கடந்த ஆண்டு 2019 டிசம்பர் மாதம் முதல் சீன தேசத்திலிருந்து உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்று இதுவரை குழந்தைகளைப் பெரிய அளவில் பாதிக்காமல் விட்டு வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டாலும், அது மிகவும் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துவதில்லை என்பதை புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக லட்சத்தில் இரண்டு அல்லது மூன்று என்ற அளவில் குழந்தைகளுக்கு மூளையிலிருந்து முழங்கால்கள் வரை உடலிலுள்ள எல்லாப் பகுதிகளையும் பாதிக்கக்கூடிய PMIS (Paediatric multi system Inflammatory Syndrome) என்ற நோயானது உலக அளவிலும் இந்திய அளவிலும் தமிழகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, மதுரையில் சில குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், உயிரிழப்புகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.
கொரோனா தொற்று பாதித்த குழந்தைகளுக்கு இரண்டு மூன்று வாரங்கள் கழித்து இந்த நோய் தாக்குவதாகக் கூறப்படுகிறது. 5 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் இதனால் பாதிப்படைகின்றனர்.
PMIS நோய் எப்படி வருகிறது?
எந்தக் கிருமி நம்மைத் தாக்கினாலும் உடனே அந்தக் கிருமிக்கு எதிராக நம் உடல் ஒரு போரைத் தொடங்குகிறது. அந்தப் போரில் அந்தக் கிருமியை அழித்து நம் உடலைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் வருங்காலத்தில் அதே கிருமித்தொற்று ஏற்படாத வகையில் உள்ளார்ந்த எதிர்ப்பு சக்தியையும் ஏற்படுத்துகிறது. இது போன்ற நோய் எதிர்ப்பு சக்தி முழுமையாக உருவாவதற்கு நோய் தாக்கியதிலிருந்து ஒரு மாதம் வரை ஆகலாம்.

இந்த எதிர்ப்பு சக்தியானது நோய்க்கு எதிராகப் போராடுவதோடு மட்டுமல்லாமல் சில நேரங்களில் அபரிமிதமாக நம் உடலில் உள்ள செல்களையே, கிருமியின் பாதிப்பு இருப்பதாக நம்பி அழிக்கத் தொடங்கும். விளைவு..? ஒவ்வாமை போன்ற பாதிப்பு உண்டாகிறது.
அது சருமம் தொடங்கி உணவுக்குழல், மூச்சுக்குழல், நுரையீரல், ரத்த நாளங்கள், இதயம், சிறுநீர்ப்பாதை, சிறுநீரகங்கள், நரம்புகள், மூளைவரை உடலில் எல்லாப் பகுதிகளையும் பாதிக்கும். அதன் காரணமாக, உடலில் ரத்த அழுத்தம் குறைந்து தீவிர சிகிச்சை தேவைப்படக்கூடிய அதிதீவிர உடல் அயர்ச்சி (shock) எனப்படும் நிலையை உண்டாக்குகிறது.
யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?
5 முதல் 20 வயது வரையுள்ளவர்களை பிம்ஸ் நோய் பாதிக்கலாம்.
ஏற்கெனவே கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்.
கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
கொரோனா எதிர்ப்பு சக்தி பரிசோதனை உறுதி செய்யப்பட்டவர்கள்.
நுரையீரல் நோய்கள், டைப்-1 சர்க்கரைநோய், உடல் பருமன் உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
மரபியல் ரீதியாக சில குழந்தைகள் இந்த நோய்க்கு எளிதில் இலக்காகும் அமைப்பைக் கொண்டிருக்கிறார்கள்.
சருமத்தில் தடிப்பு அல்லது சிவப்புத் திட்டுகள், கண்கள் சிவந்து போதல், உள்ளங்கைகள், பாதங்களில் வீக்கம், காய்ச்சல், உடல்வலி, சோர்வு, மூச்சுவிட சிரமம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சிறுநீர் பிரியாமல் இருத்தல், நெறி கட்டுதல், நினைவு தவறுதல், குழப்பமான நிலை, ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் அடைதல் போன்றவை பிம்ஸ் நோய்க்கான அறிகுறிகளாகும்.
சிகிச்சை சாத்தியமா?
கொரோனா நோய்த்தொற்று இல்லை என்று உறுதியாகி, வேறு எந்த நோய்த்தொற்றும் கண்டுபிடிக்கப்படாவிட்டால் அதை பிம்ஸ் நோய் என்றே கருதி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வதைப் போல பிம்ஸ் நோய் அறிகுறிகள் தென்பட்டால் ஆரம்ப நிலையிலேயே குழந்தையை சிகிச்சைக்கு உட்படுத்தினால் சரியான மருந்துகளின் மூலம் முழுமையான குணம் கிடைக்கும். அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மருத்துவமனைக்குச் சென்றால்தான் இதயத்தை பாதிக்கும் நிலைக்குச் செல்லாமல் காப்பாற்ற முடியும்.

இதயம், நுரையீரல் பாதிப்புடன் வந்த குழந்தைகள்கூட தீவிர சிகிச்சைப் பிரிவில் முழுமையான குணம் அடைவதற்கு 90 சதவிகிதம் வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து நான்கு வாரங்களுக்காவது மருத்துவருடைய தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
பெரும்பாலான குழந்தைகள் இந்த ஒவ்வாமையில் இருந்து மீண்ட பிறகு, பூரணமாக குணமடைந்துள்ளனர். இருப்பினும் சில ஆண்டுகள் அவர்களைக் கண்காணித்த பின்னரே பிம்ஸ் நோயின் நீண்டகால பாதிப்புகள் குறித்து தெரியவரும்.
தடுப்பது எப்படி?
கோவிட்-19 தொற்று வராமல் தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவற்றைப் பின்பற்றுவதைத் தொடர வேண்டும். கொரோனா தொற்று வந்தவரிடம் இருந்து குழந்தைகளை விலக்கி வைக்க வேண்டும். குழந்தைகளுக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த நோய் ஒரு குழந்தையிடமிருந்து மற்ற குழந்தைக்குப் பரவாது.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!
குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஒருமுறை ஏற்பட்டிருந்தாலோ வீட்டில் யாராவது ஒருவருக்கு ஏற்பட்டிருந்தாலோ குழந்தைகளை அதிக கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகளை குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டும். பெருந்தொற்று காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் தங்கள் பொருள்களைப் பரிமாறிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு சாதாரண இருமல், காய்ச்சல் தொடங்கி எந்த அறிகுறிகளையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதுதான் நாம் கற்றறிய வேண்டிய பாடம்.