாய்வுகளுக்குப் பின்னர்தான் தரப்பட்டுள்ளது. இதற்கு முன் சர்வதேச மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்ட நோய்கள் - பன்றிக்காய்ச்சல் (2009), எபோலா (2014 மற்றும் 2019), போலியோ (2014), ஜிகா (2016) போன்றவை. ஆக, மருத்துவ அவசர நிலைப் பட்டியலின் ஐந்தாவது பாதிப்பு, கொரோனா வைரஸ். இதற்கு முன் அறிவிக்கப்பட்ட நோய்கள் யாவும் உயிர்க்கொல்லியாக உலகையே அச்சுறுத்திய நோய்பாதிப்புகள் என்பதால், உலக சுகாதார நிறுவனத்தின் இந்தத் தற்போதைய அறிவிப்பு, மருத்துவத்துறையில் மிக முக்கியமான எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அதிகாரி டெட்ராஸ் அதோனாம், பத்திரிகையாளர் மத்தியில் நேற்று பேசியிருந்தார். அப்போது,"இது எமெர்ஜென்சி நிலையா இல்லையா என்பதை சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் வீரியத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து நாங்கள் அறிவிக்கவில்லை. மாறாக, உலகளவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துகொண்ட பிறகே அறிவித்தோம். இதற்கு முன் நாங்கள் அறிவித்த நோய்களைவிடவும் மிகத்தீவிரமான பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது என்பதில் எந்த மாற்றக்கருத்தும் இல்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்த நிலையில் இந்த நோய் பாதிப்புக்கு, உடனடியான அவசர நிலை மருத்துவ உதவிகள் தரப்பட வேண்டும் என்பதாலும், இது சார்ந்த விழிப்புணர்வை உலகம் முழுக்க அதிகப்படுத்த வேண்டும் என்பதாலும் இந்த அறிவிப்பு நிகழ்ந்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சீனாவுக்குப் பயணிக்க வேண்டாம் எனத் தன் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது அமெரிக்க அரசு. சீனாவிலிருந்து அமெரிக்கா வர விரும்புபவர்களை, `உங்கள் பயணம் கட்டாயம் வேண்டுமா என மறுபரிசீலனை செய்யுங்கள்' என்று அறிவுறுத்தியுள்ளது அமெரிக்க அரசு. இந்தியாவிலும்கூட, வெளியுறவுத்துறை சார்பில் இப்படியான விஷயங்கள் மக்கள் மத்தியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

`காய்ச்சல் இருந்தால் பயணம் செய்யாதீர்கள்!' - டிராவலர்களுக்கான கொரோனா வைரஸ் அலர்ட் #CoronaVirus
கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

தும்மல், காய்ச்சல், இருமல் போன்ற விஷயங்களை உதாசீனப்படுத்தாமல் இருந்தாலே கொரோனா பரவுவதைத் தடுத்துவிட முடியும் என்பதால், அதில் கவனமாக இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். மேற்கூறிய அறிகுறிகள் தெரியவருபவர்கள், தும்மும்போதும் இருமும்போதும் டிஷ்ஷூ அல்லது கைக்குட்டையை உபயோகப்படுத்த வேண்டும். உடல்நலன் சார்ந்த எந்தத் தொந்தரவும் இல்லை என்பவர்கள், செல்ஃப் ஹைஜீனில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

சுத்தமாக இருப்போம், கொரோனாவைத் தடுப்போம்!
பின் செல்ல