Published:Updated:

``கண்கள் வழியாகவும் கோவிட்-19 உடலுக்குள் நுழையலாம்... லென்ஸ் வேண்டாம்!" - கண் மருத்துவர்

கோவிட் 19 - கண்கள்
கோவிட் 19 - கண்கள்

கண்கள் வழியாகப் பரவும் கொரோனா... தற்காப்பு ஆலோசனைகள் சொல்கிறார் கண் மருத்துவர்!

கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள அறிவுறுத்தப்படும் வரையறைகளில், 'கைகளைக் கண்களில் வைக்க வேண்டாம்' என்பதுவும் ஒரு முக்கிய அறிவுறுத்தலாக உள்ளது. அது ஏன்? கண்களுக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்? விளக்குகிறார், கண் மருத்துவர் S.பிரீத்தி.

கண் மருத்துவர் S. பிரீத்தி
கண் மருத்துவர் S. பிரீத்தி

''கொரோனா வைரஸ் RNA வைரஸ். இது பாதிக்கப்பட்டவரின் எச்சில், தும்மல் நீர்த் திவலைகள் (Droplets) மூலமாகப் பரவக்கூடியது. அந்தப் பரவல் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருக்கலாம். பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல் மூலம் வெளிவரும் நீர்த்துகள்கள், நம் உடம்பின் உள்சென்று சளிப் படலத்தை அடையும்போது, நமக்குக் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இது நேரடிப் பரவல்.

மறைமுகப் பரவலில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தும்மல், இருமலிலிருந்து வந்த நீர்த்துகள்கள் ஏதோ ஒரு பொருளின் மீது படிந்து, அதை நம் கையால் தொட்டு, அதே கையால் நம் கண், மூக்கு, வாய் எனத் தொடுகையில் கொரோனா நமக்கும் தொற்றிக்கொள்ளும்.

கோவிட் 19 - கண்கள்
கோவிட் 19 - கண்கள்

கோவிட் 19 - கண்கள், மூக்கு, வாய், கண்களில் உள்ள கன்செக்டிவா (conjunctiva) ஆகியன சளிப்படலம் சூழ்ந்த பகுதிகள். கண்கள் வைரஸை உடலுக்குள் இழுக்கும் ஒரு முக்கிய உறுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. கண்களில் உள்ள சளிப் படலத்தை வைரஸ் அணுகும்போது, அது எளிதாக உள்ளே சென்றுவிடுகிறது.

COVID 19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 0.8% முதல் 1% பேருக்குக் கண் சிவத்தல் ஒரு பிரச்னையாக உள்ளது என்று தெரிகிறது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கண் பிரச்னையும் இருந்தால், அவர்கள் உடல்நிலை தேறுவது மிகவும் கடினம் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ஆக, கண்களைக் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பது அவசியம்.

கோவிட் 19 - கண்கள்
கோவிட் 19 - கண்கள்

கண் மருத்துவர்களுக்கு, கண்கள் மூலம் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மற்ற மருத்துவர்கள் தள்ளி நின்றுகூட வைத்தியம் செய்யலாம். கண் மருத்துவர்கள் அப்படியல்லர். நோயாளிகளைப் பரிசோதிக்கும்போது ஓர் அடி இடைவெளியே சாத்தியம். மேலும், அவர்களுடைய கண்களைத் தொட வேண்டிய தேவையும் உள்ளது. சிகிச்சை அளித்துவிட்டு மருத்துவர்கள் தங்கள் கண், மூக்கு, வாயைத் தொட்டால் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பொதுமக்களும் கொரோனா பரவலில் மூக்கு, வாயை மட்டுமே கருத்தில்கொள்ளாமல் தங்கள் கண்களையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

`உறுதி செய்யப்பட்டவர்களில் 80% பேர்... அறிகுறியே இல்லாமல் பரவும் கொரோனா?!’ -அதிர்ச்சி தரும் ICMR

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம் கண்களை பாதுகாப்பது எப்படி?

கண் மருத்துவர்கள் ஃபேஸ் ஷீல்டு (face shield) பயன்படுத்தலாம். வாய் மற்றும் மூக்குக்கு முகக்கவசம்போல, கண்களுக்கு பாதுகாப்புக் கண்ணாடி (eye goggles) அணியலாம்.

கோவிட் 19 - கண்கள்  பாதுகாப்பு
கோவிட் 19 - கண்கள் பாதுகாப்பு
பொதுமக்களுக்குப் பாதுகாப்புக் கண்ணாடி அவசியமில்லை. கைகளைக் கழுவுவது, கைகளைக் கண்களில் வைக்காமல் இருப்பது போன்றவற்றை பின்பற்றினாலே போதுமானது.
கண் மருத்துவர் S.பிரீத்தி
கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், கொரோனா தொற்று உலகில் இருக்கும்வரை லென்ஸ் அணியக் கூடாது.

லென்ஸ் அணிவதால் கண்கள் உலர்ந்துவிடும். கண்களில் எரிச்சல் ஏற்படும். அதனால் கைகளால் அடிக்கடி கண்களைத் தொடும் நிலை ஏற்படும். இதன் மூலம் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பாகிவிடும். எனவே, அவர்கள் இந்தக் காலத்தில் கண்ணாடி உபயோகிப்பதே பரிந்துரைக்கத்தக்கது.

கோவிட் 19 - கண்கள்  பாதுகாப்பு
கோவிட் 19 - கண்கள் பாதுகாப்பு

கண்ணாடி அணிபவர்கள், அதையும் அடிக்கடி கைகளால் தொடக்கூடாது. கண்களில் பவர் அதிகம் இருப்பவர்கள் தவிர்க்க முடியாத சூழல் என்றால், நன்கு சுத்தம் செய்து லென்ஸை அணியலாம். என்றாலும், கொரோனா நோய்ப்பரவல் அச்சம் காரணமாக, இந்தக் காலகட்டத்தில் உலக மருத்துவர்கள் லென்ஸை தவிர்க்கச் சொல்வது குறிப்பிடத்தக்கது'' என்று அறிவுறுத்துகிறார் மருத்துவர் S.பிரீத்தி.

அடுத்த கட்டுரைக்கு