Published:Updated:

யாரெல்லாம் பலூன் தெரபியை மேற்கொள்ளலாம்? விளக்கும் மருத்துவர் #Video

பலூன்
பலூன்

பிராணாயாமம் மூச்சுப்பயிற்சி போன்றதே இந்த சிகிச்சையும். இதில் பலூன் உபகரணமாகப் பயன்படுத்தப்படுவதால் இந்தச் சிகிச்சை முறை `பலூன் தெரபி' என்று அழைக்கப்படுகிறது.

கொரோனா தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் இந்நேரத்தில், நம் அனைவரது கவனமும் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் பக்கம் திரும்பியுள்ளது. கொரோனாவின் காரணமாக நாம் இழந்தது அதிகம்தான். எனினும் சத்தான உணவு, ஆரோக்கியமான உடல்நலம், அத்தியாவசியமான உடற்பயிற்சிகள் பற்றி நம்மை அதிகம் சிந்திக்க வைத்ததும் கொரோனாதான்.

நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.
நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

கொரோனா, நம் நுரையீரலைத் தாக்கி நோய்த் தொற்றை ஏற்படுத்தும் நுண்ணுயிரி என்பதால் நுரையீரலைப் பலப்படுத்தக்கூடிய உணவுகளையும் உடற்பயிற்சிகளையும் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நுரையீரலின் ஆரோக்கியத்திற்காக பல்வேறு சுவாச பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில் ஒன்றுதான் பலூன் தெரபி.

பலூன் தெரபி சிகிச்சைமுறை பற்றியும், இதை யாரெல்லாம் மேற்கொள்ள வேண்டும், இதனால் ஏற்படும் பயன்கள் என்னென்ன என்பது பற்றியும் நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமனிடம் கேட்டோம்.

பலூன் தெரபி:

நுரையீரல் ஆரோக்கியத்திற்காக வழங்கப்படும் ஒரு சிகிச்சை முறைதான் `பலூன் தெரபி'. இது சிக்கலான பயிற்சி முறை எல்லாம் இல்லை. நாம் சாதாரணமாக வாயால் எப்படி பலூன் ஊதுவோமோ, அதையேதான் `பலூன் தெரபி' சிகிச்சையிலும் செய்கிறோம். பலூனை ஊதும்போது காற்றை வேகமாக உள்ளிழுத்து வெளியிடுவதால் நம் நுரையீரலும், அதிலிருக்கும் ஆல்வியோலி காற்றுப்பைகளும் நன்றாகச் சுருங்கி விரிவடைகின்றன. இதனால் நுரையீரலின் செயல்திறன் அதிகரித்து, முழு உடலுக்கு போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் கிடைக்கிறது.

Lungs
Lungs

இதுவும் ஒருவித பிஸியோதெரபி சிகிச்சை முறைதான். ஆஸ்துமா, நுரையீரலில் உள்ள மூச்சுக்குழல் சுருக்க வியாதி, நுரையீரலுக்குள் சளி, சீழ் தங்கியிருத்தல் போன்ற நுரையீரல் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தப் பலூன் தெரபி சிகிச்சை முறை தரப்படுகிறது. பிராணாயாமம் மூச்சுப்பயிற்சி போன்றதே இந்தச் சிகிச்சை முறையும். இதில் பலூன் உபகரணமாகப் பயன்படுத்தப்படுவதால் இந்த சிகிச்சை `பலூன் தெரபி' என்று அழைக்கப்படுகிறது.

இதைத் தினமும் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும்?

தினமும் காலை 10 நிமிடமும், மதியம் 10 நிமிடமும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். நுரையீரல் பிரச்னை உள்ளவர்களைத் தினமும் காலை, மாலை, மதியம், இரவு என்று நான்கு வேளைகளில் இதைச் செய்யச் சொல்லி அறிவுறுத்துவோம். குறிப்பாக இந்த நேரத்தில்தான் செய்ய வேண்டும் என்று இதில் எந்த வரைமுறையும் இல்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது 5 அல்லது 10 நிமிடங்கள் பலூன் தெரபி பயிற்சியை எடுத்துக்கொள்ளலாம்.

நுரையீரல் ஆரோக்கியத்திற்காக வழங்கப்படும் ஒரு சிகிச்சை முறைதான் 'பலூன் தெரபி'. இது சிக்கலான பயிற்சி முறை எல்லாம் இல்லை....

Posted by Vikatan EMagazine on Friday, July 24, 2020

யாரெல்லாம் இதைச் செய்யலாம்? யாரெல்லாம் செய்யக் கூடாது?

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பலூன் ஊதும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம். குறிப்பாக ஏதேனும் நுரையீரல் பிரச்னை உள்ளவர்கள் இதைச் செய்வது மிகவும் நல்லது. தலைச்சுற்றல், காதில் சீழ் வடியும் பிரச்னை, தீவிர மாரடைப்பு பிரச்னை, ஏற்கெனவே பக்கவாதம் ஏற்பட்டவர்கள் `பலூன் தெரபி' சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

நுரையீரல் பிரச்னை
நுரையீரல் பிரச்னை

`பலூன் தெரபி' என்பது நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சிபோல இதுவும் ஒரு எளிய உடற்பயிற்சி என்பதால் மேலே குறிப்பிட்ட பிரச்னை உள்ளவர்களைத் தவிர்த்து மற்ற அனைவரும் இதைச் செய்யலாம். மூச்சை ஆழமாக இழுத்துவிடுவதைத் தவிர்த்து வேறு எதையும் நாம் இந்தப் பயிற்சியில் செய்யப்போவதில்லை.

பலூன் தெரபியின் பயன்கள்:

மூச்சை நன்றாக உள்வாங்கி வெளியிட உதவும் இந்த பலூன் தெரபியால் நமக்கு ஆழமான சுவாசம் கிடைக்கிறது.

காற்றை வேகமாக உள்வாங்கி வெளியிடும்போது நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரியும். இதனால் நுரையீரல் வலுவடைகிறது. நுரையீரலில் உள்ள வால்வுகளும், தசைகளும் உறுதி பெறுகின்றன.

இவ்வாறு காற்று சுவாசிக்கும்போது நுரையீரலினுள் இருக்கும் சளியானது இருமல் மூலமாக வெளி வந்துவிடுகிறது. சுவாசப்பாதை சீராகிறது.

தினமும் இந்தச் சிகிச்சையை எடுத்துக்கொள்வதால் உடலின் அனைத்து பாகங்களில் உள்ள செல்களுக்கும் போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இதன் காரணமாக நம்மால் எந்தவொரு வேலையையும் அதிக புத்துணர்வுடன் செய்ய முடியும்.

இந்த மூச்சுப்பயிற்சி முறைக்கு ஒரே ஒரு பலூன் மட்டுமே போதுமானது. உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

இவை எல்லாவற்றையும் தாண்டி பலூன் ஊதும்போது நம் மனதிற்குள் இனிமையான உணர்வு ஏற்படுகிறது. இது நம் மனஅழுத்தத்தைக் குறைத்து அமைதியான மனநிலைக்கு வழிவகுக்கிறது" என்கிறார் நுரையீரல் மருத்துவர் எஸ்.ஜெயராமன்.

அடுத்த கட்டுரைக்கு