Published:Updated:

கோவிஷீல்டு இடைவெளி அதிகரித்தது பற்றாக்குறையால்தானா? - சர்ச்சைக்கு மத்திய அரசின் பதில் என்ன?

Corona Vaccination
Corona Vaccination

கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மூன்று மாதக்காலம் இருக்கும் வரையில் எந்தவித பிரச்னையும் இல்லை. அதே வேளை அதற்கு மேலும் தள்ளிப்போடுவது முதல் டோஸ் போட்டதற்கான பலனை முழுமையாகக் கொடுக்காது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மெள்ள குறைய ஆரம்பித்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் கீழ் குறைந்திருக்கிறது. இது நல்ல செய்தி என்றாலும், மறுபுறம் இந்திய கொரோனா வேரியன்ட்டான `டெல்டா' வைரஸ் மேலும் உருமாற்றடைந்து `டெல்டா ப்ளஸ்' வேரியன்ட்டாகப் பரவிவருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி பணிகளை மத்திய அரசு அதிவேகப்படுத்தினால்தான் கொரோனாவின் மூன்றாவது அலையைத் தடுக்க முடியும் என்ற விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

COVID -19 OUT BREAK
COVID -19 OUT BREAK
கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அதிக ஆன்டிபாடி உருவாகுமா? - புதிய ஆய்வு சொல்வது என்ன?

இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியானது, தேவைக்கேற்ற அளவு தற்போது இல்லை என்றும் அதனால்தான் பல மாநிலங்களில் தடுப்பூசிக்குப் பற்றாக்குறை நிலவிவருகிறது என்றும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. கூடவே, 6 முதல் 8 வாரகாலமாக இருந்த கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கான கால இடைவெளியை 12 முதல் 16 வாரங்களாக அரசு அதிகரித்ததும் இதனால்தான் என்ற கூறப்படுகிறது.

இந்நிலையில், ``இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்வதற்கான கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் தடுப்பூசியின் செயல்திறன் 65 - 88% வரை அதிகரிப்பதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்தது. பிரிட்டனில் கண்டறியப்பட்ட `ஆல்ஃபா' வகை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளுக்கு இடையேயான கால இடைவெளியை 12 வாரங்களாக பிரிட்டன் அதிகப்படுத்தியது. இதனால்தான், இந்தியாவில் தடுப்பூசிக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிப்பது குறித்த பரிந்துரையைத் தடுப்பூசி வல்லுநர் குழு வழங்கியது. அந்தப் பரிந்துரையின் அடிப்படையிலேயே இரண்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டது" என மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

COVID-19 vaccine delivery system in New Delhi
COVID-19 vaccine delivery system in New Delhi
AP Photo/Altaf Qadri
ஏற்கெனவே கோவிட் வந்தவர்களுக்கு தடுப்பூசி தேவையில்லையா? - புதிய ஆய்வு சொல்வது என்ன?

இது ஒருபக்கம் இருக்க, இந்தியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய `டெல்டா' வகை கொரோனா வைரஸ் குறித்து ஸ்காட்லாந்து ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் டெல்டா வகை கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பை இன்னும் இரட்டிப்பாக்குவதாகக் கூறப்பட்டிருந்தது. இதனால் தடுப்பூசிகளின் செயல்திறன் டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக வெகுவாகக் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை, கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஒருவர் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் அளவுக்கு உடலில் ஆன்டிபாடிகள் உருவாகின்றன. அதனால் விரைவாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் மக்கள் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, இந்தியாவில் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி டோஸ்களுக்கான இடைவெளியைக் குறைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டது. இது மத்திய அரசின் பரிந்துரைக்கு அப்படியே நேர்மாறாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo / Manish Swarup

இப்படியான விமர்சனங்களுக்கு மத்தியில், கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி அதிகரிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதில், ``கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான கால இடைவெளி அதிகரிப்பு அறிவியல்பூர்வமாக கிடைத்த தரவுகளின் அடிப்படையால் மிக வெளிப்படையாக எடுக்கப்பட்ட முடிவு. ஆனால் இதில்கூட சிலர் அரசியல் செய்வது சரியான செயல் அல்ல" என்றிருந்தார்.

இதுகுறித்து பேசிய தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்பக் குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா, ``மக்களுக்குப் பலன் கிடைக்கும் என்றால் கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான தற்போதைய இடைவெளியை (12 முதல் 16 வாரங்கள்) அரசு நிச்சயம் குறைக்கும். மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மட்டுமே அரசு எந்த முடிவையும் எடுக்கும். இடைவெளியைக் குறைத்தால் மக்களுக்கு நல்லது என நாளையே தெரியவருமானால், இடைவெளியைக் குறைக்க அரசு முன்வரும். அப்படி இல்லாத பட்சத்தில், இப்போது உள்ள இடைவெளியே தொடரும்" என்றார்.

தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்
தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர்

இதுகுறித்து தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அப்துல் கஃபூர் பேசுகையில், ``கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி மூன்று மாதகாலம் இருக்கும் வரையில் எந்தவித பிரசனையும் இல்லை. அதே வேளை அதை மேற்கொண்டு தள்ளிப்போடுவது, முதல் டோஸ் போட்டதற்கான பலனை முழுமையாகக் கொடுக்காது" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு