Published:Updated:

Doctor Vikatan: 4 வருடங்களுக்கு முன் அபார்ஷன்; மீண்டும் கர்ப்பமடைய முடியவில்லை; தீர்வு என்ன?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

என் வயது 34. திருமணத்துக்கு முன்பான காதலில் ஒருவரை நம்பி கர்ப்பமானேன். காதலித்தவர் சொன்னதால் அபார்ஷன் செய்தேன். பிறகு, வேறொருவருடன் திருமணமானது. 4 வருடங்களாகியும் குழந்தை இல்லை. முதல் கர்ப்பத்தைக் கலைத்தால் கருக்குழாய் அடைப்பு ஏற்படலாம், அடுத்து கருத்தரிப்பது சிரமமாகலாம் என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

மருத்துவர் ஸ்ரீதேவி
மருத்துவர் ஸ்ரீதேவி

பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி.

``ஒரு வருடத்துக்கு 15 மில்லியன் கருக்கலைப்புகள் செய்யப்படுகின்றன. அதாவது 1,000 பெண்களில் 47 பேர் அபார்ஷன் செய்துகொள்கிறார்கள். இதில் 80 சதவிகித அபார்ஷன், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மருந்துகளின் உதவியோடு மருத்துவமனைகளில் செய்யப்படுபவை. 14 சதவிகிதம் `சர்ஜிகல் அபார்ஷன்' முறையில் அதாவது மயக்கம் கொடுக்கப்பட்டு, டி அண்டு சி முறையில் செய்யப்படுபவை.

5 சதவிகிதம் பேர் தகுதியற்ற, போலி மருத்துவர்களிடம் ஆபத்தான முறையில் அபார்ஷன் செய்துகொள்கிறார்கள். இதை `Unsafe Abortions' என்று சொல்கிறோம். பாதுகாப்பாகச் செய்யப்படுகிற அபார்ஷனில், எதிர்காலத்தில் குழந்தையின்மையைப் பாதிக்கும் வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்பில்லை.

கரு ஓரளவு வளர்ந்த பிறகு, அபார்ஷன் செய்யப்பட்டால் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். கரு முழுவதுமாகக் கலையாமல் உள்ளே தங்கி, இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தலாம். இதனால் அரிதாக உடலின் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படலாம். அபார்ஷனில் கர்ப்பப்பையில் ஏதோ புண் ஏற்படுகிறது என்றால் எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆனாலும் அது அரிதானது. அடிக்கடி டி அண்ட் சி செய்வதாலும், நோய்த்தொற்று அல்லது முழுமையாக வெளியேற்றப்படாத கரு போன்றவற்றின் காரணமாகச் சிலருக்கு கர்ப்பப்பையின் உள்ளே உள்ள எண்டோமெட்ரியல் திசுவில் தழும்பு ஏற்படும்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash
Covid Questions: அடுத்த மாதம் பிரசவம்; பிறக்கும் குழந்தைக்கு தொற்று வராமல் எப்படிப் பாதுகாப்பது?

இப்படித் தழும்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தொடர் கருச்சிதைவு ஏற்படலாம், குழந்தை தங்காமல் போகலாம். தழும்பு ஏற்படும் இந்தப் பிரச்னைக்கு ஆஷர்மேன்ஸ் சிண்ட்ரோம் (Asherman's syndrome) என்று பெயர்.

அறுவைசிகிச்சையின் மூலம் அந்தத் தழும்பை நீக்குவதன் மூலம் பிரச்னையை சரிசெய்ய முடியும். ஆனால், சிலருக்கு கிளமேடியா (Chlamydia), கொனோரியா (Gonorrhea) போன்ற பால்வினை நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, கருக்குழாய்களில் அடைப்பு உண்டாகி, அதன் விளைவாக எதிர்காலத்தில் கர்ப்பம் தரிப்பதில் சிக்கல் உண்டாகலாம். அதற்காக அபார்ஷன் செய்துகொள்கிற எல்லோருக்கும் இந்தத் தொற்றும், கருக்குழாய் அடைப்பும் ஏற்படும் என்று அர்த்தமில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அடிக்கடியும், பாதுகாப்பற்ற முறையிலும் செய்யப்படும் அபார்ஷன் மற்றும் மருத்துவர் பரிந்துரைத்த ஆன்டிபயாடிக்குகளை முறையாக எடுத்துக்கொள்ளாததன் விளைவாகச் சிலருக்கு இப்படி ஏற்படலாம். உங்கள் விஷயத்தில் குழந்தையின்மைக்கான பிற காரணங்களையும் ஆராய வேண்டும். ஏஎம்ஹெச் (AMH) எனப்படும் `ஆன்டிமுலேரியன் ஹார்மோன்' அளவுகளைப் பார்க்க வேண்டும். அதில் உங்களுடைய கருத்தரிக்கும் திறனைத் தெரிந்துகொள்ள முடியும்.

வயது ஆக ஆக கருத்தரிக்கும் திறன் குறையும் என்றாலும் 34 வயதில் அது பெரிய அளவில் குறையாது. எனவே, மருத்துவரைக் கலந்தாலோசிப்பது சிறந்தது. அண்மைக்காலத்தில் உடல் பருமன் அதிகரித்தது, சிகரெட், போதை மருந்துப் பழக்கம் போன்ற பழக்கங்களுக்கு உள்ளானது என ஏதேனும் நடந்திருந்தாலும், அவையும் கருத்தரிக்கும் திறனைப் பாதிக்கும். பால்வினை நோய்த்தொற்று ஏதும் இருக்கிறதா, அடிவயிற்றில வலி, வெள்ளைப்படுதல், கருக்குழாய் அடைப்பு போன்றவை இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும். அடுத்து உங்கள் கணவரின் வயது, அவரது உடல்நலம் போன்றவற்றையும் பார்க்க வேண்டும். அவருக்கு விந்தணுப் பரிசோதனை செய்ய வேண்டும்.

கர்ப்பிணி (Representational Image)
கர்ப்பிணி (Representational Image)
உயிரையே பறிக்குமா கருக்கலைப்பு மாத்திரைகள்? சென்னை அதிர்ச்சி சம்பவமும் எச்சரிக்கையும்!

முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து மேற்குறிப்பிட்ட தழும்பு இருக்கிறதா, நார்மலாக இருக்கிறதா என்று பாருங்கள். `டியூபல் பேட்டன்சி டெஸ்ட்' எனப்படும் ஹெச்.எஸ்.ஜி டெஸ்ட் மூலம் கருக்குழாய்களில் அடைப்பிருக்கிறதா எனக் கண்டறியலாம். எல்லா டெஸ்ட்டுகளும் நார்மல் என்றால் பயப்பட வேண்டாம். அதே நேரம் முந்தைய அபார்ஷனின் விளைவால்தான் கருத்தரிக்கவில்லை என நினைத்துக்கொண்டிருக்காமல், உடனடி மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் தொடங்கப்பட வேண்டியது அவசியம்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு