Published:Updated:

கோவிட்-19: நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சாத்தியம் என்ன... ஓர் அலசல்!

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை ( Pixabay )

கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட பெரும்பான்மை நுரையீரல் இயக்கம் முற்றிலும் செயலிழந்த நிலையில், நோயாளர்களுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை ஏற்படுகிறது.

கோவிட் நோயின் தாக்கத்தால் நுரையீரல் பாதிப்படையும் நிலையில், இறுதி நடவடிக்கையாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை குறித்த பேச்சுகள் எழத் தொடங்கும். நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது முற்றிலுமாக நுரையீரல் செயலிழப்பு நிகழ்ந்துவிட்ட ஒருவருக்கு செய்யப்படும் சிகிச்சை. பொதுவாக இந்த சிகிச்சை நுரையீரல் வளர்ச்சி மற்றும் இயக்கம் சார்ந்த பிறவிக்குறைபாடுகள் உள்ள இளம் வயதினருக்கு அதிகம் செய்யப்படுகின்றது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

இருப்பினும் நீண்ட நாள் நுரையீரல் அழற்சி (Chronic Obstructive Pulmonary Disease) மற்றும் நுரையீரலின் செல்களை அழிக்கும் இடைநிலை நுரையீரல் நோய் (Interstitial Lung disease) ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த சிகிச்சை பயன்தரும். இப்போது, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட பெரும்பான்மை நுரையீரல் இயக்கம் முற்றிலும் செயலிழந்த நிலையில், கொரோனா நோயாளர்களுக்கும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவை எழுந்துள்ளது.

தற்போது பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான நுரையீரல் தானம், விபத்தினால் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து அவரின் சொந்தங்களின் விருப்பத்தின் பேரில் பெறப்படுகிறது. இவ்வாறு மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து பெறப்படும் நுரையீரல், ஐஸ் பெட்டியில் குளிர் நிலையில் பாதுகாக்கப்படுகின்றது.

டோனரிடமிருந்து (donor) அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட நுரையீரல் அடுத்த ஆறு முதல் எட்டு மணிநேரத்துக்குள் அதைப் பெற காத்திருக்கும் நோயாளிக்குப் பொறுத்தப்பட வேண்டும்.

டாக்டர் ஃபரூக் அப்துல்லா
டாக்டர் ஃபரூக் அப்துல்லா

மாற்று நுரையீரல் பெறும் வழிமுறைகள் என்ன?

ஒருவருக்கு நுரையீரல் செயல்பாட்டுத் திறன் முற்றிலுமாகக் குறைந்துவிட்டிருந்தால், நுரையீரல் நோய் சிறப்பு நிபுணரின் பரிந்துரையின் பேரில் அவர் `ட்ரான்ஸ்டான் (TRANSTAN - Transplant Authority of Tamilnadu)-ல் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பதிவுக் கட்டணம் ஏதுமின்றி பதிவு செய்து கொள்ளலாம். தனியார் என்றால், ஒருவர் எந்த மருத்துவமனையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்புகிறாரோ அந்த மருத்துவமனை மூலம் ரூபாய் ஆயிரம் பணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பதிவு செய்த பின் காத்திருப்புக் காலம் (Waiting period) தொடங்கும்.

தமிழ்நாடு முழுவதும், மாற்று உறுப்பு அறுவை சிகிச்சைகளுக்காக உறுப்பு தானத்துக்குக் காத்திருப்போர் பட்டியல் தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. இதில் தற்போது ஜனவரி 2020 கணக்கின்படி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 37 பேர் காத்திருந்தனர்.

TRANSTAN இயக்கத்தின் முக்கியப் பணி என்பது...

* கொடையாக வழங்கப்பட்ட உறுப்புகள் அதற்குரிய பயனாளிகளுக்கு எந்தவித இடைத்தரகர்கள் மற்றும் பண மோசடி நடக்காமல் முறையாக வெளிப்படைத்தன்மையுடன் சென்று சேர்வதை உறுதி செய்வது

* உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்யும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தரம் மற்றும் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பது

* உறுப்பு மாற்றுக்குக் காத்திருப்போர் பட்டியலைப் பராமரிப்பது

அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை
Pixabay

தற்போது மேலை நாடுகளில் உயிருடன் இருப்பவர்களும் தங்களது நுரையீரலின் சிறு பகுதியை தானமாக வழங்கும் முறை பிரபலமடைந்து வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கிவருகிறது.

இதுவரை தமிழகத்தில் 537 பேரிடமிருந்து நுரையீரல் தானமாகப் பெறப்பட்டு கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது.

நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் கட்டாயம் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் உடலின் எதிர்ப்பு சக்தியை கட்டுப்படுத்தும் மருந்துகளை, மாத்திரை வடிவில் தொடர்ந்து எடுத்து வரவேண்டும்.

இதன் மூலம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சராசரியாக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் கூடுதல் வாழ்நாளைப் பெறுகின்றனர்.

உலகின் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்து வரும் நுரையீரல் கொடை பெற்றவர் - ஹோவல் கிரகாம் (Howell Graham). 1990-ல் செய்யப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இவர் தற்போதுவரை பூரண உடல்நலத்துடன் வாழ்ந்து வருகிறார்.

கோவிட்-19 நோய்த்தாக்குதலால் நிரந்தரமாக நுரையீரல் பழுதுநிலைக்குச் செல்லாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் இதோ.

1. வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

2. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்

3. முதியோர் கட்டாயம் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

4. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்

5. கொரோனா தொற்றின் முக்கிய அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய மூன்றும் இருப்பின் உடனே கால தாமதம் செய்யாமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மருத்துவமனை
மருத்துவமனை
Pixabay

அலட்சியம் ஆபத்தாக மாறிவிடும்

எனவே கொரோனா குறித்து முன்பிருந்ததைவிட அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். விதிகளைத் தளர்த்தி வீதிகளைத் திறந்து விட்டிருப்பது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேயன்றி கொரோனா குறித்து அலட்சியமாக இருக்க அல்ல.

கொரோனா குறித்து விழிப்புணர்வுடன் இருப்போம். நம்மையும் நம் சுற்றத்தையும் காப்போம்.

அடுத்த கட்டுரைக்கு