Published:Updated:

ஆபத்தை உண்டாக்கும் அமிலப் பின்னோட்ட நோய்... எப்படி தப்பிக்கலாம்?

Stomach (Representational Image)
Stomach (Representational Image) ( Image by Darko Djurin from Pixabay )

சிகிச்சை வழங்கப்படாத இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் வேறு நோய்களையும் உடலுக்கு ஒவ்வாத சந்தர்ப்பங்களையும் உண்டாக்கும்.

நம்மில் பல பேர் அடிக்கடி இந்தப் பிரச்னையை எதிர்கொண்டிருப்போம். சிலருக்கு இது தீவிரமான பாதிப்பாகவும் இருக்கலாம். அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) எனப்படும் இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விளக்குகிறார் குடல், இரைப்பை சிகிச்சை மருத்துவர் ஆனந்த்.

``இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) அல்லது அமிலப் பின்னோட்ட நோய் (Acid Reflux) காரணமாக நமக்கு நெருக்கமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். இதில் இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரைப்பை திரவங்களும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன. இரைப்பை திரவங்களில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென் சவ்வு பாதிக்கப்படுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்பட்டு இந்த நோய் தீவிரமடைகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட்டு கஷ்டப்படும் சூழ்நிலை உருவாகும்.

என்ன காரணங்கள்?

சில மருந்து வகைகள் இரைப்பை - உணவுக்குழாய் இறுக்கத்தைத் தளர்வடையச் செய்யும். இவற்றின் தொடர்ச்சியான பயன்பாடும் இந்நோயை உருவாக்கலாம்.

புகைபிடித்தல், மிதமிஞ்சிய மதுபானப் பயன்பாடும் இந்நோயை ஏற்படுத்தும்.

உடல் பருமன், தோல் தடிப்பு நோய், உள்ளுறுப்பு இறக்கம் போன்றவை முக்கியமாக இந்த நோய்க்குக் காரணங்களாக இருக்கலாம்.

stomach
stomach
நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெரிய நெல்லிக்காய்... யார் யார் எவ்வளவு சாப்பிடலாம்?

என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

சிகிச்சை வழங்கப்படாத இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் வேறு நோய்களையும் உடலுக்கு ஒவ்வாத சந்தர்ப்பங்களையும் உண்டாக்கும். இந்நோயால், மூச்சுக் குழலிய இறுக்கம், நெடுங்கால இருமல், குரல் கரகரப்பு, பல் கோளாறுகள், உணவுக்குழாய்ப் புற்றுநோய், உணவுக்குழாயில் சுருக்கம் போன்ற நோய்கள் ஏற்படும். அதனால் மிக கவனமாக இருப்பது அவசியம்.

அறிகுறிகள்

இந்த நோய்க்கு பொதுவான அறிகுறிகள் நெஞ்செரிச்சல், உணவு - இரைப்பை திரவம் பின்னோட்டம், தொண்டையில் விழுங்குவது சிரமமாவது போன்றவை. பொதுவாக முதல் முதலாக நெஞ்சில் ஏற்படும் எரிச்சலை வைத்தே மக்கள் இந்நோயை உணர்கிறார்கள்.

தீர்வுகள் என்ன?

இரைப்பை சிகிச்சை மருத்துவர் ஆனந்த்
இரைப்பை சிகிச்சை மருத்துவர் ஆனந்த்

இந்த நோய்க்கு பல மருந்துகளும் அறுவை சிகிச்சைகளும் இருக்கின்றன. மேல் இரையகத்தின் பகுதிகள் உணவுக்குழாயின் கீழ் இறுக்கிப் பகுதியின் மேலே மடிக்கப்பட்டுத் தைக்கப்படும், இதன் மூலம் கீழ் உணவுக்குழாய் இறுக்கமடைந்து உணவு மற்றும் அமிலம் மேல் நோக்கித் தள்ளப்படுவதைத் தடுக்கிறது.

செய்ய வேண்டியவை

அறுவைசிகிச்சை மட்டும் தீர்வல்ல. ஆனால், நாம் சரியான வழிகளைப் பின்பற்றினால் இந்நோயை எளிதில் தடுக்கலாம்.

இடது பக்கம் தூங்குவது அல்லது தலையும் உடம்பின் மேற்பாகமும் உயரே இருக்குமாறு தலையணைகளைப் பயன்படுத்தித் துயில் கொள்ளுதல் நல்லது.

தவிர்க்க வேண்டியவை

சிறிய அளவுகளில் உணவு அருந்துதல், குறிப்பாக படுக்கைக்கு முன்னர் அதிகமாக உணவு உட்கொள்வதைத் தவிர்த்தல் நலம். எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும். வயிற்றை இறுக்கும் ஆடைகளை அணிய வேண்டாம். அதிக அமிலத்தன்மையான உணவுகளையும், அதிக காபி, புகை, மதுபானம் போன்றவற்றையும் தவிர்த்தால் கட்டாயம் இந்த நோயின் பாதிப்பு குறையும்.

- இங்க்பேனா
அடுத்த கட்டுரைக்கு