Published:Updated:

சோஷியல் டிஸ்டன்சிங் & பிசிக்கல் டிஸ்டன்சிங்... என்ன வித்தியாசம், எது அவசியம்? மருத்துவர் விளக்கம்!

Social Distancing
Social Distancing

பிசிக்கல் டிஸ்டன்சிங் என்பது, ஒருவருக்கொருவர் குறைந்தபட்ச இடைவெளியை வகுத்துக்கொள்வது. வீட்டிலேயேகூட தத்தம் உறவுகளுக்கிடையே இடைவெளிவிட்டு இருக்கவேண்டும். #KeepPhysicalDistancing

ஒவ்வொரு நாடும் அதனதன் மொழிகளில், எச்சரிக்கையோடு உச்சரித்துக்கொண்டிருக்கிற ஒரு வார்த்தை `சமூக விலகல்!’. கொரோனா பரவலைத் தடுக்க, உலகநாடுகள் தங்கள் மக்களுக்கு விடுத்திருக்கும் முக்கிய அறிவுரைகளில் முதன்மையானது, இந்த சோஷியல் டிஸ்டன்ஸிங். தற்போது, உலக சுகாதார நிறுவனம் இன்னொன்றையும் குறிப்பிட்டுச் சொல்கிறது. அது பிசிக்கல் டிஸ்டன்சிங்கைப் பின்பற்ற வேண்டும் என்பதே. பொதுமருத்துவர் அருணாசலத்திடம் பேசினோம்.

மருத்துவர் அருணாசலம்
மருத்துவர் அருணாசலம்

``பொதுவான இடங்களைத் தவிர்த்தல், குழுவாகக் கூடாமலிருத்தல் இவையெல்லாம்தான் சோஷியல் டிஸ்டன்ஸிங். சமூகமாகச் சேர்ந்திருக்கும்போது அங்கே நோய்த்தொற்று வெகு இயல்பாக நடக்கும். அதனால்தான் சோஷியல் டிஸ்டன்ஸிங்கை எல்லா நாடுகளும் மிகத் தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிற பிசிக்கல் டிஸ்டன்ஸிங் என்பது, ஒருவருக்கொருவர் குறைந்தபட்ச இடைவெளியை வகுத்துக்கொள்வது. வீட்டிலேயேகூட தத்தம் உறவுகளுக்கிடையே இடைவெளிவிட்டு இருக்கவேண்டும். இதுவே வெளியிலும் தொடரும்போது நோய்த்தொற்றின் வீரியம் குறையத்தொடங்கும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரை.

நோய் பாதிப்பு ஏற்பட்டவருடைய இருமலிலும் தும்மலிலும் வெளியேறும் நீர்த்துளிகள் ஆறடி தூரத்துக்குப் பரவும். எனவே, எந்த நபரிடமிருந்தும் அந்த ஆறடி தூரத்துக்கு விலகியிருத்தல் கட்டாயம். இருமல் தும்மலின்போது கைக்குட்டையாலோ டிஷ்யூவாலோ, இரண்டும் இல்லாவிடின் முழங்கையை வைத்தாவது வாயையும் மூக்கையும் சேர்த்து மூடிக்கொள்ள வேண்டும். பொது இடங்களைத் தவிர்த்தல் சோஷியல் டிஸ்டன்ஸிங் என்றால், இந்த ஆறடி இடைவெளி பிசிக்கல் டிஸ்டன்ஸிங்.

Novel Coronavirus SARS-CoV-2
Novel Coronavirus SARS-CoV-2
Photo: AP

ஆனால், நம்மூர்களில் கியூவில் நிற்கும் பொறுமை பெரும்பாலோருக்குக் கிடையாது. இடித்துக் கொண்டும், தள்ளிக் கொண்டும், முண்டியடித்துக் கொண்டும்தான் இருப்போம். இவற்றையெல்லாம் கொஞ்ச காலத்துக்குக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். பொதுவெளியில் செல்ல நேர்ந்து க்யூவில் நிற்கும் நிலை ஏற்பட்டால், நமக்கும் அடுத்தவருக்கும் இடையே முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் ஆறடி இடைவெளி அவசியம். இதை சமூகக் கடமையாகக் கொண்டு செயலாற்ற வேண்டும். வெளியில் மட்டுமல்ல, வீட்டிலும் இதைப் பின்பற்றியே ஆகவேண்டும்.

வீட்டில் நம்முடைய உறவுக்கோ நமக்கோ சளி, இருமல், காய்ச்சல் என ஏதேனும் உடல்நலக் கோளாறு இருந்தால் வீட்டிலேயே சுய தனிமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். குறிப்பாக, வயதான பெரியோர்கள்மீது கவனம் அவசியம். வீட்டிலிருக்கும் குழந்தைகளுடன் கொஞ்சுவது, இயல்பாக இருப்பது போன்றவற்றைத் தவிர்க்க இயலாதுதான். ஆனால், உடல்நிலையில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அது மற்றவர்களையும் தொற்றிவிடாமலிருக்க இந்த பிசிக்கல் டிஸ்டன்ஸிங் அவசியம்.

People practice social distancing in thailand
People practice social distancing in thailand
AP / Sakchai Lalit

தற்போது சில நாடுகளில் ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். வெளியிடங்களுக்குச் செல்கையில் ஏதேனும் பொருள்களைத் தொடும்போது, இடது கையைத்தான் பயன்படுத்துகின்றனர். அவசியப்படுகிறதென்றால் முகத்தைத் தொடுவதற்கு வலது கையைப் பயன்படுத்துகின்றனர். இது நமக்கு எந்த வகையில் பழக்கமாகும் எனச் சொல்லமுடியாது. ஆனால், இதுவும் ஒரு நல்லமுறைதான்.

இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கிற ஓர் அரண், நமது சருமம்தான். சருமத்தைத் தாண்டி கொரோனா வைரஸால் உள்ளே செல்ல முடியாது. ஆனால், கண், மூக்கு, வாய் இவற்றில் வைரஸ் எளிமையாக நுழைந்திடும். பேருந்துகளில் அருகருகே அமர்வதுகூட பலவகைகளில் ரிஸ்க். மாஸ்க், கைக்குட்டை, டிஷ்யூ, சானிட்டைஸர் என சகல பாதுகாப்போடு வெளியே சென்றாலும், இந்த ஆறடி இடைவெளிதான் முக்கியக் கவசம்” என்றார்.

Representational Image
Representational Image

உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, உலகெங்கும் 186 நாடுகளில் 3,51,061 பேர் கொரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள்; இதில், 15,321 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நாளுக்குநாள் இந்த வைரஸ் தீவிரம் பெற்று வருகிறது. இந்நிலையில், சமூக விலகியிருத்தலோடு, ஆறடி இடைவெளியுடன் கூடிய சுய விலகியிருத்தலும் அவசியம் என்பதை தற்போதைய நோய்த் தீவிரம் எச்சரிக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு