Published:Updated:

கோவிஷீல்டு & கோவாக்ஸின்... தடுப்பூசியை நாம் எப்படி தேர்வு செய்யலாம்? #COVID19

COVID-19 vaccine
COVID-19 vaccine ( AP Photo / Manish Swarup )

தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அனைத்துத் தடுப்பூசி மையங்களிலும் இரண்டு தடுப்பூசிகளும் இருப்பு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்வுசெய்து போட்டுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் விரைவில் பொது மக்களுக்கான கோவிட்-19 தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. தற்போது முன்களப் பணியாளர்களுக்கு இரண்டாவது தவணை ஊசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து 50 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசியைப் போடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என்ற இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தங்களுக்கு எந்தத் தடுப்பூசி போட வேண்டும் என்று தேர்வு செய்யும் உரிமை வழங்கப்படவில்லை. தடுப்பூசி வழங்கும் மையத்தில் எந்தத் தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டுள்ளதோ அதுதான் போடப்பட்டது.

Vaccine
Vaccine

ஆனால், தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் அனைத்துத் தடுப்பூசி மையங்களிலும் இரண்டு தடுப்பூசிகளும் இருப்பு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்வுசெய்து போட்டுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இதனால் எந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும் என்ற சந்தேகம் நமக்குள் இயல்பாகவே எழும். அதற்குப் பதில் அளிக்கிறார் தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்:

``இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களின் உடலில் 89 - 90 சதவிகிதம் ஆன்டிபாடி உருவாகி இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இரண்டு தடுப்பூசிகளுமே செயல்திறனைப் பொறுத்தவரை சமமாகத்தான் இருக்கும்.

Covishield
Covishield
கோவிட்-19: `இதனால்தான் 2-வது டோஸ் தடுப்பூசி மிகவும் முக்கியம்!' - விளக்கும் மருத்துவர்

இரண்டு ஊசிகளையும் 28 நாள்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். மருத்துவர்களே இரண்டையும் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இரண்டு தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களுக்குமே பெரிய அளவில் ஒவ்வாமையோ, ஒவ்வாமை எதிர்வினை ஏற்பட்டு உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக ஆய்வறிக்கையோ தரவுகளோ இல்லை.

சாதக பாதகம் என்ன?

கோவாக்ஸின் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. அதனால் இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டது தொடர்பான தரவுகள் நிறைய இருக்கின்றன.

கோவிஷீல்டைப் பொறுத்தவரை வெளிநாடுகளில் அதிக தரவுகள் இருக்கின்றன. இந்தியாவில் போடப்பட்டது, பரிசோதனை செய்தது தொடர்பான தரவுகள் குறைவாக இருக்கின்றன.

இந்தியாவுக்கு விரைவில் ஜான்சன் அண்ட் ஜான்சன், மார்டனா உள்ளிட்ட கோவிட் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன
தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பன்

பிரிட்டனில் தயாரிக்கப்பட்ட ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை (இந்தியாவில் கோவிஷீல்டு) தென்னாப்பிரிக்காவில் போடத் தொடங்கி இடையில் நிறுத்திவிட்டனர். அந்த நாட்டில் பரவிய வைரஸின் தன்மைக்கு ஏற்றாற்போல் அந்தத் தடுப்பூசி இல்லை என்று நிறுத்திவிட்டனர்.

கோவாக்ஸினைப் பொறுத்தவரை, எதிர்ப்புத்திறனைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வோருக்கு இந்தத் தடுப்பூசியைக் கொடுக்க முடியாது. அதுபோன்ற மருந்துகளை எடுத்துக்கொள்வோர் கோவாக்ஸின் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாமா என்று அவரவர் மருத்துவரிடம் ஆலோசித்துப் போடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவிஷீல்டைப் போடுவதற்கான தகுதி அளவுகோல்கள் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால், சில நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆஸ்ட்ராஜெனிகா (கோவிஷீல்டு) தடுப்பூசியைப் போட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

இரண்டு தடுப்பூசிகளுக்குமே ப்ளஸ், மைனஸ் இரண்டும் இருக்கின்றன. இந்தியாவுக்கு விரைவில் ஜான்சன் அண்ட் ஜான்சன், மார்டனா உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு நிறைய சாய்ஸ் இருக்கும்.

மருத்துவர் அஷ்வின் கருப்பன்
மருத்துவர் அஷ்வின் கருப்பன்

எனவே, தடுப்பூசியைப் போட விரும்புவோர் குடும்ப மருத்துவர் அல்லது வழக்கமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளும் மருத்துவரை அணுகி, அவரவர் உடல்நிலைக்கு ஏற்ற தடுப்பூசி எது என்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அந்தந்த தடுப்பூசியைப் போட வேண்டும்" என்றார்.

மாற்றிச் செலுத்தினால் என்னவாகும்?

முதல் தவணை எந்தத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதோ அதையேதான் இரண்டாம் தவணையிலும் போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவேளை இரண்டாம் தவணையில் வேறு தடுப்பூசி போட்டுக்கொண்டால் என்னவாகும் என்று அவரிடமே கேட்டோம்.

COVAXIN
COVAXIN
`இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் ஏன்?' - விளக்கும் ஜெ.ராதாகிருஷ்ணன்

``இரண்டு தடுப்பூசிகளுமே வேறு வேறு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை. அதனால் முதல் தவணையில் எந்த மருந்து செலுத்தப்பட்டதோ அதையேதான் இரண்டாவதாகவும் போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவேளை மாற்றிச் செலுத்தினால் சில ஒவ்வாமை பிரச்னைகள் ஏற்படலாம். முக்கியமாக, தடுப்பூசியின் முழுமையான செயல்திறன் கிடைக்காமல் போகும்.

ஒருவேளை அப்படி மாற்றிப் போட்டுக்கொண்டுவிட்டால் இரண்டாவதாக எந்தத் தடுப்பூசி போடப்பட்டதோ அதையே மீண்டும் 28 நாள்கள் கழித்துப் போட்டுக்கொள்ள வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு