Published:Updated:

தரம், மூலக்கூறு, அளவு, பிராண்ட்... நீங்கள் ஆன்லைனில் வாங்கும் மருந்துகள் பாதுகாப்பானவையா?- ஓர் அலசல்

ஆன்லைன் பார்மசிகளிலுள்ள விபரீதங்கள்!

ஆன்லைன் பார்மசி
ஆன்லைன் பார்மசி

இன்றைய தொழில்நுட்ப உலகில், இணையத்தில் கிடைக்காதது எதுவுமில்லை. மாட்டுச்சாணம்கூட அமேஸானில் கிடைக்கிறது. இதில், மருந்துகள் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆன்லைனில் மருந்துகள் விற்பனை கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகிவருகிறது. சமீபத்தில் ஒளிபரப்பான கிரிக்கெட் மேட்ச்சில்கூட, ஒரு தனியார் ஆன்லைன் மருந்து நிறுவனத்தின் விளம்பரத்தை அடிக்கடி காணமுடிந்தது. மக்களும் ஆன்லைனில் மருந்துகள் வாங்க ஆரம்பித்துள்ளார்கள். இந்தப் போக்கு சரியா? இதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் என்னென்ன? பொது மருத்துவர் வி.பத்மாவிடம் பேசினோம்.

பொது மருத்துவர் வி.பத்மா
பொது மருத்துவர் வி.பத்மா

''முதலில், ஆன்லைனில் மருந்து வாங்குவதில் உள்ள சாதகங்களாக மக்கள் நினைப்பவற்றைப் பற்றி பார்ப்போம். இணையதளத்தில் வாங்கும் மருந்துகள், கடைகளில் வாங்கும் மருந்துகளைவிட குறைந்த விலையில் எளிதாகக் கிடைக்கக் கூடியவையாக உள்ளன. முதியவர்கள், வீட்டைவிட்டு வெளியேற முடியாத நிலையில் இருப்பவர்கள், ஊரைவிட்டு தாண்டி ஒதுக்குப்புறத்தில் வசிப்பவர்கள் என இவர்களுக்கெல்லாம் இணையதள மருந்துச் சேவை வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. 'தள்ளுபடி கிடைக்கிறது. குறுகிய காலத்தில் வீட்டிற்கே வந்து கொடுத்துவிடுகிறார்கள். மாற்று மருந்துகள் மற்றும் குறிப்பிட்ட மருந்துகளால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளையும் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. கடைகளில் நேரடியாக வாங்குவதைவிட, ஆன்லைனில் வாங்கும் மருந்துகள் தரமானவையாக இருக்கின்றன' என்று பெரும்பாலான நுகர்வோர் கருதுகின்றனர். ஆனால்...'' என்று நிறுத்திய மருத்துவர் வி. பத்மா, இதில் உள்ள பாதகங்களை விளக்கினார்.

இணையதள மருந்துச் சேவை, மக்களால் வரமாகக் கருதப்பட்டாலும், பல வெப்சைட்டுகள் முறைப்படுத்தப்படாத சேவையைத்தான் வழங்கிவருகின்றன.
மருத்துவர் வி.பத்மா

* ''சில ஆன்லைன் பார்மசிகள், நோயாளிகளின் பிரச்னைகளை உள்ளீடுகளாகத் தரச்சொல்லி, அவற்றின் அடிப்படையில் தாங்கள் நியமித்துள்ள மருத்துவர்கள் மூலமாக அந்தப் பிரச்னைகளுக்கான மருந்துகளைப் பரிந்துரைக்க வைக்கின்றனர். இதுபோன்று செயல்படுபவர்களை, 'சைபர் டாக்டர்' என்கின்றனர். அந்தந்த துறை சார்ந்த மருத்துவர்களிடம் நேரடியாகப் பரிந்துரை பெறாமல், இந்த முறையில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவதும் சுய மருத்துவம் செய்துகொள்வது போன்றதுதான். இதுபோன்ற பரிந்துரையில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துவோர், பக்கவிளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது.

ஆன்லைன் மருந்துகள்
ஆன்லைன் மருந்துகள்
Vikatan

* உலக அளவில் ஆன்லைன் பார்மசி வளர்ந்துவருகிறது. அமெரிக்காவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்லைன் மருந்து விற்பனையகங்கள் செயல்பட்டுவருவதாகத் தெரிகிறது. இணையதள மருந்துச் சேவை, மக்களால் வரமாகக் கருதப்பட்டாலும், இதில் பல வெப்சைட்டுகள் முறைப்படுத்தப்படாத சேவையைத்தான் வழங்கிவருகின்றன.

* உலக அளவில் செயல்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான The Alliance for Safe Online Pharmacies (ASOP Global), சட்டத்துக்குட்பட்ட மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் மருந்துச் சேவையை மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் செயலாற்றிவருகிறது. இதன் தேவை மிக முக்கியம் எனும் அளவுக்கு, ஆன்லைன் மருந்து விற்பனையில் பல விபரீதங்கள் உள்ளடங்கியுள்ளன.

ஆன்லைன் பார்மசி
ஆன்லைன் பார்மசி
பரிந்துரைச்சீட்டு தேவையில்லை!
பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல்தான், இணையதளத்தில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

* மன அழுத்தம், மனச்சோர்வு, மன உளைச்சல், உடல் எடைக்குறைப்பு, கருக்கலைப்பு போன்றவற்றுக்கான மருந்துகள் எளிதாகக் கிடைக்க இணையதள விற்பனை வழிசெய்கிறது. இத்தகைய மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி, அளவு பற்றிய விழிப்புணர்வு இன்றி எடுப்பதால், இம்மருந்துகளுக்கு மக்கள் அடிமையாகும் நிலை பெருகிவருகிறது.

* காலாவதியான மற்றும் கலப்பட மருந்துகள், நோயாளிகளை இக்கட்டான உடல்நிலைக்கு எடுத்துச்செல்லும். மருத்துவர் பரிந்துரைக்கும் பிராண்ட் இல்லாமல் வேறு பிராண்ட் கொடுக்கும்போது, அந்த மருந்தின் மூலக்கூறுகளின் அளவு கூடுதலாகவோ குறைவாகவோ உள்ளவற்றை அனுப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஆன்லைன் பார்மசி
ஆன்லைன் பார்மசி
`சோரியாசிஸை குணப்படுத்த மருந்து இருக்கிறதா?' - சித்த மருத்துவர் விளக்கம்
#WorldPsoriasisDay

* அரசாங்கம் சட்டம் கொண்டுவந்தாலும், முறைப்படுத்த முடியாமல் புற்றீசலாக இணையதள மருந்து விற்பனை, பல்கிப் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக, பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமலே இணையதளத்தில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

* நுகர்வோர்தான் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கொடுக்கும் இணையதளங்களை அறவே தவிர்க்க வேண்டும். தரமான, பாதுகாப்பான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்கீழ் தரக்கூடிய ஆன்லைன் பார்மசிகளை மட்டுமே நாட வேண்டும். ஒருவேளை தவறுதலான, அல்லது தேவையில்லாத மருந்துகளை அனுப்பியிருந்தால், சம்பந்தப்பட்ட ஆன்லைன் பார்மசி அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைத் தருகிறதா என்று பார்க்க வேண்டும். முக்கியமாக, சுய மருத்துவத்தை ஆதரிக்கும் ஆன்லைன் பார்மசிகளைத் தவிர்ப்பது நுகர்வோரின் நலனுக்கு நல்லது'' என்றார் டாக்டர் வி. பத்மா.

ஆன்லைன் பார்மசி, மருந்துகளின் தரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது!
மருந்தியலாளர்
ஆன்லைன் பார்மசி
ஆன்லைன் பார்மசி

மருந்தியலாளர் எம். பாலசுப்ரமணியன், ஆன்லைன் பார்மசிகளின் போக்கு குறித்துப் பகிர்ந்துகொண்டார். "ஆன்லைன் மருந்து விற்பனை வந்தது எங்களுக்குப் பெரிய அடி. நான் 30 வருட கடின உழைப்பால் இந்தத் துறையில் முன்னேறி வந்திருக்கிறேன். தொழில் என்பதைத் தாண்டி, அவர்களின் நோய்க்கு எது வேண்டும், எது வேண்டாம் என்ற கவனத்துடன்தான் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் அணுகியிருக்கிறேன். தற்போது, ஆன்லைனில் அதிகத் தள்ளுபடி கிடைப்பதாகக் கருதி, பலரும் அதற்கு நகரத்தொடங்கியுள்ளனர். மருந்து நிறுவனங்களிலிருந்து எங்களுக்கு 18%தான் லாபம் கிடைக்கும். ஆனால், ஆன்லைன் பார்மசிகள் நேரடியாக மக்களுக்கு 25% - 30% வரை தள்ளுபடி கொடுக்கிறார்கள். இது எப்படி சாத்தியம்? அது அந்த மருந்துகளின் தரத்தைக் கேள்விக்குறியாக்குகிறது'' என்றவர், ஓர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

''சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவி, குறிப்பிட்ட ஓர் இருமல் மருந்து வேண்டும் எனக் கேட்டார். நான் மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் கேட்டேன். அது, H1 பிரிவிலுள்ள மருந்து என்பதால் மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் அவசியம். அவரிடம் பிரிஸ்கிரிப்ஷன் இல்லை. நானும் மருந்தைக் கொடுக்கவில்லை. இம்மருந்தை சில டீன் ஏஜ் இளைஞர்கள் போதைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாள்கள் கழித்து அந்த மாணவி என்னிடம், அந்த மருந்து இரண்டு பாட்டில்கள் தன்னிடம் இருப்பதைக் காட்டி, 'ஒரு பாட்டில் கொடுக்க மாட்டேன்னீங்க, பாருங்க நான் ரெண்டு பாட்டில் ஆன்லைன்ல வாங்கிட்டேன்' எனக் கூறிச் சென்றார். அந்த மருந்தை 10 ml எடுத்தால் மட்டும்தான் அது மருந்து. அதற்கு மேல் போனால், அது போதைப்பொருள்'' என்று அதிர்ச்சியளித்தவர்,

ஆன்லைன் பார்மசி
ஆன்லைன் பார்மசி

''எங்கள் அமைப்பு மூலம், ஆன்லைன் பார்மசிகளை முறைப்படுத்துவது குறித்து மாநில மற்றும் மத்திய அரசுகளிடம் முறையிட்டோம். ஆனால், அதற்கு எந்தப் பலனும் இல்லை. ஆன்லைன் மருந்து வர்த்தகம் செய்வது பன்னாட்டு நிறுவனங்கள் என்பதால், இதில் ஏதேனும் முறைகேடுகள், குற்றங்கள் நடக்கும்போது, வழக்கிலிருந்து அவர்கள் எளிதில் வெளிவந்துவிடுகின்றனர்."

"எங்களுக்கு ஒரு பதில் வேண்டும், நியாயம் வேண்டும். மேலும், ஆன்லைன் பார்மசிகளின் விபரீதங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!"
பாலசுப்ரமணியன்