Published:Updated:

மலை, கடல், செடி, பூ... மனச்சோர்வுக்கு இயற்கையை மருந்தாக்கும் ஈக்கோதெரபி

ஈக்கோதெரபி

ஈக்கோதெரபி நம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் குழந்தை மனநிலையை நமக்கு மீட்டுக் கொடுக்கும். பிரச்னைகளைச் சமாளிப்பதற்கும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்குமான மனநிலையைக் கொடுக்கும்.

மலை, கடல், செடி, பூ... மனச்சோர்வுக்கு இயற்கையை மருந்தாக்கும் ஈக்கோதெரபி

ஈக்கோதெரபி நம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் குழந்தை மனநிலையை நமக்கு மீட்டுக் கொடுக்கும். பிரச்னைகளைச் சமாளிப்பதற்கும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்குமான மனநிலையைக் கொடுக்கும்.

Published:Updated:
ஈக்கோதெரபி

இன்று நம்மில் பலரும் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை, மனஅழுத்தம். தினமும் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட கோபப்பட்டு எரிச்சலடைகிறோம். இதனாலேயே அதீத மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். நமக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு அலுவலகம், வீடு, பணிச்சுமை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன. சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் ஒருவருக்கு ஏற்படும் மனஅழுத்தம் (Stress) அவ்வளவு ஆபத்தானது இல்லை. ஆனால், இந்த மனஅழுத்தத்தை வளரவிடும்போது அது மனச்சோர்வாக(Depression) மாற வாய்ப்புள்ளது. இது நம் மனநலத்துடன் உடல்நலனையும் சேர்த்து பாதிக்கும்போது விளைவுகள் மோசமாகின்றன.

மனஅழுத்தம்
மனஅழுத்தம்

இந்த 21-ம் நூற்றாண்டில், பிறந்த குழந்தைகள் முதல் பக்குவப்பட்ட பெரியவர்கள்வரை யாருக்கு வேண்டுமானாலும் மனஅழுத்தம் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அப்படி நமக்கு ஏற்படும் மனஅழுத்தத்தையும், மனச்சோர்வையும் வெளிப்படுத்தாமல், அதற்கான முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் இருக்கும்போது பிரச்னை தீவிரமாகும். மனச்சோர்வு ஏற்படுவோர்களில் பலர், 'நமக்கு மனநிலை சரியில்லை என்று நினைத்துக்கொள்வார்கள்' என்ற பயத்திலேயே மனநல ஆலோசகரையோ மனநல மருத்துவரையோ நாடிச் செல்லாமல் இருக்கிறார்கள். இது உடல் மற்றும் மனம் சார்ந்து விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனஅழுத்தத்திற்கு சிகிச்சை என்றதும், `மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், மருந்து மாத்திரைகளைத் தவிர வேறு என்ன இருந்துவிட போகிறது?' என்ற எண்ணம் நமக்கு ஏற்படலாம். ஆனால், மன உளைச்சல் பிரச்னைகளுக்கு இயற்கையையே ஒரு கருவியாகக்கொண்டு சிகிச்சை அளிக்கும் முறை இருக்கிறது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. 'ஈக்கோதெரபி (Ecotherapy)' என்ற பெயரில் இந்த சிகிச்சை முறை குறிப்பிடப்படுகிறது.

ஈக்கோதெரபி
ஈக்கோதெரபி

ஈக்கோதெரபி பற்றியும் அதனால் ஏற்படும் பலன்கள் பற்றியும் ஈக்கோதெரபி சிகிச்சை அளித்துவரும் மனநல ஆலோசகர் ஸ்ரீதேவியிடம் பேசினோம்.

``நமக்கு ஏற்படும் மனநலப் பிரச்னைகளை இயற்கையோடு இணைந்து பகுப்பாய்வு செய்து, அதற்கான சிகிச்சைகளையும் மலை, கடல், மரம், செடிகொடிகள் போன்ற இயற்கை வளங்களைக்கொண்டே மேற்கொண்டு, அந்தப் பிரச்னையைச் சரிசெய்யும் முறைதான் ஈக்கோதெரபி. இந்த இயற்கை சார்ந்த மருத்துவ சிகிச்சை முறையால் நம் உடல்நலமும் மனநலமும் மேம்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மனிதராகப் பிறந்த அனைவருக்கும் பல்வேறுபட்ட எண்ணங்களின் மோதல்களால் ஸ்ட்ரெஸ் என்ற மனஅழுத்தம் ஏற்படுவது இயல்புதான். இதில் பாசிட்டிவ் ஸ்ட்ரெஸ், நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் என்ற இரண்டு வகை உள்ளன. பாசிட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது ஆரோக்கியமான ஒன்று. ஒரு பாதையில் நடந்துசென்று கொண்டிருக்கும்போது வழியில் நீர்ப் பெருக்கெடுத்து ஓடும் ஆறு ஒன்று குறுக்கிடுகிறது. ஆற்றைக் கடந்து செல்ல வேண்டும் எனும்போது இயல்பாகவே ஒரு பயமும் மனஅழுத்தமும் நமக்கு ஏற்படும். இந்த மனஅழுத்தம், நமக்கு அடுத்து வரவிருக்கும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டி அதிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கும். இது ஆரோக்கியமான ஒன்று.

மனநல ஆலோசகர் ஸ்ரீதேவி
மனநல ஆலோசகர் ஸ்ரீதேவி

நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் என்பது, தேவையில்லாமல் எதையாவது நினைத்து மனதைக் குழப்பிக்கொண்டு அதனால் தேவையில்லாத தலைவலியையும் எரிச்சலையும் உண்டாக்கிக்கொள்வது. இந்த நெகட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை அதிகரிக்கவிடும்போதுதான் அது மனச்சோர்வாக மாறுகிறது. இதையும் கண்டுகொள்ளாமல்விடும்போது அது மனநோயாக மாறவும் வாய்ப்புள்ளது.

மனச்சோர்வுக்கு, அன்றாட வாழ்க்கையோடு இணைந்த சிகிச்சை முறையாக ஈக்கோதெரபி கருதப்படுகிறது. இந்தச் சிகிச்சைக்கு வருவோருக்கு, அவர்கள் பேசும் விதத்தை வைத்தே அவர்கள் மனநிலை மனஅழுத்தத்தில் உள்ளதா, மனச்சோர்வில் உள்ளதா, எந்த அளவில் உள்ளது எனக் கண்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல ஈக்கோதெரபி சிகிச்சை அளிப்போம்.

ஈக்கோதெரபி என்பது முழுக்க முழுக்க இயற்கையை மட்டுமே சார்ந்தது. இந்தச் சிகிச்சை முறையில் மலைப் பிரதேசங்கள், கடற்கரை, வயல்வெளிகள், நீர்நிலைகள், மரம், செடி, கொடிகள், பூக்கள் போன்றவைதான் சிகிச்சை கருவிகள். சாதாரணமாகவே இயற்கை நீர்நிலைகளையோ அல்லது பசுமையான இடங்களையோ பார்க்கும்போது நம் மனதில் ஒரு குதூகலம் ஏற்படுவது இயல்பு. இந்த அடிப்படைத் தத்துவம்தான் ஈக்கோதெரபியின் மையமாக உள்ளது.

ஈக்கோதெரபி
ஈக்கோதெரபி

நாம் அதீத மனஅழுத்தத்தில் இருக்கும்போது நமக்கு அந்த மனஅழுத்தத்தை ஏற்படுத்திய சூழலைவிட்டுச் சிறிது விலகி பசுமையான புல்வெளியில் வெறும் கால்களுடன் நடக்கும்போதோ, அல்லது குளிர்ந்த கடற்காற்றை அனுபவிக்கும்போதோ, நமக்கு உண்டான மனஅழுத்தம் பெருமளவு குறையும் என்பது உண்மை. தோட்டமிடுவது, குளிர்ந்த நீரில் கால் நனைப்பது, மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வருவது, கடற்கரை காற்றில் அமர்ந்திருப்பது, வண்ண வண்ணப் பூக்களை மோந்து ரசிப்பது, செடி கொடிகளைத் தொட்டு உணர்வது என, இவையெல்லாம் ஈக்கோதெரபி சிகிச்சை முறைகளில் சில. ஈக்கோதெரபி சிகிச்சைக்கு வருபவருக்கு அவரின் மனநிலை மற்றும் குணங்களைப் பொறுத்து அதற்குத் தகுந்தாற்போல எந்த இயற்கை இடங்களுக்குச் சென்று வரலாம் என்று ஆலோசனை வழங்குவோம்.

இந்த ஈக்கோதெரபி மூலம் கிடைக்கும் பலன்கள் ஏராளம். இதன் மூலம் நம் மனஅழுத்தம் குறைவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியும் ஏற்படும். நம் சுவாசம் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் நிதானமாகவும் ஆழமாகவும் இருக்கும்.

ஈக்கோதெரபி
ஈக்கோதெரபி

ஈக்கோதெரபி நம் ஆழ்மனதில் புதைந்திருக்கும் குழந்தை மனநிலையை நமக்கு மீட்டுக் கொடுக்கும். பிரச்னைகளை சமாளிப்பதற்கும் அவற்றிலிருந்து மீண்டு வருவதற்குமான மனநிலையைக் கொடுக்கும். தெளிவாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் ஈக்கோதெரபி உதவும். மேலும் இது நமது நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்" என்றார் மனநல ஆலோசகர் ஸ்ரீதேவி.

ஆக, ``ஈக்கோதெரபி" என்பது ஒரு மருந்தில்லா இயற்கை சார்ந்த சிகிச்சை முறையாகும். இதுபற்றிய விழிப்புணர்வை நம்மைச் சார்ந்தவர்களிடம் எடுத்துச் செல்வோம். உடல்நலத்தைப்போல மனநலமும் முக்கியம் என்பதை கருத்தில்கொண்டு இயற்கையயோடு இணைந்த ஓர் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism