Published:Updated:

`ரத்தச்சோகை முதல் பசியின்மை வரை...' - குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் அவசியம்!

 மாத்திரைகள்
மாத்திரைகள்

குழந்தைகளின் தடைபடாத வளர்ச்சிக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொள்வது அவசியமானதாகிறது.

உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, இந்தியாவில் 1 - 14 வயதுடைய குழந்தைகளில், 24.1 கோடி பேர் குடற்புழு தொற்று ஏற்படக்கூடிய அபாய நிலையில் உள்ளனர். உலக அளவில் குடற்புழு தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளில், 28 சதவிகிதம் பேர் இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள்தான். இதுபோன்ற பாதிப்புகளிலிருந்து குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினரைப் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 10-ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 10-ம் தேதி, தேசிய குடற்புழு நீக்க தினங்களாகக் கடைபிடிக்கப்பட்டுவருகின்றன. இந்நாள்களில், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு, அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகளின் வாயிலாக, வயிற்றில் உள்ள குடற்புழுக்களை அழிக்கும் அல்பெண்டசோல் மாத்திரைகள் அரசால் வழங்கப்படுகின்றன.

`ரத்தச்சோகை முதல் பசியின்மை வரை...' - குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் அவசியம்!

சுகாதாரமற்ற பழக்கவழக்கங்களைக் கடைபிடிப்பதும், அசுத்தமான உணவுகளை உண்பதும், திறந்தவெளியில் மலம் கழிப்பதும் குடற்புழுக்கள் உருவாகக் காரணமாக அமைகின்றன. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்தச்சோகை, வயிற்று உபாதைகள், சோர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவற்றைத் தடுக்கும்பொருட்டே மத்திய, மாநில அரசுகள் குடற்புழு நீக்க தினத்தைக் கடைபிடித்து வருகின்றன. அல்பெண்டசோல் மாத்திரைகளை உட்கொள்வதன் மூலம் குடற்புழுக்கள் நீக்கப்பட்டு, ரத்தச்சோகை பிரச்னை வராமல் காக்க முடியும் என்றும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். எனவே, குழந்தைகளின் தடைபடாத வளர்ச்சிக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்வது அவசியமாகிறது.

Vikatan

குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, அல்பெண்டசோல் 400 மில்லி கிராம் மாத்திரைகள் குழந்தைகளுக்கு வழங்கிட, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

குடற்புழு 
 மாத்திரைகள்
குடற்புழு மாத்திரைகள்
Representational image

காரணிகள்..!

* அசுத்தமான சுற்றுப்புறம்தான் குடற்புழு பிரச்னை ஏற்பட அடிப்படைக் காரணம். குறிப்பாக, தெருவோரங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்களாகப் பயன்படுத்துபவர்களுக்கு, இந்தப் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.

* அசுத்தமான தெருவில், மண் தரையில், தண்ணீரில் குழந்தைகள் விளையாடுவது, அழுக்கடைந்த பொம்மைகளுடன் விளையாடுவது, காலில் செருப்பு அணியாமல் நடப்பது, சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவாதது, மலம் கழித்த பின் கைகளை சோப்புப் போட்டு சரிவர கழுவாதது ஆகியவை குடற்புழு பிரச்னை ஏற்படத் துணைபோகின்றன.

* குழந்தைக்கு மண் உண்ணும் பழக்கம் இருந்தால், குடலில் புழு வளர்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

* சமையலுக்கு முன்பு காய்கறிகளைக் கழுவிச் சுத்தம் செய்யத் தவறினாலும், குடற்புழு பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

`ரத்தச்சோகை முதல் பசியின்மை வரை...' - குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் அவசியம்!

குடற்புழு பாதிப்புகளைத் தவிர்க்க ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மாத்திரைகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு