Published:Updated:

`மெட்டி ஒலி' உமாவின் உயிரைப் பறித்த மஞ்சள் காமாலை; யாருக்கெல்லாம் ஏற்படலாம்?

மஞ்சள் காமாலை பாதிப்பு என்பது மிகவும் பொதுவான ஒரு பிரச்னை. மஞ்சள் காமாலை வந்தவர்கள் எப்படி தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?

`மெட்டி ஒலி' சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சின்னத்திரை நடிகை உமா 40 வயதில் உயிரிழந்த சம்பவம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த சின்னத்திரை பிரபலங்கள் பலர், அவர் பல நாள்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். அண்மையில் அதிலிருந்து மீண்டு வந்த சில நாள்களில் மறுபடியும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே, உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.

̀மெட்டி ஒலி' உமா
̀மெட்டி ஒலி' உமா

இந்த மஞ்சள் காமாலை பாதிப்பு என்பது மிகவும் பொதுவான ஒரு பிரச்னை. மஞ்சள் காமாலை வந்தவர்கள் எப்படி தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கல்லீரல் மருத்துவர் கார்த்திக் மதிவாணனிடம் கேட்டோம்:

``மஞ்சள் காமாலை என்பது காய்ச்சல் மாதிரி ஓர் அறிகுறியே. காய்ச்சலில் எப்படி டெங்கு, மலேரியா, டைஃபாய்டு எனப் பல்வேறு வகை இருக்கிறதோ அதே போன்று மஞ்சள் காமாலைக்கும் பல காரணங்கள் இருக்கின்றன.

அனைத்து வகையான காய்ச்சலுக்கும் ஒரே மருந்து அல்லது சிகிச்சை கொடுக்க முடியாது. முதலில் எந்த வகையான காய்ச்சல் என்று உறுதி செய்துவிட்டுதான் அதற்கேற்ற சிகிச்சையளிக்கப்படும். அதே போல் மஞ்சள் காமாலை பாதித்தவர்களுக்கும் என்ன காரணத்தால் ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.

மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலை

வைரஸ் தொற்று, கல்லீரல் பாதிப்பு, கல்லீரல் சுருக்கம் (சிரோசிஸ்), பித்தப்பை அடைப்பு, கணையத்தில் கட்டி இவையெல்லாம் மஞ்சள் காமாலை அறிகுறி தெரிவதற்கான பொதுவான பிரச்னைகள். அவற்றில் ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்றுகளால்தான் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஹெபடைட்டிஸில் ஏ, பி, சி, டி, இ என ஐந்து வகைகள் உள்ளன. ஹெபடைட்டிஸில் பொதுவாகப் பாதிப்பை ஏற்படுத்துவது மற்றும் ரத்தம் அல்லது ரத்தப் பரிமாற்றத்தின் மூலம் பரவுவது பி, சி வகை ஹெபடைட்டிஸ்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பித்தம் வரும் பாதையில் அடைப்பு, கல், புற்றுநோய் கட்டி, சதை வளர்ச்சி இருந்தாலோ கணையத்தில் பாதிப்பு இருந்தாலோ டெங்கு பாதிப்பு தீவிரமானால்கூட மஞ்சள் காமாலை ஏற்படலாம். இதுதவிர, ஹீமோலைஸில் உள்ளிட்ட ரத்தம் சார்ந்த பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படலாம். இருந்தாலும் ரத்தம் சார்ந்த குறைபாடுகளால் மஞ்சள் காமாலை ஏற்படுவது என்பது அதிகமானோரை பாதிப்பதில்லை.

Liver
Liver
Photo: Pixabay

பரிசோதனை அவசியம்!

ஒருவருக்கு மஞ்சள் காமாலை இருப்பது கண்டறியப்பட்டால் கல்லீரல் செயல்பாடு பரிசோதனை (Liver Function Test) எடுக்க வேண்டும். இந்தப் பரிசோதனைகளின் மூலம் மஞ்சள் காமாலை மட்டும் பாதித்துள்ளதா அல்லது கல்லீரலில் என்சைம்ஸ் அதிகமாக உள்ளனவா என்பதையும் கண்டறிய வேண்டும். அடுத்ததாக, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்து கல்லீரல் பாதிப்பு மற்றும் பித்தப்பையினுள் அடைப்பு ஏதேனும் இருக்கிறதா என்பதையும் கண்டறிய வேண்டும்.

அடுத்ததாக, வைரஸ் கிருமிகள் பாதித்துள்ளதா அது எந்த வகை வைரஸ் என்பதைக் கண்டறியும் ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த மூன்று பரிசோதனைகளையும் செய்தாலே மஞ்சள் காமாலை பாதிப்புக்கான காரணங்களை 70% - 80% கண்டறிந்துவிடலாம்.

Liver Expert Dr karthik Mathivanan
Liver Expert Dr karthik Mathivanan

அதற்குப் பிறகு, மஞ்சள் காமாலை எதனால் ஏற்பட்டது என்ற காரணங்களுக்கான சிகிச்சையைத் தொடங்க வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ, இ பாதிப்புக்கெல்லாம் பெரிய அளவில் சிகிச்சை கிடையாது. ஆனால், நெருங்கிய கண்காணிப்பில் இருக்க வேண்டும். ஹெபடைட்டிஸ் பி, சி தொற்று என்றால் இரண்டுக்கும் வெவ்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. பித்தப்பையில் கற்கள், பித்தப்பாதையில் அடைப்பு இருந்தால் அவற்றை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைகளைச் செய்ய வேண்டும். மதுப்பழக்கம், ஃபேட்டி லிவர், ஹெபடைட்டிஸ் பி, சி பிரச்னைகளாலும் கல்லீரல் சுருக்கம் ஏற்படலாம். அதற்கேற்ற சிகிச்சை முறைகளைச் செய்ய வேண்டும்.

எல்லா மஞ்சள் காமாலைக்கும் நாட்டு மருந்து தீர்வு கிடையாது. நிறைய பேர் காரணத்தைக் கண்டறியாமலேயே மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்து எடுத்து, நிலைமை மோசமடைந்து கல்லீரல் செயலிழக்கும் மோசமான கட்டத்தில் மருத்துவமனைக்கு வருகின்றனர். நாட்டு மருந்துகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் மற்றும் உலோகங்கள் மஞ்சள் காமாலையை மேலும் தீவிரப்படுத்தும் தன்மை கொண்டவை என்பதால் கல்லீரலையே செயலிழக்க வைக்கும் அளவுக்கு பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

Keezhanelli
Keezhanelli
`ஹெச்.ஐ.வி-யைவிடவும் ஆபத்தான வைரஸ்!' ஹெப்படைட்டிஸ் சி ஆராய்ச்சி ஏன் கொண்டாடப்படுகிறது?

சுகாதாரமற்ற தண்ணீர், உணவின் மூலம் பரவும் ஹெபடைட்டிஸ் `ஏ' வைரஸ் தொற்றுக்கு கீழாநெல்லி எடுக்கலாம். அலோபதி மருத்துவத்திலும் ஹெபடைட்டிஸ் `ஏ' தொற்றால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லியைத்தான் பவுடர் செய்து கேப்ஸ்யூலாகக் கொடுக்கப்படுகிறது. அதே போல எல்லா மஞ்சள் காமாலைக்கும் பத்திய சாப்பாடு எடுக்க வேண்டும் என்பது கிடையாது.

மீண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

மஞ்சள் காமாலை வந்து மீண்டவர்கள் 2 - 3 மாதங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியில் சாப்பிடுவது, வெளியில் தண்ணீர் குடிப்பது போன்ற விஷயங்களை சிறிது காலத்துக்கு செய்யக் கூடாது. அதையே தொடர்ந்து பின்பற்றுவதும் நல்ல விஷயம். மஞ்சள் காமாலை வந்து குணமானதற்குப் பிறகு காய்ச்சல், உடல்வலி, சோர்வு என எந்த அறிகுறிகள் ஏற்பட்டாலும் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்" என்றார் அவர்.

Food- representational image
Food- representational image
Image by Ron Mitra from Pixabay
``உமாவோட சிரிச்ச முகம் என் கண்ணுலேயே இருக்கு!'' - நடிகை சாந்தி வில்லியம்ஸ்

உமாவின் மரணத்துக்கு வந்த அனைத்துப் பிரபலங்களும் ஒரே விஷயத்தை வேறு வேறு விதமாகச் சொன்னார்கள். ``30, 35 வயசுதானே ஆகுது. நமக்கெல்லாம் ஒண்ணும் ஆகாதுன்னு நினைச்சு உடல்நலத்தை அலட்சியம் பண்ணாதீங்க. எல்லாரும் உங்க உடல்நலத்தைப் பார்த்துக்கோங்க" என்பதுதான் அந்த விஷயம். நமக்கெல்லாம் அது பாடம். உடல்நலத்தைப் பேணுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு