Published:Updated:

புத்தம் புது காலை : சாக்லேட்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா… இனிப்பும், கசப்பும் கலந்த வரலாறு!

டார்க் சாக்லேட்
டார்க் சாக்லேட்

கோக்கோ(cocoa) விதைகளை ஆப்பிரிக்க நாடுகளான ஐவரி கோஸ்ட், கானா, நைஜீரியா, கேமரூன் எனப் பல நாடுகள் உற்பத்தி செய்கின்றன என்றாலும் இவற்றுள் முக்கியமானது ஐவரி கோஸ்ட் தான்.

ஸ்பெயின் நாட்டு இளவரசியை மணந்து ஹனிமூன் முடிந்து வந்த பிரெஞ்சு மன்னர் 13-ம் லூயிஸிடம், "மண வாழ்க்கை எப்படி இருக்கிறது?" என்று கேட்டார்களாம். அதற்கு அவர் '’டார்க் சாக்லேட் போல கசப்பும், இனிப்பும் சேர்ந்துதான் இருக்கிறது… ஆனாலும் சுவையாகவே இருக்கிறது’’ என்று பதில் அளித்தாராம்!

இன்று சுவைக்காகவும், காதலுக்காகவும் நாம் பரிசளிக்கும் சாக்லேட்டுகளின் பயன்பாடு உண்மையில் முதலில் மருந்தாகவும் பின்பு உணவாகவும் தான் ஆரம்பித்தது என்பது தெரியுமா?

ஆம்... சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன், பண்டைய மீசோ-அமெரிக்கன் நாட்டின் (தற்போதைய மெக்சிகோ) ஒல்மக் பழங்குடியினர், உடல்நிலை சரியில்லாதபோது தங்களது பூமியில் விளைந்த கோக்கோ செடிகளின் கொட்டைகளிலிருந்து தயாரித்த ஒரு கசப்பான பானத்தை மருந்தாக அருந்தியபோது உடல்நலம் தேறியதை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், இவர்களைப் பின்தொடர்ந்து வந்த மாயன் நாகரிகத்தில் வறுத்துப் பொடிசெய்த கோக்கோ கொட்டைகளை கார்ன் மற்றும் மிளகாயுடன் சேர்த்து சமைத்திருக்கிறார்கள். அதன் பெயர் xocolatl. இந்த கசப்பான ஆனால், சுவையான கஞ்சியை திருவிழாக்களின் போது, கடவுளுக்கு படைத்து பிறகு தாங்களும் உட்கொண்டிருக்கிறார்கள்.

ஆரோக்கியம், புத்துணர்ச்சி, பாலுணர்வுத் தூண்டுதல் என எல்லாவற்றிலும் ஆற்றலை வழங்கியதால், ஒரு கட்டத்தில் பானமாகத் தயாரிக்கவும், சமயங்களில் பண்டமாற்றில் நாணயம் போலவும் அஸ்டெக் நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது இந்த xocolatl (சாக்லெட்) எனும் கோக்கோ கொட்டைகள்.

 cocoa
cocoa

அப்போது லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு கடற்பயணமாக வந்த ஸ்பெயின் நாட்டின் ஹெர்னன் கோர்டிஸுற்கு அளித்த விருந்தில் அஸ்டெக் மன்னர் சாக்லெட் பானத்தையும் சேர்த்து வழங்கியிருக்கிறார். இதன் சுவையில் மயங்கிய மன்னர் கோர்டிஸ், ஸ்பெயினுக்கு கோக்கோவை எடுத்துச் சென்றதில் இருந்துதான் இன்றைய சாக்லேட்டின் இனிப்பான வரலாறு ஆரம்பித்துள்ளது.

கோக்கோவின் கசப்பான சுவையுடன், தேன் மற்றும் வெனிலாவை சேர்த்து இனிப்பான ஒரு புதிய பானத்தை தனது புதுமனைவி கொடுத்ததைத்தான், மணவாழ்வு கசப்பும் இனிப்புமாக இருக்கிறது என்று பிரெஞ்சு மன்னரை சொல்லவைத்திருக்கிறது.

Theobroma cacao என்ற கோக்கோ மரத்திலிருந்து பெறப்படும் பப்பாளி அளவிலான பழங்களில், ஒரு பழத்தில் நாற்பதிலிருந்து ஐம்பது கோக்கோ விதைகள் கிடைக்கும். இவற்றை கைகளில் மட்டுமே பறித்து, முறையாகக் காயவைத்து, பதனிட்டு, பின்பு வறுத்து, அவற்றை உடைக்கும்போது கிடைக்கப்பெறும் nibs என்ற உட்பகுதியை அரைக்கும்போதுதான் சாக்லெட்டின் மூலப்பொருளான கோக்கோ லிக்கர் எனும் கசப்பான அடிப்படை பானம் கிடைக்கிறது.

அதன்பிறகு இந்த கோக்கோ லிக்கரில் லெசித்தின், சர்க்கரை, வெனிலா, கோக்கோ பட்டர் ஆகியன சேர்க்கப்படும்போது அது டார்க் சாக்லேட் ஆகிறது. இதனுடன் பாலின் கொழுப்பு சேர்க்கப்படும்போது அது மில்க் சாக்லெட் என்றும், வறுத்த கொட்டைகள் மற்றும் உலர் பழங்கள் சேர்க்கப்படும்போது அது ஃப்ரூட் & நட் சாக்லேட் என்றும், கோக்கோ லிக்கர் சேர்க்கப்படாதவை வெறும் ஒயிட் சாக்லேட் என்றும் அழைக்கப்படுகிறது.

 cocoa
cocoa

ஸ்பெயினிலிருந்து தொடங்கி ஐரோப்பா, பிறகு அமெரிக்கா என கண்டங்கள் தாவியா இந்த சாக்லேட்தான் இன்றுவரை அன்பு, காதல், பாசம் ஆகியவற்றைப் பகிர உதவும் ஸ்வீட் ட்ரீட்!

ஸ்வீட் ட்ரீட் என்றாலே கலோரிகளும், உடற்பருமனும் தானே நினைவுக்கு வரும்? ஆனால் இவற்றைத் தாண்டிய ஆரோக்கியம் சாக்லெட்டில் அதிகம் நிறைந்துள்ளது என்கிறது மருத்துவ அறிவியல். முக்கியமாக டார்க் சாக்லேட்டின் நன்மைகளைப் பட்டியலிடுகிறது.

உண்மையில் கோக்கோ கொட்டைகளில் அதிகமுள்ள கஃபீன், மூளையில் உள்ள செரட்டோனின், டோப்பமைன் போன்ற உற்சாக நியூரோ டிரான்ஸ்மிட்டர்களை ஊக்கப்படுத்தி நம்மை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இயங்க வைக்கிறது. இவற்றின் தியோ-ப்ரோமின் மற்றும் ஃபினையில்-ஈதைல்-அமைன் நரம்புகளுக்கு மட்டுமன்றி இருதயத் தசைகளுக்கும், நுரையீரல் திசுக்களுக்கும் ஊக்கமளிக்கின்றன. இவற்றின் ஃபளாவனாயிட்ஸ் எனும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெருக்குவதுடன், வயோதிகத்தையும் கட்டுப்படுத்துகிறது. கல்லீரல் மற்றும் குடல் அழற்சிகளிலிருந்தும், கண்நோய் மற்றும் ஈறுகள் வீக்கத்திலிருந்தும் இந்த டார்க் சாக்லேட்கள் பாதுகாப்பளிக்கின்றன.

 cocoa
cocoa

கர்ப்ப காலத்தில் ஒருநாளில் 30கிராம் வரை உட்கொள்ளப்படும் சாக்லேட், தொப்புள்கொடியின் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் கர்ப்பகால இரத்த அழுத்தம், குறைந்த எடைக் குழந்தை ஆகியன தவிர்க்கப்படுகிறது. அதேபோல மெனோபாஸ் காலத்தில் அதிகாலையில் 100 கிராம் வரை உட்கொள்ளும்போது, உடலின் கொழுப்புகளும், கலோரிகளும் நன்கு குறைந்து இருதயத்தை வலுவாகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.

ஆனால், இத்தனை நன்மைகளைத் தரும் இந்த சாக்லேட்டுக்கு சில கசப்பான பக்கங்களும் இருக்கின்றன. இந்த கோக்கோ விதைகளை ஆப்பிரிக்க நாடுகளான ஐவரி கோஸ்ட், கானா, நைஜீரியா, கேமரூன் எனப் பல நாடுகள் உற்பத்தி செய்கின்றன என்றாலும் இவற்றுள் முக்கியமானது ஐவரி கோஸ்ட் தான்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான இந்த நாடு, ஆண்டுதோறும் ஏறத்தாழ அரை மில்லியன் மெட்ரிக் டன்களை, அதாவது உலக உற்பத்தியில் 70 சதவிகித கோக்கோவை உற்பத்தி செய்து Cadburys, Lindt, Nestlé, Toblerone, Hershey போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. ஐவரி கோஸ்ட்டின் 50 மில்லியன் மக்களின் வாழ்வாதாரமாக கோக்கோ விளங்குகிறது என்றாலும், அங்கிருப்பவர்களுக்கு அது மிகவும் குறைந்த வருமானத்தையே ஈட்டித்தருகிறது. வருவாய்க்காக அங்கே கோக்கோ பழங்களைப் பறிக்கவும், விதைகளைப் பதனிடவும் குழந்தைகளை வேலை செய்யவைக்கிறார்கள்.

நமது நாவினில் இனித்திடும், நமது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஒவ்வொரு சாக்லேட்டுக்கும் பின்னால் இருபது லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் வியர்வைத் துளிகள் உள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு உணவு, கல்வியறிவு, சுகாதாரம் ஏன் நியாயமாக கிடைக்கப்பெற வேண்டிய குழந்தைப்பருவம் கூட கிடைப்பதில்லை. மேலும் இந்த விதைகளிலிருந்து தான் சாக்லேட் எனும் இனிப்பு தயாரிக்கப்படுகிறது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது என்பதுதான் துயர் மிகுந்தது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, கோக்கோ ஃபேர் டிரேட் (Fair Trade) என்ற நியாயவிலை வர்த்தகம் தோற்றுவிக்கப்பட்டது. அதில் பன்னாட்டு சாக்லேட் நிறுவனங்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, மருத்துவ உதவி, புதிய தொழில்நுட்ப சேவை ஆகியவற்றை வழங்கி வருகின்றன. ஆனாலும், இன்றளவும் சிறு குழந்தைகள் கோக்கோ தோட்டப்பணிக்கு வற்புறுத்தப்படுகின்றனர் என்ற கசப்பான தகவல்களும் வெளியாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

மற்ற அனைவருக்கும் தித்திப்பைத் தரும் இந்த டார்க் சாக்லேட்கள், இக்குழந்தைகளின் வாழ்வையும் தித்திப்பாக்கட்டும்!

#WorldChocolateDay

அடுத்த கட்டுரைக்கு