Published:Updated:

``எடையைக் குறைக்கணும்னா அதுக்கு சம்மர்தான் சரியான டைம்... ஏன்னா?!" - டயட்டீஷியன் அட்வைஸ்

Diet
Diet ( Image by mohamed Hassan from Pixabay )

கோடைக்காலத்தைப் பயன்படுத்தி உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும் வழிமுறைகள்...

உடல் பருமன் என்பது பலருக்கும் இருக்கும் பிரச்னை. ஹார்மோன் மாற்றம், மகப்பேறு, பரம்பரையான உடல்வாகு, உணவுப் பழக்க வழக்கம் என அதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. பிடித்த உடையைப் போட முடியாதது, ஸ்வீட் சாப்பிட முடியாதது, பாடி ஷேமிங்குக்கு உள்ளாவது என பல பிரச்னைகளை உடல் பருமனாக இருப்பவர்கள் அன்றாடம் எதிர்கொள்கின்றனர்.

Fruits
Fruits
Photo by Magda Ehlers from Pexels

உடல் எடையைக் குறைக்க கோடைக்காலம் பொருத்தமான நேரம். கோடைக்காலத்தைப் பயன்படுத்தி உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்க உதவும் வழிமுறைகளையும், கோடைக் காலத்தில் உடல் சூட்டைத் தவிர்க்கும் உணவுப்பழக்கங்களையும் விளக்குகிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

``சம்மரில் திட உணவுகள் எடுத்துக்கொள்வதை விட நீர்ச்சத்து, நார்ச்சத்து மிகுந்த திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. வெள்ளரி, புடலை, வாழைத்தண்டு, பூசணி போன்ற காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவே இருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால்கூட உடல் எடை அதிகரிக்காது. அவற்றிலுள்ள நார்ச்சத்து கொழுப்பைக் கரைக்க உதவும். மேலும் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ள உணவுகள் உடல் சூட்டை தணித்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவும்.

தர்பூசணி
தர்பூசணி

கூடுமானவரை எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் டீ, காபி போன்றவை மந்த நிலையை ஏற்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, இந்த சீஸனில் கிடைக்கும் தர்பூசணி, நுங்கு, பதநீர், கிர்ணி, வெள்ளரி போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம். ஜூஸ் குடிப்பதைவிட பழங்களாகச் சாப்பிடுவதே நல்லது. பழங்களாக எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் சர்க்கரை, ஐஸ்கட்டிகள் இல்லாமல் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். மாம்பழம், பலா, பப்பாளி போன்றவையும் இந்த சீஸனில் அதிக அளவில் கிடைக்கும். ஆனால், அவை உடல் சூட்டை அதிகரிக்கும். அதிக அளவு சாப்பிடுவதால் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

சப்ஜா விதைகள், பாதாம் பிசின் போன்றவை உடல் சூட்டைத் தவிர்க்க உதவும். எனவே, கோடைக்காலத்தில் தினமும் சப்ஜா விதைகள் அல்லது பாதாம் பிசின் பயன்படுத்தலாம். இவற்றை முதல் நாள் இரவே ஊறவைத்து, நீங்கள் குடிக்கும் தண்ணீர், ஜூஸ், இளநீர், மோர் இப்படி ஏதாவது ஒன்றில் கலந்துகொள்ளலாம். இவற்றில் துத்தநாகம், சல்ஃபர் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் உள்ளன. இது பித்தத்தைக் குறைக்க உதவும். மேலும் உடல் சூட்டையும் தவிர்க்கும். அஜீரண கோளாறுகளையும் தடுக்கும்.

டயட்
டயட்
நோய் எதிர்ப்பு சக்தி முதல் வைட்டமின்கள் வரை... பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா?

பழைய சாதம் கோடைக்கு ஏற்ற அருமையான உணவு. இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் சாதத்துக்கு புளிப்புச் சுவையைத் தரும். இதில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் மிகவும் ஆரோக்கியமான உணவாக அமைகிறது. பழைய சாதத்தில் இருக்கும் தண்ணீரை வடித்து சிறிது கல் உப்பு கலந்து குடிக்கலாம். இதில் வைட்டமின் பி12 சத்து இருப்பதால் உடலை எனர்ஜியுடன் வைத்திருக்க உதவும். மேலும் வயிற்றுப் புண்களைத் தடுக்கும்.

வேலையின் தன்மை, வெயிலில் செல்லும் நேரம், வியர்வையின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் அவர்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவு மாறுபடும். உடல் சூடு, உடலுக்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக சிலருக்கு சிறுநீரின் நிறமே மாறியிருக்கும். அப்படிப்பட்டவர்கள் அதிகளவிலான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளலாம்." என்ற ஷைனி, நீர் ஆகாரங்களுக்கான செய்முறைகளையும் பகிர்ந்துகொண்டார்.

மோர்
மோர்

``வெள்ளரிக்காய் ஒன்று, புதினா இலைகள் - 10 கொத்தமல்லித்தழை - சிறிதளவு, நெல்லிக்காய் - 1 இவற்றை சுத்தம் செய்து ஜூஸ் செய்து உப்பு கலந்து குடித்து வரலாம். இதை காலை உணவுக்குப் பின் குடிப்பது நல்லது.

வெள்ளை பூசணிக்காயின் சதைப்பகுதியை ஜூஸாக்கிக் கொள்ளவும். இத்துடன் சிறிது மோர், உப்பு, மிளகுத்தூள் கலந்து குடித்துவர நாவறட்சி நீங்கும். உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் கண் எரிச்சல் போன்றவற்றிலிருந்தும் தப்பிக்கலாம்.

பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் குடைமிளகாய், கொத்தமல்லி, வேர்க்கடலை, துருவிய வெள்ளரி, துருவிய வெள்ளை பூசணி போன்றவற்றை சம அளவில் ஒன்றாகக் கலந்து சாலட் செய்து சாப்பிடலாம்.

 ஷைனி சுரேந்திரன்
ஷைனி சுரேந்திரன்

வேகவைத்த வாழைத்தண்டு, துருவிய முள்ளங்கி, வெள்ளரி, கேரட் போன்றவற்றைத் தினமும் ஒன்றாகத் தயிருடன் கலந்து தயிர் பச்சடியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் மோர் அருந்துவது நல்லது. மோரில் உள்ள புரோபயாடிக் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

தயிரில் தண்ணீர் கலந்து, மோராகக் குடிக்காமல், தயிரைக் கடைந்து நீர் மோராகக் குடிக்கவும்.

கூடுமானவரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தும் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. கோடைக்காலம் முடியும் வரை மண்பானை தண்ணீரை பருகலாம்".

அடுத்த கட்டுரைக்கு