Published:Updated:

கடலூரில் பரவும் டெங்கு! - 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

Dengue
Dengue

டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கும் 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

தென்மேற்குப் பருவமழை பெய்து வருவதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் பாதிப்பின் தீவிரம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர்

அவர்களில் காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன்(19), நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த நவீன் (17) மற்றும் காந்திராஜ் (17), சிதம்பரத்தையடுத்த சி.வாக்கராமாரி கிராமத்தைச் சேர்ந்த கல்யாணி (53), பண்ருட்டி மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன்(17), பண்ருட்டி அக்கடவல்லி கிராமத்தைச் சேர்ந்த கோபிநாத்(14), நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த மோகன்தாஸ் (31) ஆகிய 7 பேருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் உறுதிசெய்யப்பட்ட அனைவரும் டெங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Dengue Special Ward, Cuddalore
Dengue Special Ward, Cuddalore

இது குறித்து கடலூர் மாவட்ட இணை இயக்குநர் (குடும்ப நலப் பணிகள்) ரமேஷ்பாபு கூறுகையில், ``டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கும் 7 பேருக்கும் தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

வீட்டினருகே டயர், தேங்காய் சிரட்டை, உடைந்த வாளி, குடம் போன்ற பொருள்களைச் சேமித்து வைத்தால் அவற்றில் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உருவாகும். எனவே, பொதுமக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்" என்றார்.

ஊழல்மயமான டெங்கு ஒழிப்பு... 
பங்கு போட்ட அதிகாரிகள் செழிப்பு!
Dengue Special Ward Cuddalore
Dengue Special Ward Cuddalore

கடலூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் கீதா கூறுகையில், ``டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்துக் கிராமங்களிலும் கொசுக்கள் பரவாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு