COVID19: தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் 52% உயர்ந்த பாதிப்பு... என்ன செய்யப்போகிறது அரசு?

இதை நாம் ஆரம்பத்திலேயே தடுக்கவில்லையெனில், முன்பு சந்தித்ததைப் போன்ற விளைவுகளையோ, அதைவிட அதிகமான அபாயத்தையோ சந்திக்க நேரிடும்.
`தடுப்பூசி வந்துவிட்டது… இனி கவலையில்லை’ என்று தைரியமாக நடமாட ஆரம்பித்த மக்கள் மனதில் மீண்டும் அச்சத்தை விதைத்திருக்கிறது, `உலகின் பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரிக்கிறது’ என்ற செய்தி. குறிப்பாக பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளிலில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது கொரோனா. இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவிலும் நாளுக்குநாள் கொரோனா அதிகரித்துவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 80,955 பேரும் அமெரிக்காவில் 56,996 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல இந்தியாவில் 22,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரே நாளில் 126 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 13,659 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தமிழகத்தில் நேற்று (10/03/2021) ஒரே நாளில் 671 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்துக்கு முன்பு வரை சராசரியாக தினசரி 400-லிருந்து 450 பேர் வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால், தற்போது கடந்த 16 நாட்களில் மட்டும் பாதித்தோரின் எண்ணிக்கை 51.8% உயர்ந்திருக்கிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பலரையும் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது. நாம் இப்போதே விழித்துக்கொள்ளவில்லையெனில் மீண்டும் பழையபடி அபாயத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என மருத்துவர்கள் பலரும் எச்சரிக்கின்றனர்.

`கொரோனா தொற்று அதிகரிப்பது அபாய நிலைக்கு இட்டுச் செல்லுமா... இதற்கான காரணம் என்ன... மீண்டும் முழுமையான லாக்டெளன் அமல்படுத்தப்படுமா?’ இப்படி மக்களுக்கிருக்கும் பல கேள்விகளைத் தொற்றுநோயியல் மருத்துவர் சுரேஷ்குமாரிடம் முன்வைத்தோம்,
``தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பதற்குப் பலவிதமான காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ்தான் (யுகே வேரியன்ட்). இந்த வைரஸின் பரவும் தன்மை அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று அதிகரித்திருப்பதற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு ஆறிலிருந்து எட்டு மாதங்களுக்கு மட்டுமே கொரோனாவை எதிர்கொள்ளும் இம்யூனிட்டி இருப்பதும் கொரோனா அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம். ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவருக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு, படிப்படியாக இம்யூனிட்டி குறைய ஆரம்பித்துவிடுகிறது.
அப்படியான சூழலில், புதிய வைரஸ் பரவும்போது ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள், பாதிக்கப்படாதவர்கள் என எல்லோருக்கும் புதிய கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. இந்தப் புதியவகை கொரோனா வைரஸானது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. நம் நாட்டிலும் அந்த வைரஸ் ஊடுருவிவிட்டது. ஆனால், புதிய வைரஸ்தான் இங்கு அதிகளவில் இருக்கிறதா என்பதை மட்டும் நம்மால் இப்போது சொல்ல முடியவில்லை.

இன்னொரு பக்கம், மக்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டதும் கொரோனா அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம். இப்போதெல்லாம் யாரும் சரிவர மாஸ்க் அணிவதில்லை. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. அடிக்கடி சோப்பு போட்டு கைகளைக் கழுவுவதில்லை. அவர்களுக்கு ஒருவித அயர்ச்சியும் அலட்சியமும், வந்தா பாத்துக்கலாம் என்ற அசட்டு நம்பிக்கையும் வந்துவிட்டதுபோல! இதுவும் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணம். கடந்த ஆண்டு இதேநேரத்தில் கொரோனா முதல்முதலாகப் பரவ ஆரம்பித்தபோது நாம் அலட்சியமாக இருந்ததால்தான் பாதிப்பு உச்சத்தைத் தொட்டது என்பதை நாம் இப்போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்போது கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைப் பார்க்கும்போது இது இரண்டாவது அலையின் முதல்கட்டமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இதை நாம் ஆரம்பத்திலேயே தடுக்கவில்லையெனில், முன்பு சந்தித்ததைப் போன்ற விளைவுகளையோ, அதைவிட அதிகமான அபாயத்தையோ சந்திக்க நேரிடும் என்பதை மக்களும் அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும். மக்கள் என்ன செய்ய வேண்டுமெனக் கேட்டால், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுமையாக, சுயக் கட்டுப்பாடுடன் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் மாஸ்க் அணிவதையோ, தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதையோ கைவிட்டுவிடக் கூடாது என்பது முக்கியம்.

அதேபோல அரசு வயதுவாரியாகத் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ளாமல் எல்லோருக்கும் உடனடியாகத் தடுப்பூசி கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். அண்டை நாடுகளுக்கு உதவ வேண்டும்தான்; மறுப்பதற்கில்லை. ஆனால், இந்தியாவை முதலில் காப்பாற்றிவிட்டு பிறகு அண்டை நாடுகளுக்கு உதவுங்கள். அரசு மருத்துவமனைகளிலும் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைகளிலும்தான் கொரோனா தடுப்பூசி இப்போது கிடைக்கிறது. அதை எல்லா இடங்களிலும் கிடைக்கும் வகையில் செய்ய வேண்டும். எல்லா இடங்களிலும் தடுப்பூசி கிடைக்கப் பெற்றால் தங்களின் ஃபேமிலி டாக்டரிடமோ, தனக்கு அருகில் உள்ள ஒரு கிளினிக்கிலோ மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தைரியமுடன் வருவார்கள்.
அதேபோல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தடுப்பூசி செலுத்தாமல் 24*7 என்கிற அடிப்படையில் 24 மணி நேரமும் தடுப்பூசி வழங்கும் பணியை முடுக்கிவிட வேண்டும். அதேபோல கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை டிஜிட்டல் டிராக்கிங் செய்ய வேண்டும், இம்யூனிட்டி செக்கிங் செய்ய வேண்டும். இதையெல்லாம் செய்தால்தான் நம்மால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும். இல்லையெனில் பெரியளவில் பிரச்னையை சந்திக்க நேரிடலாம்” என்கிறார்.