Published:Updated:

மழைக்காலத்தில் பாதங்களைத் தாக்கும் பிரச்னைகள்; பாதுகாத்துக்கொள்வது எப்படி?

Feet (Representational Image)
Feet (Representational Image) ( Image by Charles Thompson from Pixabay )

̀கால் விரல் இடுக்குகளில் ஏதாவது தொந்தரவு இருக்கின்றதா என மாதம் ஒருமுறையாவது கவனித்திருக்கிறீர்களா?’ எனும் கேள்வியை முன் வைத்தால், பெரும்பாலானோரின் பதில் இல்லை என்றே இருக்கும். நமது பாதங்கள் மீது பெரிய அளவில் அக்கறை இல்லை நமக்கு என்பதே கசப்பான உண்மை!

`அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்ற பழமொழி, மனதின் உணர்வை முகத்தில் தெளிவாக அறியலாம் என்பதை உணர்த்தும் உளவியல் நலமொழி. `நலத்தின் அழகு பாதத்தில் தெரியும்’ என்ற இக்கால மொழி. நம் முழு உடல் நலத்தின் பிரதிபலிப்பை, பாதங்களின் மூலம் அறியலாம் என்பதைத் தெளிவுபடுத்தும் சமீபத்திய நலமொழி!

பண்டைய கிராமங்களின் வீட்டு வாசலில் தண்ணீர்ப் பானைகள் அமைக்கப்பட்டிருக்கும். இப்போதும் வெகு சில கிராமங்களில் இந்த நல்வழக்கம் எஞ்சி நிற்கிறது. கால்களைக் கழுவி சுத்தம் செய்ய, கிராமத்து வீட்டு வாசல்களில் பானையில் தண்ணீர் வைத்தற்கான காரணம், வீடுகளுக்குள் கிருமிகள் வராமல் தடுப்பதற்கு மட்டுமல்ல, நம் உடலுக்குள் கிருமிகள் நுழையாமல் தடுப்பதற்கும்தான். `கால்களைக் கழுவாமல் வீட்டுக்குள் நுழையாதே’ என்று கிராமத்துப் பாட்டிகள் அதட்டியதற்கு பின் அளவு கடந்த அக்கறை நிறைந்திருந்தது.

Feet (Representational Image)
Feet (Representational Image)
Image by andreas160578 from Pixabay

முறையான கவனிப்பின்றி அவதியுறும் பாதங்களில் சேற்றுப் புண், பாத வெடிப்பு (பித்த வெடிப்பு), கால் ஆணி, நகச்சுற்று ஆகிய நோய்கள் பெருமளவில் தஞ்சமடைகின்றன. மழைக்காலத்தில் கூடுதல் கவனம் எடுத்து நமது பாதங்களை பராமரிப்பது அத்தியாவசியம். மழைக்காலத்தில் கால் விரல் இடுக்குகளில் உண்டாகும் மிக முக்கியப் பிரச்னையாக சேற்றுப் புண்களை கூறலாம். மழைக்காலம் மட்டுமல்ல... எப்போதும் ஈரத்திலேயே புழங்குபவர்களுக்கும் சேற்றுப் புண்கள் உண்டாகலாம்.

சேற்றுப் புண் ஏற்படுவதற்கான காரணங்கள், தடுக்கும் வழிமுறைகள், அதற்கான எளிமையான மருத்துவங்கள் என்னென்ன..?

சேற்றுப் புண்

எந்நேரமும் தண்ணீரிலியே புழங்கும் பெரும்பாலான மக்களின் கால் விரல் இடுக்குகளில், ஒரு வகையான பூஞ்சைத் தொற்று காரணமாக வெள்ளை நிறத்தில் அரிப்புடனும் எரிச்சலுடனும், கடுமையான வலியுடனும் சேற்றுப் புண்கள் முளைவிட ஆரம்பிக்கின்றன.

எப்பொழுதும் காலுறைகள் மற்றும் காலணிகளை இறுக்கமாக அணிந்திருக்கும் ஒயிட் காலர் அலுவலர்களுக்கும், வயல் வெளிகளில் சேற்றுக்குள் கால் புதைத்து பிறருக்காகப் பாடுபடும் விவசாயிகளுக்கும், ஈரமான நீர்த்தரையில் அதிக நேரம் செலவிடும் இல்லத்தரசிகளுக்கும், வெளியே சென்று பின் வீடு நுழைந்ததும் கால்களைச் சரியாக சுத்தம் செய்யாத இல்லத்து அரசர்களுக்கும் சேற்றுப் புண்கள் உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

நெருக்கமாக விரல் அமைப்பு உடையவர்களுக்கும், பாதங்களில் அதிகமாக வியர்வை சுரப்பவர்களுக்கும் சேற்றுப் புண்கள் உண்டாகலாம். அசுத்தமான தண்ணீரில் வாழ்ந்து கொண்டிருக்கும் நுண்கிருமிகள் நம் விரலிடுக்குகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டால் சேற்றுப்புண்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Feet (Representational Image)
Feet (Representational Image)
Image by Bruno /Germany from Pixabay
கொரோனாவிலிருந்து மீண்ட குழந்தைகளை அதிக்கும் பாதிக்கும் மிஸ்க் நோய்; அறிகுறிகள் என்னென்ன?

பாதுகாப்பு நடவடிக்கைகள்

குளித்த பின்பு உடல் முழுவதும் சிரத்தை கொண்டு துடைக்கும் நாம், பாதங்களில் துண்டை வைத்து துடைத்து உலர வைக்கிறோமா என்றால், நிச்சயமாக இல்லை. பாதங்கள் தானாகவே உலர்ந்தால்தான் உண்டு. தேங்கிய மழைநீரிலோ, சேற்று நீரிலோ கால்கள் நனைந்துவிட்டால், வீடு நுழைந்தவுடன் முதல் வேளையாக, பாதங்களை நன்றாகக் கழுவி, உலரவைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டால் சேற்றுப் புண்கள் மட்டுமல்ல, அரிப்பு, எரிச்சல் போன்ற குறிகுணங்களுக்கும் பாதங்களில் இடமிருக்காது.

̀கால் விரல் இடுக்குகளில் ஏதாவது தொந்தரவு இருக்கின்றதா என மாதம் ஒருமுறையாவது கவனித்திருக்கிறீர்களா?’ எனும் கேள்வியை முன் வைத்தால், பெரும்பாலானோரின் பதில் இல்லை என்றே இருக்கும். நமது பாதங்கள் மீது பெரிய அளவில் அக்கறை இல்லை நமக்கு என்பதே கசப்பான உண்மை! உடலின் மற்ற உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமா, அதே அளவுக்குப் பாதங்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டிலிருக்கும் கால் மிதிப்பான்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் மிக முக்கியம். சுத்தப்படுத்தாத கால் மிதிப்பான்களின் இடுக்குகளில் இருக்கும் தூசிகள், விரல் இடுக்குகளில் உள்ள புண்களில் இரண்டாம் நிலை கிருமி சஞ்சாரத்தை உண்டாக்குவதற்கான வாய்ப்புகளோ மிக அதிகம்.

காலணிகளும் காலுறைகளும்

காலணிகள் தரமானதாகவும் தூய்மையாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். காலணிகளில் ஒளிந்துகொண்டிருக்கும் மண் துகள்களும் கிருமிகளும் கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்தால்கூட, காலிடுக்கில் பாதிப்பை உண்டாக்கத் தொடங்கிவிடும். காலுறைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வதுடன், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவற்றை டிஸ்போஸ் செய்துவிடுவது நல்லது.

Feet (Representational Image)
Feet (Representational Image)
Image by Pexels from Pixabay
`குளிர்ந்த நீரில் குளித்தால் பக்கவாதம் வருமா?' - வாட்ஸ்அப் ஃபார்வர்டும் உண்மையும்!

வீடு திரும்பியவுடன் கால்களிலிருந்து கழட்டிய காலுறைகளை இரவு முழுவதும் ஷூவுக்குள்ளே அடைக்கலம் கொடுத்து பாதுகாக்காமல், அவற்றைத் தனியாக உலர வைக்க வேண்டும். ஷூக்களையும் அவ்வப்போது வெயிலில் உலர வைத்து உள்ளிருக்கும் ஈரப்பதத்தைப் போக்கிக்கொள்வது நல்லது. கிருமிகள் செழித்து வளர்வதற்கு ஈரப்பதம் முக்கியக் காரணி. காலுறைகளையும் காலணிகளையும் மிகவும் இறுக்கமாக அணிவதும் பாதங்களில் பாதிப்புகளை உண்டாக்கும். பாதங்களில் பிரச்னை ஏற்படும்போது, காலுறைகளைத் தவிர்ப்பதே சிறந்த அணுகுமுறை.

மருத்துவம்

வெந்நீரில் பாதங்களைச் சுத்தமாகக் கழுவி, ஈரத்தை தூய்மையான துண்டால் துடைத்து உலர வைக்க வேண்டும். முகத்துக்குத் தனியாகத் துண்டு வைத்து பராமரிப்பதைப் போல, பாதங்களுக்கும் தனியாக ஒரு துண்டை வைத்துக்கொள்ளலாம். மிதமான வெந்நீரில் திரிபலாச் சூரணத்தை (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த பொடி) கலந்து புண்களைக் கழுவ உபயோகிக்கலாம். மேலும் திரிபலா பொடியை ½ ஸ்பூன் அளவு வெந்நீரில் இருவேளை உள்ளுக்கும் எடுத்துக் கொள்ளலாம். நெல்லியிலுள்ள `Emblicanin’ என்ற வேதிப்பொருள், புண்களை விரைவாகக் குணமாக்குவதாகக் குறிப்பிடுகிறது ஓர் ஆய்வுச் செய்தி.

ஊமத்தை இலைச் சாறு கொண்டு செய்யப்படும் மத்தன் தைலம், நெடுங்காலமாக அடிபட்ட புண்ணுக்கும், சேற்றுப் புண்ணுக்கும் இன்றளவும் கிராமங்களில் பயன்பாட்டில் உள்ள வெளிப் பிரயோகத்துக்கான அற்புத சித்த மருந்து. மத்தன் தைலத்தைப் புண்களில் வைத்துக் கட்ட, அதன் குணமாகும் தன்மை விரைவுபடுத்தப்படும். `வங்க வெண்ணெய்’ எனும் களிம்பை சேற்றுப்புண் உள்ள பகுதியில் தடவலாம். உள் மருந்தாக பரங்கிப்பட்டை சூரணம், பலகரை பற்பம் போன்றவற்றை மருத்துவரின் அறிவுரையோடு எடுக்கலாம். கடுக்காய்த் தோலையும் மஞ்சளையும் சேர்த்தரைத்து புண்களில் பூசலாம். மருதாணி இலை பூச்சும் நல்ல பலன் கொடுக்கும் எளிமையான மருத்துவம்.

Diabetes
Diabetes
Photo: Pixabay

நீரிழிவு நோயாளிகளின் கவனத்துக்கு...

கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோயாளிகளுக்கு பாதங்களில் அதிகளவில் தொந்தரவுகள் ஏற்படுகின்றன. கிருமித் தொற்றுகள் நீரிழிவு நோயாளிகளை எளிதில் தாக்குவதால், பாதங்களில் தனி கவனம் செலுத்த வேண்டும். தவறாமல் தினமும் விரல் இடுக்குகளை கவனிப்பது சிறந்தது. முதியவர்களுக்கும் பாதங்களில் தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் `முதியோர் நலமும்’ முக்கியத்துவம் பெறுகிறது.

கால் பாதங்களை அக்கறையுடன் கவனித்துக் கொண்டால் பாதத்தில் ஏற்படும் நோய்களை எளிதாகத் தடுக்க முடியும். தினமும் குளிக்கும்போது தனி கவனம் செலுத்திப் பாதங்களுக்கும் நேரம் ஒதுக்குவது அத்தியாவசியம். அழுக்குகள் சேரா வண்ணம் பாதங்களை சுத்தமாக வைத்திருந்து, பளிங்குபோல பளபளப்பான பாதங்களைப் பராமரித்து, நோய்கள் நுழையா வண்ணம் பாதுகாப்போம். பாதங்களைத் தூய்மையாகப் பராமரித்தாலே நோயின்றி வாழலாம்!

அகத்தைப் பிரதிபலிக்கும் நலக்கண்ணாடி முகம் மட்டுமல்ல, பாதங்களும்தான்!

அடுத்த கட்டுரைக்கு