Published:Updated:

செல்ஃபி இல்லை... கில்ஃபி... செல்ஃபிட்டீஸ் பாதிப்பு பற்றித் தெரியுமா?

செல்ஃபி
செல்ஃபி

``இந்தக் கோட்ட தாண்டி நீயும் வரக் கூடாது; நானும் வர மாட்டேன்னு" கொள்கையோட சிலர் வாழ்ந்துட்டு வராங்க. அவங்களையும் நம்ம செல்ஃபி புள்ளீங்க விட்டு வைக்கிறது இல்ல.

"நீங்கள் செல்ஃபி பிரியரா? அடிக்கடி செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்து அதனால் வரும் லைக்குகளை விரும்புபவரா? நீங்கள் பதிவிடும் செல்ஃபிகளுக்கு அதிக லைக் வரவில்லை என்றால் உங்கள் மனம் சோர்வடைகிறதா?"- இந்தக் கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்கு உங்கள் பதில் `ஆம்' என்று வந்தால்...கண்டிப்பாக ``இது அதேதான்!"

செல்ஃபி
செல்ஃபி

புரியவில்லையா?...உங்களுக்கு இருக்குறது 'செல்ஃபிடீஸ்'-ங்குற மனநல பாதிப்புங்க!

``ஆத்தி....என்னாது மனநல பாதிப்பா?...ஏம்மா உனக்கு எழுதுறதுக்கு வேற கான்செப்ட்டே கிடைக்கலையா? நானே செல்ஃபி எடுக்குறத ஒரு சோசியல் சர்வீஸா நினைச்சி பண்ணிட்டு வரேன். இப்படி திடீர்னு வந்து குண்ட தூக்கிப் போடுறியே!" -என்று நீங்கள் மைண்ட் வாய்ஸில் புலம்புவது எனக்கு கேட்கிறது.

அட, நிஜந்தாங்க.. இந்த நோயால பாதிக்கப்பட்டவங்கதான் அடிக்கடி செல்ஃபி எடுத்துட்டே இருப்பாங்களாம். நான் சொன்னா நம்ப மாட்டீங்கனு தெரியுது... வாங்களேன்..ஒரு மனநல ஆலோசகரிடமே கேட்டுவிடுவோம்!

வெயிட், வெயிட்... அதுக்கு முன்னாடி செல்ஃபி புள்ளீங்களின் அலப்பறைகளைக் கொஞ்சம் எட்டிப்பார்த்து விடுவோம்.

செல்ஃபி
செல்ஃபி

``இந்த செல்ஃபி புள்ளீங்க இருக்காங்களே...அவங்க பண்ற சேட்டைங்க கொஞ்சம் நஞ்சம் இல்லீங்க. யாரப் பார்த்தாலும் செல்ஃபி; எதைப் பார்த்தாலும் செல்ஃபி. நிலாவுக்கு ராக்கெட் விடும்போதும் செல்ஃபி; நைட்டுக்கு தோசை சுடும்போதும் செல்ஃபி. அண்டை நாட்டு பிரதமர் கூடவும் செல்ஃபி; சண்டை போட்ட ஆன்ட்டி கூடவும் செல்ஃபி. ஓடும் ரயிலுக்கு முன்னாடியும் செல்ஃபி; உறுமும் சிங்கத்துக்கு முன்னாடியும் செல்ஃபி. வேலைக்கு ஆபீஸ் போகும் போதும் செல்ஃபி; ஆபரேஷனுக்கு ஹாஸ்பிடல் போகும் போதும் செல்ஃபி. அப்படியே செல்ஃபி, செல்ஃபியா எடுத்து மெமரி கார்டு ஸ்டோரேஜ் ஃபுல்லா இருக்கும்.

``அந்தக் காலத்துல பிரபலங்கள் யாரையாவது பார்த்தா ஆட்டோகிராப் வாங்குறது வழக்கமா இருந்த மாதிரி இப்போ செல்ஃபி எடுக்குறது. ``செல்ஃபி"-ன்னு சொன்னதும் எல்லா பிரபலங்களும் சிரிச்சிகிட்டே போஸ் கொடுத்துட மாட்டாங்க.

செல்ஃபி
செல்ஃபி

``இந்தக் கோட்ட தாண்டி நீயும் வரக் கூடாது; நானும் வர மாட்டேன்னு" கொள்கையோட சிலர் வாழ்ந்துட்டு வராங்க. அவங்களையும் நம்ம செல்ஃபி புள்ளீங்க விட்டு வைக்கிறது இல்ல. இப்படிதான் ஒரு நாள்...செவனேன்னு போய்ட்டு இருந்த பிரபலம் ஒருத்தரப் புடிச்சி லாக் பண்ணி நம்ம பயபுள்ள ஒண்ணு செல்ஃபி எடுக்கப் போனப்போ அவரு கோபத்துல மொபைலைத் தள்ளிவிட்டு உடைச்சிட்டாரு. அப்புறம் என்ன, நம்ம மீம்ஸ் கிரியேட்டர்ஸ் எல்லாம் மீம்ஸாலேயே பண்ண போராட்டத்தால அவரு ஒரு புது போனையே நம்ம செல்ஃபி புள்ளைக்கு வாங்கிக் கொடுத்துட்டாரு! நம்ம புள்ளீங்க எல்லாம் பயங்கரம்தாங்க.

அரசியல் பிரபலம் ஒருத்தரு இருக்காரு. அவருக்கு "இவனுங்க கட்சிக் கூட்டத்துக்கு வர்றது நம்ம பேசுறத கேட்குறதுக்கா, இல்ல நம்ம கூட செல்ஃபி எடுக்குறதுக்கா"-ன்னு சந்தேகமே வந்துட்டு. உடனே "என் கூட செல்ஃபி எடுக்கணும்னா என் கட்சிக்கு நிதி கொடுங்க"-ன்னு சொல்லிட்டாரு. ``காசு கொடு; செல்ஃபி எடு"-ங்குற இந்தத் திட்டம் ``நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்டா" மொமென்ட்!

செல்ஃபி
செல்ஃபி

பார்த்தீங்களா...செல்ஃபி பற்றி பேசுனதுல "செல்ஃபிடீஸ்" பற்றி மறந்தே போயிட்டோம். மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன் இந்த செல்ஃபிடீஸ் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்த்துவிடுவோம்.

ஓடும் ரயில் முன்பு செல்பி!  செல்பி மோகத்தால் உயிரைவிட்ட கல்லூரி மாணவர்

``அளவுக்கு மீறினால் எல்லாமே ஆபத்துதான். அதுபோல்தான் இந்த செல்ஃபியும். மன மகிழ்விற்காகக் கொண்டுவரப்பட்ட ஒன்று இன்று மனநிலையைப் பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. இதை `செல்ஃபி'(Selfie) என்பதை விட `கில்ஃபி'(Killfie) என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் செல்ஃபி மோகத்தால் பல உயிர்கள் பறிபோய்க்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில் ``செல்ஃபிடீஸ்" பற்றிய விழிப்புணர்வு கண்டிப்பாக அவசியம்.

மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்
மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்

செல்ஃபி எடுத்துக்கொள்ளும் எல்லாரும் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. தினமும் செல்ஃபி எடுப்பதையே கடமையாகக் கொண்டிருப்பவர்களைத்தான் நாம் கவனிக்க வேண்டும். இது போன்ற மனநிலையில் உள்ளவர்கள்தான் வித்தியாசமாக ஏதாவது செய்து செல்ஃபி எடுக்கிறேன் என்ற பேர்வழியில் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்!

தன்னைப் பற்றிய சுயமதிப்பீடு குறைவாக உள்ளவர்கள்தான் அடுத்தவர் தனக்குத் தரும் அங்கீகாரத்துக்கு அதிகமாக ஆசைப்படுவார்கள். இதில் ஒன்றுதான் அடிக்கடி செல்ஃபி எடுத்து முகநூலிலும், பிற சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டு தனக்கு வரும் லைக்குகளையும் கமென்ட்டுகளையும் நிமிஷத்துக்கு ஒருதரம் செக் செய்யும் மனநிலை.

செல்ஃபி
செல்ஃபி

இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருந்தால் அவர்களால் எதிலுமே கவனம் செலுத்த முடியாது! இன்டெர்நெட்டே உலகம் என்றிருப்பார்கள். இதனால் அவர்களின் உடல்நலமும் அதிகம் பாதிக்கப்படும்" என்றார் மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

அவர் செல்ஃபிடீஸ் பற்றி ஒவ்வொரு பாயின்ட்டாக அடுக்கிக்கொண்டே செல்லும்போது மனம் பதறிக்கொண்டு வருகிறது!

செல்ஃபி
செல்ஃபி

``உனக்கு ஏம்மா பதறணும்? எங்களுக்குத் தானே பதறணும்" என்கிறீர்களா? அட, நானும் செல்ஃபி புள்ளீங்கள்ல ஒருத்தி தாங்க!...அவ்வ்....

இனிமேலாவது செல்ஃபி எடுக்குற பழக்கம் ``செல்ஃபிடீஸ்" பாதிப்பா மாறாம பாத்துக்கணும். "Be Careful"... நான் என்னையச் சொன்னேன்!

அடுத்த கட்டுரைக்கு