Published:Updated:

டெல்லி சென்று வந்த பேராசிரியருக்கு கொரோனா தொற்று! - கரூரில் முதல் பாதிப்பு

கொரோனா
கொரோனா

அவருக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு காய்ச்சல், சளி அதிகம் இருக்கவே, கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

டெல்லி சென்று வந்த குளித்தலையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக, கரூர் மாவட்டத்தில் முதலாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

உலகத்தையே பீதியில் தள்ளியிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் பல மாவட்டங்களில் தொடர, கரூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தது.

"படிச்சவங்களே, கொரோனா வராதுனு வெளியில் போவது கொடுமை!" -கரூர் சமூக ஆர்வலர் ஆதங்கம்

இந்த நிலையில், கரூர் மாவட்டம், குளித்தலை பெரியபாலம் வண்டிப்பேட்டை தெருவைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு மத வழிபாடு சம்பந்தமாக சென்று, குளித்தலை திரும்பியதாகச் சொல்கிறார்கள். ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகளிடமோ அல்லது மருத்துவர்களிடமோ, தான் டெல்லி போய் வந்த தகவலைச் சொல்லாமல் இருந்ததோடு, சாதாரணமாக வெளியிலும் நடமாடி வந்ததாகக் கூறப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்பு
போலீஸ் பாதுகாப்பு

சுய ஊரடங்கைக்கூட அவர் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவருக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு காய்ச்சல், சளி அதிகம் இருந்திருக்கிறது. அதைக் கேள்விப்பட்ட சுகாதாரத் துறையினர் 108 அம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்த நபரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே அவரின் ரத்தம், சளி மாதிரிகளை எடுத்து சோதனை செய்ததில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது. அவர், தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

குளித்தலை தனியார் கல்லூரி பேராசிரியருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதையடுத்து, அவரது வீட்டில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நகராட்சிப் பணியாளர்கள் அவரது வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள்களுக்கு முன்பு பேராசிரியருக்கு சளி, காய்ச்சல் இருந்ததைத் தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோதே, `உங்களது குடும்பத்தினர் அனைவரையும் வெளியில் நடமாட வேண்டாம், உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்தினர். ஆனால், அதைக் காதில் வாங்காத அவர்கள், இரண்டு நாள்களாக வெளியில் நடமாடியுள்ளனர்.

கொரோனா
கொரோனா

இதை அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், இன்று காலை அவர்களது வீட்டுக்குச் சென்று, வீட்டைச் சுற்றி பேரிகார்டு அமைத்து, அவர்கள் வெளியில் வராத அளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்தினர். இந்த நிலையில், அந்தப் பேராசிரியருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், அவர்கள் குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, அவர்களால் மற்றவர்களுக்கும் பரவியிருக்குமோ என்ற அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பேராசிரியரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் எங்கெல்லாம் சென்றார்கள், யார் அவர்களோடு நெருங்கி இருந்தார்கள் என்று கண்டுபிடித்து, அவர்களையும் தனிமைப்படுத்தி, அவர்களுக்குச் சோதனை நடத்த இருக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு