Published:Updated:

குடும்பத்தில் ஒருவருக்கு கோவிட்-19... மற்ற நபர்கள் தப்பித்துக்கொள்ளவது எப்படி?

குடும்பத்தினருக்குப் பரவும் கோவிட்-19
குடும்பத்தினருக்குப் பரவும் கோவிட்-19

இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர்களைக் காட்டிலும் இளைஞர்கள் முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்தாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் குறித்த பயத்தின் காரணமாக முதியோர் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கின்றனர்.

கோவிட்-19 தொற்று ஏற்படுத்தியுள்ள பல மர்ம முடிச்சுகளை இதுவரை அவிழ்க்க முடியவேயில்லை. அதன் தாக்கத்தால் ஏற்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்வதற்குள் வேறு வேறு புதிய புதிய முடிச்சுகளைப் போட்டுக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் வீடுகளில் ஒருவருக்கொருவர் இந்தத் தொற்று பரவுவதில் பல முரண்கள் ஏற்பட்டுள்ளன.

Family
Family

குடும்பத்தில் ஒருவருக்குப் பரவி வீட்டில் அனைவருக்கும் பரவிய சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன. அதே நேரம் வீட்டில் ஒருவர் தீவிர பாதிப்புக்குள்ளாகியிருப்பார், சில வீட்டில் உயிரிழப்புகூட ஏற்பட்டிருக்கும். ஆனால், குடும்பத்தில் வேறு ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இந்த முரணைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இது தொடர்பாக குஜராத் காந்திநகரில் அமைந்துள்ள இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் சார்பில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. உலகளவில் வெளியான 13 ஆய்வறிக்கைகளை மதிப்பாய்வு செய்து இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

covid-19 spread
covid-19 spread

அதன் அடிப்படையில், வீட்டில் ஒருவரிடமிருந்து மற்றொரு நபருக்கு நோய்த்தொற்று பரவும் விகிதம் 4.6 முதல் 49.6 சதவிகிதம்வரை இருக்கிறது. அவற்றில் கணவனிடமிருந்து மனைவிக்கு அல்லது மனைவியிடமிருந்து கணவனுக்குப் பரவும் விகிதம் 45 - 65 சதவிகிதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் பெரியவரிடமிருந்து (Adult) குழந்தைக்கு நோய் பரவும் விகிதம் குறைவாக உள்ளது. அதுவே, குழந்தைகளிடமிருந்து முதியோருக்குப் பரவும் விகிதம் அதிகமாக உள்ளது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பேசியுள்ள ஆராய்ச்சியாளர்கள், "வீடுகளுக்குள் ஒருவரிடமிருந்து பரவும் தொற்றைப் பற்றி சரியான புரிந்துணர்வு ஏற்படவில்லை. தெளிவாகப் புரிந்துகொள்ள இன்னும் அதிகமான புள்ளிவிவரங்களும் நிகழ்வுகளும் வேண்டும்" என்று குழப்பான முடிவையே தெரிவித்துள்ளனர்.

கோவிட்-19: இந்தியாவில் முதியோர்களைக் காட்டிலும் இளைஞர்கள் முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சன்

குடும்பத்தில் பரவும் கோவிட்-19 பற்றி கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள தொற்றுநோய் மருத்துவர் என்.சுதர்சனிடம் பேசினோம்:

"நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் அனுபவத்தின் அடிப்படையில் சொல்வதானால் வீட்டில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு தொற்று பரவும் வாய்ப்புகள் உள்ளன. வீட்டிலுள்ள 60 முதல் 70 சதவிகிதம் பேர் தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, வீடுகளில் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. முகக்கவசம் அணிவது இல்லை உள்ளிட்டவை இதற்குக் காரணங்களாக இருக்கலாம்.

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு!

குடும்பத்தில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவருடன் நெருங்கிப் பழகும் குடும்பத்தினருக்கும் தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கணவன், மனைவியிடையே இதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. பொதுவாக, குடும்பத்தில் குழந்தைகளுக்கு அதிகம் நோய் பாதிப்பதில்லை. குழந்தைகளை அதிகம் தாக்காததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

அவற்றில் முக்கியமானது குழந்தைகளிடம் காணப்படும் தைமஸ் சுரப்பி. கழுத்துப் பகுதியில் தைராய்டு சுரப்பியின் பின்பக்கத்தில் இந்தச் சுரப்பி அமைந்திருக்கும். வயதாக வயதாக இந்தச் சுரப்பி மறைந்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 'டி' செல்கள் இந்தச் சுரப்பியிலிருந்துதான் வெளிப்படுகின்றன. அதனால்தான் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும், இது ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

Infectious disease expert Dr.N.Sudharsan
Infectious disease expert Dr.N.Sudharsan

பெண்கள் அதிகமில்லை!

இந்தியாவில் ஒட்டுமொத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவான பாதிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் கூடுதல் நோய்த் தடுப்பு ஆற்றலை அளிக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதே நேரம் பெண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது தீவிரமாகி உயிரிழப்புகளைக்கூட ஏற்படுத்திவிடுகிறது.

மெனோபாஸ் ஏற்பட்ட பிறகு ஏற்படும் ஹார்மோன்களின் சமமின்மையால்தான் பாதிப்பின் தீவிரம் அதிகரிக்கிறது என்பதும் மருத்துவர்களின் கணிப்பாக உள்ளது. ஆனால், இதுவும் ஆய்வுபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

பாதுகாப்பாக இருக்கும் முதியோர்

இந்தியாவைப் பொறுத்தவரை முதியோர்களைக் காட்டிலும் இளைஞர்கள் முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்தாம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் குறித்த பயத்தின் காரணமாக முதியோர் கூடுதல் பாதுகாப்புடன் இருக்கின்றனர். ஆனால், நடுத்தர வயதினர் மத்தியில் நோய் குறித்த பயம் சற்று தளர்ந்துள்ளது. நோய் வந்தால் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். இதனால் நோய்த் தடுப்பு விஷயங்களில் சற்று அலட்சியம் ஏற்பட்டுள்ளது.

family
family
ஐபிஎல்:`கோவிட்-19 மாற்று வீரர்; 30% ரசிகர்கள்!’ -நிர்வாகக் குழு கூட்டத்தின் ஹைலைட்ஸ்

பொதுவாக ஒருவர் எவ்வளவு எண்ணிக்கையிலான வைரஸின் மத்தியில், எத்தனை நேரம் வெளிப்படுகிறார் என்பதைப் பொறுத்தே கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஏற்படும். அதிக நேரம் அதிக அளவிலான வைரஸ் வெளிப்பாட்டில் இருந்தால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கவே செய்யும். அறிகுறிகள் தெரிந்த உடனே பரிசோதனை செய்து நோயைக் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்குதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம்தான் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் நோயைப் பரப்பிக்கொள்ளாமல் இருக்க முடியும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு