"மூச்சுத்திணறல் ஏற்பட்டாலே கொரோனா என்று அர்த்தமில்லை!" - மருத்துவமனையில் 'சரி' (SARI) வார்டுகள் ஏன்?

இப்போது எல்லா மருத்துவமனைகளிலும் "சரி(SARI)" வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் மூச்சுத்திணறல் பிரச்னையுடன் மருத்துவமனைக்கு வரும்நிலையில், அவர் நேரடியாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்படுவதில்லை.
இருமல், காய்ச்சல், தலைவலி... உச்சபட்சமாக மூச்சுத்திணறல்! - இவையே... கொரோனாவின் அறிகுறிகள் என்பதை கடந்த ஒருமாத காலமாகப் பார்த்தும், கேட்டும் மனத்தில் பதியவைத்துவந்த நம்மில் பலருக்கு, சாதாரணமாக இருமல் வந்தால்கூட 'இது அதுவா இருக்குமோ?!' என்ற பயம் அடிவயிற்றைக் கவ்விக்கொள்கிறது. இந்நிலையில், தீவிர மூச்சுத்திணறலே ஏற்பட்டால்... சந்தேகமே இல்லை. அவருக்கு கொரோனாதான் என்று டெஸ்ட் செய்யாமலே முடிவெடுத்துவிடுவோம்.

ஆனால், கொரோனா பரவிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் நிலையில், அது கொரோனா பாதிப்பாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். கொரோனா இல்லாதபட்சத்தில், வேறு எதனால் எல்லாம் மூச்சுத்திணறல் ஏற்படும்... அதற்கான பெயர் என்ன? நுரையீரல் மருத்துவர் திருப்பதியிடம் பேசினோம்.
ஒருவருக்கு அதி தீவிர மூச்சுத்திணறல் கொரோனா தவிர்த்து வேறு சில காரணங்களாலும் ஏற்படலாம். இதைச் 'சரி'(SARI - Severe Acute Respiratory Infection) என்பார்கள். அதாவது, 'சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்ஷன்' என்பது பிராண வாயுவான ஆக்ஸிஜன், நுரையீரலுக்குள் சென்று வருவதில் பிரச்னை ஏற்பட்டு தீவிர மூச்சுத்திணறல் ஏற்படுவது.

ஆனால், SARI என்பது தனியான ஒரு நோய் கிடையாது. ஒருவருக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்னை, மார்புச்சளி, ஆஸ்துமா போன்றவை இருக்கும்போது ஏற்படும் தீவிர மூச்சுத்திணறலை 'சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்ஷன்' என்பார்கள்.
தற்போது கொரோனா பரவிவரும் வேளையில், யாரேனும் ஒருவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று நாமே முடிவுசெய்துகொள்ள வேண்டாம். அவருக்கு சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்ஷன் நோய்கள், அதாவது ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், இதயப் பிரச்னை, மார்புச்சளி, நிமோனியா இருக்கும் பட்சத்திலும் மூச்சுத்திணறல் ஏற்படலாம்.

இப்போது எல்லா மருத்துவமனைகளிலும் 'சரி (SARI)' வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருவர் மூச்சுத்திணறல் பிரச்னையுடன் மருத்துவமனைக்கு வரும் நிலையில், அவர் நேரடியாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்படுவதில்லை.'SARI' வார்டில்தான் அனுமதிக்கப்படுவார். ஒருவேளை டெஸ்ட்டுகளில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானால், கொரோனா வார்டுக்கு மாற்றப்படுவார். எனவே, மூச்சுத்திணறல் ஏற்பட்டாலே அது கொரோனாதான் என்று அச்சப்பட தேவையில்லை.
'சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்ஷன்' உள்ளவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தொற்றிக்கொள்ளுமா? என்று சிலருக்கு சந்தேகம் ஏற்படலாம். 'கோவிட்-19' கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில், 'இவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படலாம்', 'இவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பில்லை' என்று தனித்தனியே பிரித்துக் கூற முடியாது.

ஏனெனில், 'கோவிட்-19' ஏற்கெனவே நோய் உள்ளவர், இல்லாதவர் என்ற வித்தியாசமின்றி அனைவருக்குமே ஏற்படுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளன. ஒருவேளை, ஒருவர் ஏற்கெனவே 'சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்ஷன்' பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டால், நிலைமையைக் கொஞ்சம் மோசமாக்கலாம்" என்றார் மருத்துவர் திருப்பதி.