எந்த வகை புற்றுநோய்க்கு எந்தப் பரிசோதனை? - ஒரு கம்ப்ளீட் கைடு! #DoubtOfCommonMan

நகம், முடியைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் புற்றுநோய் வரலாம். ஆனால் அவற்றின் தன்மை, ஒன்றோடொன்று முற்றிலும் வேறுபட்டது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மரபணு மாறுபாடுகள் காணப்படும்.
இந்தியாவை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன தொற்றாநோய்கள். தொற்றா நோய்களின் பாதிப்பு இங்கே 53 சதவிகிதமாக உள்ளது. தொற்றா நோய்கள் பட்டியலில் சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், இதய ரத்தநாள நோய்கள், புற்றுநோய் ஆகியவை அடங்கும். புற்றுநோய்களின் தாக்கம் 2020-ம் ஆண்டு தற்போதிருப்பதைவிட 25 சதவிகிதம் அதிகரிக்கும்' என்று கணிக்கப்பட்டுள்ளது.


புற்றுநோய் குறித்து, விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கார்த்திக் கமலக்கண்ணன் என்ற வாசகர் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். "புற்றுநோய்களில் பலவகைகள் உள்ளன. அனைத்துப் புற்றுநோய் பாதிப்பையும் ஒரே பரிசோதனையில் கண்டறிய முடியுமா, உடலில் எங்கெல்லாம் புற்றுநோய் பாதிப்பு ஊடுருவியிருக்கிறது என்பதைக் கண்டறிய பரிசோதனைகள் இருக்கின்றனவா?" என்பதுதான் அவரது கேள்வி.
"புற்றுநோய் என்பது எந்த உறுப்பில் வேண்டுமானாலும் வரலாம். அனைத்தையும் `புற்றுநோய்' என்ற பொதுவான பெயரில் அடக்கினாலும், அவற்றின் தன்மைகள் வேறுவேறானவை. எனவே, அனைத்து வகை புற்றுநோய்களையும் ஒரே பரிசோதனையில் கண்டறிவது சாத்தியமில்லை. ஆனால் புற்றுநோய் உடலின் எந்தெந்தப் பகுதியில் எல்லாம் பரவியிருக்கிறது என்பதை `PET சி.டி.ஸ்கேன்' (Positron emission tomography) என்ற பரிசோதனையின் மூலம் கண்டறிய முடியும்" என்கிறார் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாசுந்தரம்.

இதுதொடர்பாக விரிவாகப் பேசினார் அவர். "புற்றுநோய் என்பது ஓர் உறுப்பை மட்டும் பாதிக்கும் நோய் கிடையாது. நகம், முடியைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் புற்றுநோய் வரலாம். ஆனால் அவற்றின் தன்மை, ஒன்றோடொன்று முற்றிலும் வேறுபட்டது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மரபணு மாறுபாடுகள் காணப்படும். எந்த உறுப்பு புற்றுநோயால் பாதிக்கப்படுகிறதோ அதற்கென்று பிரத்யேக அறிகுறிகள் தென்படும். அதனால்தான் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான பரிசோதனைகள் அவசியமாகின்றன. அதனால் ஒரே பரிசோதனையின் மூலம் அனைத்துப் புற்றுநோய்களையும் கண்டறிய முடியாது. அதற்கான சாத்தியங்கள் இன்னும் ஏற்படவில்லை.
பெண்களை பாதிக்கும் மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய, 'ஃபுல் ஃபீல்டு டிஜிட்டல் மேமோகிராம்' (Full field digital mammogram)என்ற பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இந்தப் பரிசோதனை அவசியம். மேமோகிராம் பரிசோதனையில் 'அனலாக் மேமோகிராம்' என்ற பரிசோதனையும் இருக்கிறது. ஆனால், அதில் மிகவும் சிறிய அளவிலான பாதிப்புகள் தெரியாது என்பதால் டிஜிட்டல் பரிசோதனைதான் சிறந்தது.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய 'பாப் ஸ்மியர்' (Pap smear) என்ற பரிசோதனை உள்ளது. அந்தப் பரிசோதனையில் அசாதாரணமான செல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் திசுப் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும். கர்ப்பப்பையை பாதிக்கும் 'எண்டோமெட்ரியல்' புற்றுநோயை (Endometrial cancer) கண்டறிய 'ஹிஸ்ட்ரோஸ்கோப்பி' (Hysteroscopy) என்று அழைக்கப்படும் எண்டோஸ்கோப்பி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சூலகத்தில் ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிய அடிவயிற்றுப் பகுதியில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்யவேண்டும்.
ஆண்களை அதிகமாக பாதிக்கும் நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். எக்ஸ்-ரே பரிசோதனையில் நுரையீரல் புற்றுநோயைக் கண்டறியமுடியாது. மலக்குடல் புற்றுநோயைக் கண்டறிய, மலத்துவாரத்தின் வழியாக சிறிய ஒளியுடன் கூடிய குழாயை உட்செலுத்திச் செய்யும் 'சிக்மாய்டோஸ்கோப்பி' (Sigmoidoscopy) பரிசோதனையைச் செய்யவேண்டும். இரைப்பை, வயிற்றுப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்களை கண்டறிய எண்டோஸ்கோப்பி பரிசோதனை செய்யப்படும்.
புற்றுநோய் எந்த நிலையில் (Stage) உள்ளது, உடலின் வேறு பாகங்களுக்கும் பரவியிருக்கிறதா என்பதை பெட் (Positron emission tomography-PET) என்ற முழு உடல் சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் கண்டறிந்துவிடலாம். இந்த ஸ்கேன் பரிசோதனை புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை இல்லை.புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் எஸ்.ராஜாசுந்தரம்

ஆண்களைப் பாதிக்கும் பிராஸ்டேட் புற்றுநோயைக் கண்டறிய 'பிராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென்' (Prostate-specific antigen (PSA) என்று அழைக்கப்படும் ரத்தப் பரிசோதனையை மேற்கொண்டால் போதுமானது. ரத்தப் புற்றுநோய் வகைகளைக் கண்டறிய 'Complete blood count' (CBC) என்ற ரத்தப் பரிசோதனை போதுமானது. அதற்குப்பிறகு எலும்பு மஜ்ஜை பரிசோதனை செய்யவேண்டும்.
வாய்ப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் புற்றுநோயை மட்டும் மருத்துவர்கள் வெறும் கண்களாலேயே பரிசோதித்துக் கண்டறிந்துவிடமுடியும். எந்த உறுப்பில் என்னென்ன அறிகுறிகள் தென்படுகின்றன என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற பரிசோதனைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். புற்றுநோய் எந்த நிலையில் (Stage) உள்ளது, உடலின் வேறு பாகங்களுக்கும் பரவியிருக்கிறதா என்பதை பெட் (Positron emission tomography-PET) என்ற முழு உடல் சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் கண்டறிந்துவிடலாம். இந்த ஸ்கேன் பரிசோதனை புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனை இல்லை.

புற்றுநோய் அறிகுறிகள் தென்பட்டால், அதைக் கண்டறிவதற்காக மேலே கூறியுள்ள அடிப்படைப் பரிசோதனைகளை செய்யவேண்டும். அதன் பிறகு புற்றுநோய் பாதித்திருக்கும் பகுதியில் உள்ள திசுக்களைச் சேகரித்து பரிசோதனை (Biopsy) செய்து, அது எந்த வகையானது என்பதைக் கண்டறிய வேண்டும். இறுதியாகப் பாதிப்பின் தீவிரத்தை அறிந்துகொள்ள பெட் ஸ்கேன் செய்யவேண்டும்" என்றார் டாக்டர் ராஜாசுந்தரம்.