Election bannerElection banner
Published:Updated:

உயிரைப் பறிக்குமா ஒவ்வாமை? அலர்ஜியில் வேண்டாம் அலட்சியம்! - எச்சரிக்கும் மருத்துவர்

Representational Image
Representational Image ( Photo by Brittany Colette on Unsplash )

முறையான உடல் எதிர்ப்பாற்றல் சக்தி பெற்றிருக்கும் (Immune Competent) அனைவருக்கும் இந்த உடல்நிலை மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

னித உடலில் ஒவ்வோர் உறுப்பும், ஒவ்வோர் இயக்கத்துக்காகப் படைக்கப்பட்டவை. தன்னிச்சையாக எவ்விதத் தணிக்கையும் இல்லாது, மூளை, இதயம், நுரையீரல், ரத்தக்குழாய்கள், சிறுநீரகம், கல்லீரல் என அனைத்து உறுப்புகளும் தம் சேவைகளை மனிதனுக்கு வழங்கி வருவதைப்போல நம் உடலின் எதிர்ப்பாற்றல் அணுக்களின் சேவையும் மிக உன்னதமானது.

நம் உடல்வாகுக்கும் நம் செல் அணுக்களுக்கும் ஒவ்வாத அந்நியப் பொருள்கள் (Foreign Substances) உடலுக்குள் நுழைந்தால், நம் ஊர்க்காவல் படை, கப்பல்படை, விமானப்படை மற்றும் ராணுவப்படை போல நம் உடல் எதிப்பாற்றல் அணுக்கள் குழுவாகவோ, பெரும்படையாகவோ ஒன்றுசேர்ந்து கொல்லும் அல்லது உடைத்து வெளியேற்றும்.

இந்தச் செயல் தினம்தோறும் நம் உடல் அணுக்களில் ஒவ்வொரு நொடியும் நடக்கும் அதிசயம். இப்படி நடக்கும் விஷயங்களை Innate Immune response என்கிறோம்!

Shampoo
Shampoo
Photo by Matthew Tkocz on Unsplash

முறையான உடல் எதிர்ப்பாற்றல் சக்தி பெற்றிருக்கும் (Immune Competent) அனைவருக்கும் இந்த உடல்நிலை மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அப்படி நிகழும் ஒருவகை தடுப்பாற்றல்களில் நமக்குத் தெரிந்தது அலர்ஜி எனும் உடல் ஒவ்வாமை (Systemic Hypersensitivity reaction). இது நம் உடலின் எந்தப் பாகத்திலும் நிகழலாம்.

இவ்வகை ஹைப்பர் சென்சிட்டிவிட்டியால், நான்கு வகையான ரியாக்ஷன்கள் நம் உடலில் அரங்கேறும்.

Type 1 - Anaphylactoid reaction

Type 2 - Antibody mediated reaction

Type 3 - Immune complex reaction

Type 4 - Cell mediated reaction

மருத்துவர் சஃபி சுலைமான்
மருத்துவர் சஃபி சுலைமான்

மேற்கூறிய 4 வகை ஒவ்வாமை காரணிகளில் டைப் ஒன்தான் மிக பரவலாகப் பலரிடத்திலும் காணப்படுகிறது.

சிலருக்கு சருமத்தில் அரிப்பு, சருமம் தடித்தல், கண் சிவத்தல், உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் மட்டும் அரிப்பு, சளி, அடுக்கு தும்மல், வறட்டு இருமல் எனப் பலவகையான அறிகுறிகள் தென்படும்.

மேற்கூறிய அறிகுறிகள், தூசி, புகை, சாம்பிராணி, சோப், பவுடர், ஷாம்பூ, துணி, தேன், உணவு தானியம், கடலை, நட்ஸ், மீன் மற்றும் கடல் உணவுகள், முட்டை, கிழங்கு வகைகள், கத்திரிக்காய், புதுத் துணி, நறுமணப் பொருள்கள், சிலவகை ரசாயனங்கள், பூச்சிக்கடி, சிலவகை நாட்டு மருந்துகள், மருத்துவர்கள் தரும் சில ஆன்டி பயாட்டிக் மருந்துகள், காய்ச்சல், உடல்வலி மருந்துகளால்கூட இதுபோன்ற கொடும் ஒவ்வாமைகள் வரலாம்.

சமீபத்தில்கூட ஒரு நாளிதழில் வந்த செய்தி அது. பேன் தொல்லைக்காக உபயோகிக்கும் பேன் ஒழிப்பு மருந்தால் 7 வயதுச் சிறுமி அலர்ஜி பாதிப்பு (Anaphylactoid reaction) வந்து மருத்துவமனை கொண்டு செல்லும் முன்னர் இறந்த செய்தியை அறிந்திருப்பீர்கள்.

இது IgE mediated Hypersensitivity-யின் அடுத்த நிலையில் சிலருக்கு ஏற்படும் அனாபைலாக்சிஸ் எனும் பிரச்னை.

Sneeze
Sneeze
Image by Joseph Mucira from Pixabay
கோவிட்-19: ஐந்தில் ஒருவருக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம்... எப்படி எதிர்கொள்வது?

அதாவது, நம் உடலில் இருக்கும் எதிர்ப்பாற்றல் அணுக்களுடைய ஆக்கம் கட்டுக்கடங்காது மிக அபரிதமாக இருத்தல்.

அதில் முக்கியமாக, மாஸ்ட் செல்கள் (Mast Cell Activation) மற்றும் வெள்ளை அணுக்களின் பேசோபில்ஸ் (Basophils degranulation) எனும் ஒருவகை அணுக்கோர்வை நடந்து, உடலின் இளகிய தசைகளை (Smooth cell contraction) இறுகச்செய்து அவை விரிவடைய வழியில்லாது மாற்றிவிடும்.

இந்த நிலைதான் அனாபைலாக்சிஸ் எனப்படுகிறது.

மருத்துவம் செய்திட கண நேரம் தாமதமானாலும், நம் உடலில் மெல்லிய தசைகள் இருக்கும் ரத்தக்குழாய், சுவாசக்குழாய், மூச்சுக்குழாய், தொண்டைப் பகுதி, இதயத்தசைகள் என அனைத்திலும் பிறழ்வான மாறுதல்களை உண்டாக்கிவிடும்

இருமல், சுவாச முட்டல், மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், உணர்வின்மை, ரத்த அழுத்த குறைவு, மயக்கம் என அடுத்தடுத்த நிலைகளுக்கு உடல் முன்னேறிவிடும். சாதாரண புகையோ, ஹேர் டையோ, கொசு மருந்தோ, பேன் மருந்தோ, உணவு, ஊசி, மருந்து என எதனாலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பே ஏற்படலாம்.

எனவே இதுபோன்ற தூண்டும் காரணிகளால் ஏற்படும் சாதாரண அலர்ஜி, உடல் அரிப்பு, அடுக்குத்தும்மல் போன்ற ஒவ்வாமை மாற்றங்கள் உள்ளவர்கள், மருத்துவர்களை நாடி IgE மற்றும் உடல் வெள்ளை அணுக்களுடைய செயல்பாடுகள், உணவு ஒவ்வாமைக்கான பரிசோதனைகள் செய்து இதுபோன்ற அலர்ஜிக்கு அடுத்த அனபைலாக்சிஸ் நிலைக்குச் செல்லாமல் பாதுகாப்பு தேடலாம்.

Dry Fruit
Dry Fruit
Photo by Usman Yousaf on Unsplash

அப்படியே அனாபைலாக்சிஸ் நிலைக்குச் சென்றவர்கள் வேறெந்த வீட்டுமுறை மருத்துவங்களும் செய்து காலம்தாழ்த்தாமல் உடனடியாக உயிர்காக்கும் துரித மருத்துவச் சேவையை நாடிவிடுதல் நலம்.

அடுத்தடுத்த உடல் பரிசோதனை செய்து, இனி இதுபோன்ற பாதிப்பைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை (Allergy Preventive measures) அறிவது சாலச்சிறந்தது. அலர்ஜி எனும் வார்த்தை பலருக்கும் சிறியதாகத் தோன்றலாம். சாதாரண அலர்ஜியின் அடுத்தநிலை உயிரையே பறிக்கும் ஆபத்தாக முடியலாம். ஜாக்கிரதை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு