Published:Updated:

மனைவிக்கு OCD பிரச்னை, கணவரின் கவலை... நிபுணர் தீர்வு! #LetsSpeakRelationship

Representational Image
Representational Image

ஓசிடி (Obsessive Compulsive Disorder) என்பது மனதில் தேவையற்ற அச்சங்கள் சூழ்ந்து கொண்டு, தேவையில்லாத காரியங்களில் அல்லது சிந்தனைகளில் நம்மை ஆழ்த்திவைக்கும் ஒருவித மனநோய்.

``என் மனைவிக்கு OCD (Obsessive Compulsive Disorder) என்ற மனநலக் குறைபாடு உள்ளது. இதற்கு ஒரு வருடத்துக்கும் மேலாக மருந்துகள் எடுத்துக்கொண்டிருக்கிறார். நல்ல முன்னேற்றம் உள்ளது. இருந்தாலும் கட்டுப்படுத்த முடியாத சிந்தனைகளால் மிகுந்த மன வருத்தத்தோடு இருக்கிறார். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்?"

Representational Image
Representational Image

சமீபத்தில் விகடனின் uravugal@vikatan.com மெயிலுக்கு, தன் பிரச்னைக்கான தீர்வு கேட்டு வந்திருந்த வாசகரின் மெயில் இது. வாசகரின் கேள்விக்கு விளக்கம் அளிக்கிறார், மனநல மருத்துவர் பூங்கொடி பாலா.

``ஓசிடி (Obsessive Compulsive Disorder) என்பது மனதில் தேவையற்ற அச்சங்கள் சூழ்ந்து கொண்டு, தேவையில்லாத காரியங்களில் அல்லது சிந்தனைகளில் நம்மை ஆழ்த்திவைக்கும் ஒருவித மனநோய்.

நம்மைச் சுற்றி நிறைய பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்களைக் கண்டிருப்போம். குறிப்பாக, சுத்தத்தின்மீது அதீத கவனம் உடையவர்கள். தற்போது இந்தக் கொரோனா காலத்தில் அது மேலும் தீவிரமாகி, கை கழுவுவது முதல் வீட்டை சுத்தப்படுத்துவது வரை அவர்கள் இன்னும் தீவிரமாகி இருப்பார்கள். பொருள்களை எடுத்த இடத்தில் வைப்பது, பூட்டிய பூட்டை மீண்டும் இழுத்துப் பார்ப்பது என, இவர்கள் பல வழிகளில் தங்களின் பெர்ஃபெக்‌ஷனை வெளிப்படுத்துவர். எனினும், ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து திருப்தி அடைந்துவிடுவர். ஆனால் அதுவே ஓசிடி பிரச்னை உள்ளவர்களுக்குத் திருப்தி என்னும் நிலையே கிடையாது.

Representational Image
Representational Image

உதாரணமாக, உறங்கச் செல்லும் முன், `உள்தாழ்ப்பாள் போட்டோமா?' என்னும் சந்தேகம் எல்லா பெண்களையும் படுக்கையைவிட்டு எழுந்து எட்டிப்பார்க்க வைக்கும். நாம் ஒருமுறை பார்த்துவிட்டு படுத்துவிடுகிறோம் என்றால், ஓசிடி பிரச்னை உள்ளவர்கள் சில நிமிடங்களுக்கு ஒரு முறை எழுந்து சென்று அதை உறுதிப்படுத்தியபடியே இருக்க, அவர்களது மூளை அவர்களுக்குக் கட்டளையிடும். சோதித்துச் சோதித்தே இரவு தீரும்.

இது மறதிப் பிரச்னை இல்லை. ஆனால் மூளையின் ஓரத்தில் தாழ்ப்பாள், கைகழுவுதல் போன்ற செயல்பாடுகள் குறித்து சந்தேகங்கள் எழுந்துகொண்டே இருக்கும். இந்தச் சந்தேகங்கள் அதிகரித்து, மீண்டும் கைகளைக் கழுவச் சென்றுவிடுவர். சிலருக்கு இந்த பாதிப்பு எண்களை மையமாக வைத்தும் விளையாடும்.

உதாரணமாக ,12 முறை கைகழுவினால்தான் சுத்தமாகும், இல்லையெனில் கிருமிகள் போகாது என எண்ணிக்கொண்டு, அவர்களே அவர்களின் முனைப்புத் தன்மையைத் தீர்த்துக்கொள்வர். வேதனை என்னவென்றால் இவர்கள் 11 முறை கைகழுவினாலும் ஒருமுறை குறைவாகக் கழுவிய பாவம் மனதின் ஓரத்தில் புதைந்து உறுத்திக்கொண்டே அவர்களின் அன்றைய நாளையே விழுங்கிவிடும்.

OCD பிரச்னைக்கு தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தாலும், வாரத்துக்கு ஒருமுறை உளவியல் ஆலோசனை பெறுவது அவசியம்.
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

குழந்தைகள் படிக்கும்போது மணிக்கணக்கில் ஒரே பகுதியைப் படிப்பதைப் பார்க்கலாம். எத்தனை ஆழமாக அந்தப் பகுதி நினைவில் இருந்தாலும், மறந்துவிடுமோ என இனம்புரியாத அச்சம் ஆட்கொண்டு அவர்களைப் பல மணி நேரத்தை அதற்குச் செலவிடவைக்கும். இப்படி, ஓசிடி நபரைப் பொறுத்து, பல விதங்களில் வழக்கத்தை விட்டு மாறுபட்டு அவர்களை நடந்துகொள்ள வைக்கும்.

OCD பிரச்னைக்கு எளிமையான தீர்வு, தொடர்ந்து உளவியல் மருத்துவரிடம் சைக்கோ தெரப்பி எனப்படும் உளவியல் ஆலோசனைக்குச் செல்வதும், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை அவர் பரிந்துரைக்கும் காலம் வரை எடுத்துக்கொள்வதுமே. ஓசிடி பிரச்னைக்கு சிபிடி எனப்படும் Cognitive Behaviour Therapy அளிக்கப்படும். இது தொடர் சிகிச்சையாக, நீண்ட நாள்களுக்கு அளிக்கப்பட வேண்டியிருக்கலாம். எனினும் முழு ஈடுபாட்டுடன் நிபுணர் கூறும் உளவியல் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது மிக அவசியம்.

மனநல மருத்துவர் பூங்கொடி பாலா
மனநல மருத்துவர் பூங்கொடி பாலா

நீங்கள் குறிப்பிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், உங்கள் மனைவியின் நோய்த்தாக்க நிலை பற்றி அறிந்துகொள்ள இயலாது. அவருக்கு ஒரே ஓர் அறிகுறியுடன் ஓசிடி இருக்கிறதா, இல்லை பல அறிகுறிகள் இருக்கின்றனவா என தெரியவில்லை. ஆனால், உங்கள் மனைவி வருத்தத்துடன் காணப்படுவதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு மனஅழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

பெர்ஃபக்ஷன் விஷயத்தில் ஓசிடி உள்ளவர்கள் சிகிச்சைக்கு பின்பும், தான் அத்துணை பெர்ஃபெக்ட் இல்லை என எண்ணுவதனால்கூட மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து அவரின் மன அமைதியைப் பேண உறுதுணையாக இருப்பதும், தொடர்ந்து அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க ஊக்குவிப்பதும் அவசியம்.

Mental health
Mental health
மகன்களுக்கான மரபைக் கட்டமைக்கும் தந்தைகள்! - ஓர் உளவியல் பார்வை #MyVikatan

உங்கள் மனைவி தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வந்தாலும், வாரத்துக்கு ஒருமுறை உளவியல் ஆலோசனை பெறுவது அவசியம். இவ்வாறு தொடர்ந்து மருந்து மற்றும் உளவியல் ஆலோசனை பெற்றால் சில மாதங்களிலேயே தீர்வு காணலாம். ஆனால் பெரும்பாலானோர் தொடர்ந்து சிகிச்சைக்கு வருவதில்லை. சில நாள்களில் அவர்களே சிகிச்சையை நிறுத்திக்கொள்கின்றனர். சிகிச்சைகளையும் மாத்திரைகளையும் நிறுத்துவது குறித்து உங்கள் உளவியல் மருத்துவர்தான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவருக்கு முழு ஒத்துழைப்பு தந்து சிகிச்சை பெற்றால், அதிகபட்சமாக ஓராண்டுக்குள் உங்கள் மனைவி தெளிவான மனநிலைக்கு வரலாம்".

அடுத்த கட்டுரைக்கு