Published:Updated:

`கோவிட்-19 தொற்று நீரிழிவு நோயை ஏற்படுத்துமா..?' - லண்டன் ஆய்வு முடிவில் அதிர்ச்சி

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

`கொரோனா தொற்றுக்கு உள்ளான பின், புதுவகை நீரிழிவு நோயும் தோன்றலாம்' என ஆய்வினை அடிப்படையாகக்கொண்டு அவர் எச்சரித்துள்ளார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த பின்னர், அந்த வைரஸ் தொற்றின் தாக்கம் ஒருவரின் உடலியல் செயல்பாடுகளில் நெடுநாள் தாக்கங்களை ஏற்படுத்துமா என்பது தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆய்வுகளின் வரிசையில், லண்டன் கிங்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த பிறகு, ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.

corona spread
corona spread

ஆய்வில், எந்த நோய்க்கும் உள்ளாகாத ஆரோக்கியமான உடல்நலத்தைக் கொண்ட ஒருவர், கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான பின்னர், அவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முன்பே நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படும்போது, நீரிழிவு நோயின் கடுமையான பாதிப்புகளை உள்ளாக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் ரூபினோ, `மிகவும் பரவலான நாள்பட்ட நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் இருந்து வருகிறது. நாவல் கொரோனா வைரஸ் மற்றும் நீரிழிவு நோய் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தவிர்க்க முடியாத மோதல்களை ஆராய்ச்சிகளின் மூலம் உற்றுக் கவனித்து வருகிறோம். கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் நீரிழிவு நோயின் கடுமையான வெளிப்பாடு, முதல் வகை நீரிழிவு அல்லது இரண்டாம் வகை நீரிழிவில் இருக்குமா என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளான பின், புதுவகை நீரிழிவு நோயும் தோன்றலாம்' என ஆய்வினை அடிப்படையாகக்கொண்டு அவர் எச்சரித்துள்ளார். மேலும், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயை உண்டாக்கும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்ற சுழற்சியைக் கொரோனா வைரஸ் பாதிக்கும் சரியான வழிமுறை இன்னும் கண்டறியப்படவில்லை.

Diabetes
Diabetes
Pixabay

கோவிட்-19 கொரோனா வைரஸ் மற்றும் நீரிழிவு நோயின் தீவிரம் கோவிட்-19 தொற்று நோயின் இறப்பு விகிதத்துடன் தொடர்புடையதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த நோயாளிகளில் 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கோவிட்-19 கொரோனா வைரஸை ஏற்படுத்தும் sars cov-2 வைரஸ், நீரிழிவு நோயை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை.

வைரஸ் தொற்றுகள் முதல் வகை நீரிழிவு நோயைத் தூண்டக்கூடும் எனப் பல ஆண்டுகளாக ஆய்வுகளின் அடிப்படையில் கூறப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் முதல் வகை நீரிழிவு அதிகம் உடையோர் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

 Corona
Corona

கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகளை கண்காணிக்கவும், நீரிழிவு நோயின் வெளிப்பாடுகளின் அளவு மற்றும் இயல்புகளைப் புரிந்துகொள்வதற்கும், மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைக் கண்காணிக்கவும் ‘கோவிடியாப் ரெஜிஸ்ட்ரி’ என்ற சர்வதேச ஆய்வுத் திட்டம் மூலம் பதிவேடு ஒன்று உருவாக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு