Published:Updated:

கோவிட்-19 பரவலைக் குறைக்குமா மௌத்வாஷ்..? - பல் மருத்துவர் விளக்கம்

கொரோனா தொற்று ஏற்பட்டவரிடமிருந்து வெளிப்படும் சளி, உமிழ்நீர் வழியே இந்த வைரஸ் அதிகமாகப் பரவுகிறது. இந்தப் பரவலைக் குறைக்க மௌத்வாஷ் உதவும் என்கிறார்கள் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

SARS-CoV-2... நாம் நினைத்துப் பார்க்காத நெருக்கடிகளுக்குள் நம்மைச் சிக்க வைத்துக்கொண்டிருக்கும் 21-ம் நூற்றாண்டின் வைரஸ்! இதற்கான தடுப்பு மருந்துகளே இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இந்தத் தொற்றைக் குணப்படுத்தக்கூடிய மருந்து கண்டுபிடிப்பு குறித்த கேள்விகள் அவிழ்க்கப்படாத முடிச்சுகளாகவே உள்ளன.

இதனால் `வருமுன் காப்பதே சிறந்தது' என்பதைக் கருத்தில் கொண்டு, தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இவற்றில் மாஸ்க், சானிட்டைசர், தனிமனித இடைவெளி முக்கிய இடம் வகிக்கின்றன.

கொரோனா தொற்று ஏற்பட்டவரிடமிருந்து வெளிப்படும் சளி, உமிழ்நீர் வழியே இந்த வைரஸ் அதிகமாகப் பரவுகிறது. இந்தப் பரவலைக் குறைக்க மௌத்வாஷ் உதவும் என்கிறார்கள் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும். என்றாலும், கோவிட்-19 தொற்று ஏற்படாமல் தடுக்க இது கைகொடுக்காது, தொற்று ஏற்பட்டவர்களுக்கு வாயில் வைரல் லோடைக் குறைத்து, அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க மட்டுமே உதவும் என்பதையும் அடிக்கோடிட்டுச் சொல்கிறார்கள்.

மாதவிடாய் சுழற்சியைப் பாதித்த லாக்டௌன்... காரணங்கள், தீர்வு!

சமீபத்தில் ஜெர்மனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் குறித்து நடத்திய ஓர் ஆய்வில் 'மௌத்வாஷ் பயன்படுத்துவதால் நம் வாயில் உள்ள நோய் ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகளைச் செயலிழக்க வைக்க முடியும்' என்கிறார்கள். அதாவது, ஒரு தரமான மௌத்வாஷ் பயன்படுத்தி 30 விநாடிகள் வாய் கொப்பளித்தால் அடுத்த சில மணிநேரத்துக்கு வாயில் இருக்கும் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

mouth wash
mouth wash

சில மாதங்களுக்கு முன்பு மௌத்வாஷ் குறித்து கொரியப் பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சி முடிவில் `க்ளோர்ஹெக்ஸிடின் (Chlorhexidine)' என்ற வேதிப்பொருள் கொண்ட மௌத்வாஷ் பயன்படுத்தும்போது, அது கொரோனா பரவலைத் தடுக்கக் கைகொடுக்கும்' என்று சொல்லப்பட்டிருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மௌத்வாஷ் பயன்படுத்தி வாய் கொப்பளித்தலின் அவசியம் மற்றும் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல் மருத்துவர் செந்தில்குமரனிடம் கேட்டோம்.

பல் மருத்துவர் செந்தில்குமரன்
பல் மருத்துவர் செந்தில்குமரன்

``டூத் பேஸ்ட் போன்றே மௌத்வாஷும் பல வருடங்களுக்கு முன்பிருந்தே பற்கள் மற்றும் வாய் சுத்தத்துக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக, மௌத்வாஷ்கள் பற்களைச் சுத்தம் செய்வதற்காகவும், வாயின் துர்நாற்றத்தை நீக்கவும் உதவுகின்றன.

இந்த மௌத்வாஷ்களில் `க்ளோர்ஹெக்ஸிடின் (Chlorhexidine)' என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நுண்ணுயிரிகளைச் செயலிழக்க வைக்கும் திறன் உண்டு. 0.2% என்ற அளவில் க்ளோர்ஹெக்ஸிடின் சேர்க்கப்பட்ட மௌத்வாஷை 10 மில்லி லிட்டர் அளவில் எடுத்துக்கொண்டு, 30 விநாடிகள் வாய் கொப்பளிக்கும்போது வாயில் உள்ள நோய் ஏற்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். வாயில் ஏற்படும் துர்நாற்றமும் குறையும். ஒருமுறை மௌத்வாஷ் கொண்டு வாய் கொப்பளித்தால் அடுத்த இரண்டு மணிநேரங்களுக்கு வாய் நோய்க் கிருமிகள் இல்லாமலும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அந்த வகையில், கோவிட்-19 வைரல் லோடைக் குறைக்கவும் இது உதவும்.

ஏசிம்ப்டமடிக் கொரோனா தொற்றாளர்களுக்கும் ஆபத்து அதிகம்... புது ஆய்வு!

தினமும் காலை, மாலை, இரவு என்று மூன்று வேளைகள் மௌத்வாஷ் பயன்படுத்தி வாயைச் சுத்தம் செய்யலாம். இதனால் வாய், தொண்டையில் நோய்க் கிருமிகளினால் ஏற்படும் தொற்றுகள் தவிர்க்கப்படுகின்றன. 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகள் வாய்கொப்பளிக்கும்போது மௌத்வாஷை விழுங்கிவிட வாய்ப்புள்ளது என்பதால் அவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் இதைப் பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. கொரோனா காலத்தில் பல் சார்ந்த பிரச்னைகளுக்கு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு முதலில் மௌத்வாஷ் கொடுத்து வாய் கொப்பளிக்கச் செய்த பிறகே சிகிச்சையைத் தொடங்குகிறோம்.

gargle
gargle

மௌத்வாஷ் பயன்படுத்த விரும்பாதவர்கள் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு சமையல் உப்பைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம். இதுவும் வாயில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்க உதவுகிறது. இவற்றைத் தவிர்த்து பல் மற்றும் ஈறுகளில் ரத்தம் வடிதல், வீக்கம் போன்று ஏதாவது ஏற்பட்டால் அலட்சியப்படுத்தாமல் ஒரு பல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது" என்றார் பல் மருத்துவர் செந்தில்குமரன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு