Published:Updated:

கொரோனா சூழலில் வளரும் குழந்தைகள்; அவர்களின் இந்தப் பிரச்னைகளையெல்லாம் அறிவீர்களா பெற்றோர்களே?

Girl wearing mask
Girl wearing mask ( AP / Mahesh Kumar A )

கொரோனாவுக்கு முன் பிறந்த குழந்தைகளைவிட பெருந்தொற்றுக் காலத்தில் பிறந்த குழந்தைகளின் மனவளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கொரோனா ஊரடங்கு என்ற அறிவிப்பு ஆரம்பத்தில் அதிர்ச்சியை அளித்தாலும் போகப்போகக் குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது எனப் பழகிக்கொண்டோம். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் வேலையிழப்பு, வருவாய் இழப்பு, நிச்சயமற்றத்தன்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் வீட்டில் முடங்கி இருக்கும் அனைவருக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தின.

பெரியவர்களின் நிலையே கவலைக்கிடம் என்றால், மகிழ்ச்சியால் நிறைந்திருக்க வேண்டிய குழந்தைகளின் உலகம் இயல்பைவிட பல மடங்கு சுருங்கிப்போனது. கொரோனாவுக்கு முன் பிறந்த குழந்தைகளைவிட பெருந்தொற்றுக் காலத்தில் பிறந்த குழந்தைகளின் மனவளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கார்த்திக் பாலசுப்பிர
மணியன்
கார்த்திக் பாலசுப்பிர மணியன்

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி முழுமையாக அறிய குழந்தைகள் நல மருத்துவர் கார்த்திக் பாலசுப்பிரமணியனிடம் பேசினோம்.

``குழந்தைகள் பிறந்த ஓராண்டுக்குள் சின்னச் சின்ன வார்த்தைகள் பேசத் தொடங்குவார்கள். பைசிலபல் என அறியப்படும் `ம்மா...', `ப்பா...' போன்ற வார்த்தைகளை ஒரு வயதுக்குள் பேச வேண்டும். இரண்டு வயதில் இன்னும் அதிக வார்த்தைகள் கற்றுக்கொண்டு, வார்த்தைகளைக் கோத்துப் பேசத் தொடங்குவார்கள். குழந்தைகளிடம் பெற்றோரைத் தவிர அதிக நபர்கள் பேசும்போது பேசும் திறன், பழகும் திறன் போன்றவை அதிகரிக்கும்

வார்த்தைகள் அவற்றின் அர்த்தங்கள், மனிதர்களை அறிந்துகொள்ள இருவழித் தொடர்பு அவசியம். ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் பெற்றோரைத் தவிர, வேறு யாரிடமும் பழகுவதில்லை. பெரும்பாலும் மின்னணுச் சாதனங்களுடனேயே நேரத்தைக் கடத்தும் குழந்தைகள் யாரிடமும் பேசவதுகூட இல்லை. மொபைல் அல்லது டிவி எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் வீடுகளில் இந்தப் பிரச்னை இன்னும் அதிகம். வீட்டுக்குள்ளேயே இருக்கும் குழந்தைகளின் மொழியறிவு நிச்சயம் தடைபடுகிறது.

அப்பா, அம்மா மற்றும் குழந்தை மட்டும் இருக்கும் வீட்டில் ஒருவர் வேலைக்குச் செல்ல மற்றவர் பிற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலோ, இருவரும் வொர்க் ஃப்ரம் ஹோமில் பிஸியாக வேலை பார்த்துக்கொண்டிருந்தாலோ குழந்தைக்கு இம்மாதிரி பிரச்னைகள் ஏற்படும். குழந்தைகளைக் கவனிக்க முடியாத பெற்றோர் தற்போது அவர்கள் கையில் மொபைல்போனை கொடுப்பதால் இந்தப் பிரச்னை இன்னும் அதிகரிக்கிறது.

Covid -19 Outbreak
Covid -19 Outbreak
AP Photo/Mahesh Kumar A
குழந்தைகளை பாதிக்குமா கொரோனாவின் மூன்றாவது அலை..?

மிகச் சில குழந்தைகளுக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்னைகள் தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டன. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பெரும்பாலான குழந்தைகளுக்கு அட்டென்ஷன் டெஃபிசிட் (கவனக் குறைவு), ஹைப்பர் ஆக்டிவிட்டியால் ஏற்படும் ADHD போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் குழந்தைகளிடம் இருக்காது. புதிய திறன்களை மேம்படுத்த முடியாமல் போகலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டு வயது வரை குழந்தைகளுக்கு கேட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்தக் கூடாது. இரண்டு முதல் நான்கு வயது குழந்தைகளுக்கு அதிகபட்சம் அரை மணி நேரம் பார்க்க அனுமதிக்கலாம். குழந்தைகளை வெளியில் சாதாரணமாக அழைத்துச் செல்லும் காலம் வரும்வரை வீட்டில் அவர்களை பயனுள்ள, மாறுபட்ட செயல்களில் ஈடுபடுத்தி அவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களிலிருந்து காக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

Children (Representational Image)
Children (Representational Image)
மூன்றாம் அலை அச்சம், பள்ளிகள் திறப்பு; நமக்கான பொறுப்புகள் என்ன? - விளக்கும் மருத்துவர்கள்

குழந்தைகள் நோயாக மாறுமா?

தற்போது பெரியவர்களை மட்டுமே அதிகம் பாதிக்கும் கோவிட்-19 தொற்று, குழந்தைகள் நோயாக மாறும் என்று சில நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இதுபற்றி மருத்துவர் கார்த்திக் பாலசுப்ர மணியம் கூறுகையில், ``கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி முக்கிய பங்காற்றி உள்ளது. அதன் அடிப்படையில் பெரியவர்களுக்கு தடுப்பூசி கிடைத்துவிட்டதால் வரும் காலங்களில் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதாலும், பெரியவர்கள் பலர் தொற்றுக்கு ஆளாகி மீண்டுவிட்டதாலும் சொல்லப்பட்ட அனுமானம்தான் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்பது.

முதல் இரண்டு அலைகளில் உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி 10 - 12% தான் குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் குழந்தைகளுக்குத் தீவிர பாதிப்பு ஏற்படவில்லை. சாதாரண சளி, காய்ச்சல் போலதான் தொற்று பாதித்து குணமடைந்துள்ளனர். குழந்தைகளுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் கொரோனா ஃப்ளூ நோய் போல பருவகால நோய்களில் ஒன்றாக மாறலாம். இதைத்தான் உலக சுகாதார நிறுவனமும் வரும் காலத்தில் கொரோனா பருவகால நோயாகத் தொடர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது. எனவே, ஃப்ளூ போன்று குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் தாக்கும் நோயாக கோவிட்-19 மாறலாமே தவிர, குழந்தைகளுக்கான நோயாக மாறும் என்பது அனுமானம் மட்டுமே" என்று தெரிவித்தார்.

விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo

அடுத்த கட்டுரைக்கு