புகை, மது, உடல் பருமன்... உயிரைப் பறிக்கும் உணவுக்குழாய் புற்றுநோய்... எதிர்கொள்வது எப்படி?

அதிக பருமனுடன் இருக்கும் நபர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடும் மக்கள்தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
கேன்சர் என்ற வார்த்தையைக் கேட்டதுமே இந்த நோயால் நமக்கு நெருக்கமான யாராவது ஒரு நபரை எதிர்பாராத நேரத்தில் இழந்தபோது பட்ட வலி அல்லது எதிர்பாராத நபர்களின் மரணத்தை நாம் கடந்துபோன நினைவுகள் நம்மில் நிழலாடலாம். ஒவ்வொரு புற்றுநோயுமே நரக வேதனையைத் தரக்கூடியதுதான் என்றாலும், உணவுக்குழாய் புற்றுநோய் கொடுமைகளின் உச்சம். நடிகர் தவசி, இந்த வகைப் புற்றுநோய் தாக்கிதான் சமீபத்தில் உயிரிழந்தார்.
உணவுக்குழாய் புற்றுநோய் (Esophageal cancer) என்பது தொண்டைக்கும் வயிற்றுக்கும் இடையில் இயங்கும் உணவுக் குழாயில் ஏற்படுவது. அதைப் பற்றி மருத்துவ ரீதியாக அதிகமாகத் தெரிந்துகொள்ள புற்றுநோய் மருத்துவர் கலைச்செல்வியை அணுகினோம்.

யாரைத் தாக்கும் இந்த நோய்?
இந்த வகைப் புற்றுநோயானது மிக முக்கியமாக புகைபிடிக்கும் நபர்களை அதிகம் தாக்கும். மதுவின் போதைக்கு அடிமையான தொடர் குடிமகன்கள், புகையிலை பழக்கம் உள்ள மக்கள் இவர்களைத்தான் அதிகம் தாக்குகிறது. இதைத் தாண்டி அதிக பருமனுடன் இருக்கும் நபர்கள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடும் மக்கள்தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
எப்படித் தெரிந்து கொள்வது?
நாம சாப்பிடும் உணவுகளை விழுங்க கஷ்டமாக இருப்பதுதான் முதல் அறிகுறி. இந்த நோயால் தாக்கப்பட்டவர்களுக்கு சாப்பாடு தொண்டைக்குள் இறங்க ரொம்ப கஷ்டமாக இருக்கும். அப்புறம் கெட்டியான ஆகாரம் உண்ண முடியாத நிலை உண்டாகும். அப்புறம் திரவ ஆகாரம் மட்டும்தான் உள்ளே போகும் நிலை. இந்தச் சூழ்நிலையில் போதிய ஆகாரம் இல்லாமல் உடல் எடை குறையும்.

எப்படிச் சரி செய்யலாம்?
உணவுக்குழாய் புற்றுநோய் இருக்கும் நபர்களுக்கு இப்போதெல்லாம் நாம் எண்டோஸ்கோப்பி எடுத்துவிடலாம். பயாப்ஸி, சிடி ஸ்கேன் என்று நோயின் தாக்கத்தைக் கண்டுபிடிக்க வழிகள் நிறைய இருக்கின்றன. ஆனால், நோய் இருக்கிறது என்று மக்கள் மருத்துவமனைக்கு வந்தால்தான் டெஸ்ட் எடுக்க முடியும். ஆனால், பலரும் மிகவும் தாமதமாகவே சிகிச்சைக்கு வருகிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.
மரணத்தின் வாசல் பக்கம்:
புற்றுநோயை குணப்படுத்த நிறைய அதிநவீன சிகிச்சைகள் வந்துவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. நோயாளிகள் ஸ்டேஜ் 1-ல் வந்துவிட்டால் அறுவை சிகிச்சை மூலம் கட்டாயம் குணப்படுத்திவிடலாம். அப்படி இல்லையா ஸ்டேஜ் 2-ல் வந்தாலோ, ஸ்டேஜ் 3-ல் வந்தால்கூட கீமோ தெரபி செய்து சரி செய்துவிடலாம். அப்படிச் சரி செய்த நபர்களுக்கு இன்னும் வாழ்நாள் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கொடுக்கலாம். அவ்வளவுதான். இதில் கொடுமை என்னவென்றால் பெரும்பாலான மக்கள் மருத்துவமனைக்கு வந்து சேரும்போதே ஸ்டேஜ் 4-ல் இருக்கிறார்கள். அப்போது என்ன செய்தாலும் காப்பாற்ற முடியாத நிலையில் 6 மாதங்கள் அல்லது அதைவிட குறைவான காலத்தில்கூட உயிரிழக்கிறார்கள். ஸ்டேஜ் 4-ல் வரும் நோயாளிகள் பெரும்பாலும் ஒரு வருடத்துக்குள் இறந்துவிடும் கொடிய நிலைதான் நிகழ்கிறது.

தடுப்பது எப்படி?
குடிக்காதீர்கள்... புகை பிடிக்காதீர்கள். ஆரோக்கியமான உணவுகள், பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுங்கள். 40 வயதுக்கு மேல் வருடம் ஒரு முறை வருடாந்தர செக்கப் எடுப்பது மிக நல்லது. குறிப்பிட்ட வயதுக்கு மேல் நம் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை.
இப்போதுள்ள சூழ்நிலையில எல்லோரும் பிஸி. ஒரே பரபரப்பு. நமக்கு ஒரு நாள் மருத்துவமனை போகக் கூட நேரமில்லை. எங்கே திரும்பினாலும் ஸ்ட்ரெஸ் ஸ்ட்ரெஸ். மிகுந்த மன உளைச்சல் இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது நம் வாழ்க்கை. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்ற கெட்ட பழக்கங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதில் பலனில்லை" என்று விடை கொடுத்தார் டாக்டர் கலைச்செல்வி.
- இங்க் பேனா