Election bannerElection banner
Published:Updated:

9 லட்சம் பேரை பலிவாங்கும் ஹெபடைட்டிஸ் வைரஸ்! தீர்வு என்ன? #WorldHepatitisDay

உலக கல்லீரல் அழற்சி தினம்
உலக கல்லீரல் அழற்சி தினம்

திருமணத்துக்கு முன் இருவருக்கும் ஹெபடைட்டிஸ் பரிசோதனை அவசியம்... ஏன்? #WorldHepatitisDay

வாழ்க்கையில் பிரச்னை வர வேண்டுமா அல்லது பிரச்னை வராமல் தடுக்க வேண்டுமா என்று கேட்டால், பெரும்பாலானவர்களின் பதில் பிரச்னையே இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அதே கேள்வியில் பிரச்னை என்ற வார்த்தையை எடுத்துவிட்டு நோய் என்று மாற்றினால் பதில்களும் மாறிப்போகும். கோவிட்-19, சர்க்கரைநோய் தொடங்கி பல நோய்களைத் தடுப்பதற்கு எளிய வழிகள் இருந்தாலும் அவற்றைத் தேர்ந்தெடுப்பவர்கள் மிகச் சிலரே. வந்தால் பார்த்துக்கொள்வோம் என்ற மனநிலையில்தான் நம்மில் பலரும் இருக்கிறோம்.

Liver
Liver
உலகில் 32.5 கோடி பேரை பாதித்து ஆண்டுக்கு 9 லட்சம் பேரை பலி வாங்கும் கொடிய நோய் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்று. இந்திய மக்கள்தொகையில் சுமார் 1.8 சதவிகிதம் பேருக்கு இந்த நோய் பாதித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஹெச்.ஐ.வி வைரஸைப் போலவே ரத்தப் பரிமாற்றம், தொற்று பாதித்த ஊசியைப் பலர் பயன்படுத்துவது, பாதுகாப்பில்லாத உடலுறவு, தொற்று பாதித்த தாயிடமிருந்து குழந்தைக்கு... இப்படித்தான் ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி பரவுகிறது. ஏ, பி, சி, டி, இ என ஐந்து வகை ஹெபடைட்டிஸ் வைரஸ் இருந்தாலும், பி வைரஸ் மட்டுமே அதிக ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆண்டு ஹெபடைட்டிஸ் தின கருத்துருவாக நோய் பாதிப்புள்ள பல லட்சம் மக்களைக் கண்டறிய வேண்டும் (Finding the millions) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நம்மிடம் பேசிய கல்லீரல் மருத்துவர் ஜாய் வர்கீஸ், "ஹெபடைட்டிஸ் பி, சி இரண்டும் ஒரே முறையில் பரவும் என்றாலும் சி வைரஸ் தொற்றைக் குணப்படுத்த மருந்து கண்டறியப்பட்டுவிட்டது. ஆனால், பி வைரஸுக்கென பிரத்யேக மருந்துகள் இல்லை என்பதால் அதனால் பாதிக்கப்பட்ட நபர் இறுதிவரை அந்தத் தொற்றுடன்தான் வாழ வேண்டும். தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்துகள் உள்ளன.

திருமணத்துக்கு முன்னர் ஆண், பெண் இருவரும் ஹெபடைட்டிஸ் பி பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது.
கல்லீரல் மருத்துவர் ஜாய் வர்கீஸ்

இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பிறருக்கும் பரவ வாய்ப்புள்ளது. தொற்று பாதித்திருப்பது தெரியாமலேயே பலர் வாழ்ந்து வருவதுதான் ஆபத்தானது. முழு உடல் பரிசோதனை செய்துகொண்டவர்கள், ரத்த தானம் செய்யும் தன்னார்வலர்கள் என 10,800 பேரை ரேண்டமாகப் பரிசோதித்தபோது அவர்களில் 132 பேருக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்று காணப்பட்டது. இது அவர்களுக்கே தெரியாது.

அப்படியிருக்கும்போது அந்த நபர் ரத்தானம் செய்தாலோ, அவருக்குப் பயன்படுத்திய ஊசி, ஷேவிங் ரேஸரை பிறர் பயன்படுத்தினாலோ, உடலுறவினாலோ, தாயிடமிருந்து குழந்தைக்கோ நோய் பரவ வாய்ப்புள்ளது.

இந்தத் தொற்று பாதித்தால் பெரும்பாலானவர்களுக்கு உடனடியாக அறிகுறிகள் தென்படாது. கல்லீரல் சிறிது சிறிதாகப் பாதிக்கப்பட்டு மோசமடையும் நிலையில்தான் வெளியில் தெரிய வரும். ஒரு கட்டத்தில் அது கல்லீரல் புற்றுநோயாகவோ, பல உள்ளுறுப்புகளைச் செயலிழக்க வைத்து உயிரைப் பறிக்கும் நிலைக்கோ சென்றுவிடலாம். இத்தனை அபாயகரமான நோயைத் தடுப்பதற்கு அனைத்து வயதினருக்கும் எளிய தடுப்புமுறை உள்ளது. அதுதான் தடுப்பூசி.

Dr. Joy Varghese
Dr. Joy Varghese

இந்தியாவைப் பொறுத்தவரை, பிறந்த குழந்தைகளுக்கான தடுப்பூசி பட்டியலில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி இணைக்கப்பட்டுவிட்டது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் இது கட்டாயமாக்கப்படவில்லை. வாழ்நாளில் ஒருமுறை போட்டுவிட்டால் அந்த வைரஸுக்கு எதிரான நிரந்தர நோய் எதிர்ப்புப் பொருள் (ஆன்டிபாடி) உடலில் தோன்றிவிடும். அதற்குப் பிறகு, நோய் தாக்க வாய்ப்பு இல்லை.

குழந்தை முதல் தாத்தாவரை!

குழந்தைகளுக்கு மட்டும்தான் என்றில்லை எந்த வயதினரும் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியும். வாழ்நாளில் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போடவே இல்லை என்பவர்கள், தங்களுக்கு அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாகவே ஊசியைப் போட்டுக்கொள்ள முடியும். ஒருவேளை குழந்தையில் தனக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா இல்லையா என்று தெரியாதவர்கள் அதையும் எளிய ரத்தப் பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம்.

Blood Test
Blood Test

தடுப்பூசி போட்டு உடலில் நோய் எதிர்ப்புப் பொருள் தோன்றியிருக்கிறதா என்பதை Anti HBs Antibody Test என்ற எளிய ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்துவிட்டால், நோய் எதிர்ப்புப்பொருள் உருவாகவில்லை என்று அர்த்தம். உடனடியாக ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், நோய்த் தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

திருணம் செய்வோர் கவனத்துக்கு!

ஹெபடைட்டிஸ் பி நோய் பாதித்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளவும் எளிய ரத்தப் பரிசோதனை இருக்கிறது. இதையும் செய்துகொள்ளும் பட்சத்தில் நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம். பாதிப்பு இருக்கும்பட்சத்தில் நோய் முற்றிய நிலையில் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னதாகவே சிகிச்சை எடுத்து நோயைக் கட்டுப்படுத்த முடியும். குறிப்பாக, திருமணத்துக்கு முன்னர் ஆண், பெண் இருவரும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது. ஒருவருக்குத் தொற்று இருக்கும் பட்சத்தில் மற்றவர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

Hepatitis B test before marriage
Hepatitis B test before marriage
அடுத்தவர் டூத் பிரஷ், ஷேவிங் ரேஸரைப் பயன்படுத்துகிறீர்களா? ஹெபடைட்டிஸ் அலர்ட்! #WorldHepatitsDay

ஹெபடைட்டிஸ் பி தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு போதை மருந்துப் பழக்கம் இருக்கும்பட்சத்தில் அவருக்கு ஹெபடைட்டிஸ் சி, ஹெச்.ஐ.வி பரிசோதனையும் செய்ய வேண்டியவது அவசியம். போதைப் பழக்கத்தினால் ஒருவர் பயன்படுத்திய ஊசியை மற்றவர் பயன்படுத்திருக்கும் பட்சத்தில் இந்த மூன்று தொற்றுகளுமே ஒருவருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு